Sunday, November 22, 2015

சாதி : தொகை நிலையும் தொகா நிலையும்

தங்கவடிவேல் மாஸ்ரரின் வாக்குமூலத்தைச் சாட்சியாக முன்வைத்த பகுப்பாய்வு


செல்லத்துரை சுதர்சன்“மனுபுத்திரனே இறைவன் உன்னிடத்தில் இருந்து எதனை எதிர் பார்க்கிறான். நீதியையும் நேர்மையையும் தவிர வேறு எதனை எதிர்பார்க்கிறான்” (மீகா 6-8)


எனக்கு இன்றும் நினைவிருக்கிறது, அந்த வெள்ளைச் சுவரும்; நீலநிறத்தால் அதில் எழுதப்பட்ட வாசகமும். நான் பிறந்த ஊரான வலிகாமத்து வசாவிளான் கிராமமும் அதன் இயற்கையெழிற் புடைவையும் அதற்குள் இருந்த மக்களின் இயற்கையான சமயவாழ்வும் இப்போதும் என்னை வியப்பில் ஆழ்த்துபவை. மனிதனின் - சமூகத்தின் உண்மையான இதயத்தைத் தரிசிக்கத் தொடங்கியது இங்கிருந்துதான். எங்களூர்ப் பெரிய கோயில் எனது கவிதைகளில் வரும் மானம்பிராய்ப் பிள்ளையார் கோயில்தான்;. நினைவு தெரிந்த நாளிலிருந்து நான் பார்த்த முதலாவது பெரிய கோயில் அதுதான். அவ்வாலய இடதுபுற வெள்ளைச் சுவரில் நீல நிறத்தால் பெரிதாக எழுதிய வாசகம் இதுதான். “இவ் ஆலயம் ஊர்ப் பொது”.

ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளையின் ஊர் என்பதால் எங்கள் ஊரில் இயல்பாகவே ஒருமதிப்பு இருந்தது. அந்த மதிப்பை ஊர்மேல் பக்தியாக வளர்த்தது கமமும் கல்வியும் கலையுமாக வாழும் மனிதர்கள் எழுதிய இந்த வாசகம். இளைஞர் முதல் முதியவர்வரையும் ஒற்றுமையாக இதனை எழுதினார்கள் என்றும் ஆலயத்துக்கு எல்லோரையும் வருமாறு எவ்விடமும் சென்று அழைத்தார்கள் என்றும் விழாவில் உபயம்கொள்ளுமாறு வேண்டினார்கள் என்றும் ஆலயப் பெரிய கும்பாபிசேகத்தின்போது ஊர் இளைஞர்கள் ஆலயத்துக்குத் தேவையான பொருட்களை மக்களுக்கு வழங்கி அவற்றை ஆலயத்துக்கு வழங்கும்படி கூறினார்கள் என்றும் எனது ஆச்சியும் அம்மாவும் மற்றும் ஊராரும் பெருமையோடு கூறியதைக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் “இறைவன் அனைத்து உயிர்களுக்கும் மேலானவர்”, “அனைவரும் இறைவனின் குழந்தைகள்”; என்றெல்லாம் சிறுவயதில் ஊட்டப்பட்டதால் “இறைவன் உறையும் ஆலயமும் பொதுவானது” என்பது எழுதியா புரியவேண்டும்? ஓர் ஆலயச்சுவரில் “இவ் ஆலயம் ஊர்ப் பொது” என்று எழுதப்பட வேண்டியதன் அவசியம் என்ன? எனப் பல கேள்விகள் என்மனதில். அவ் ஊரவர்கள் எழுபதுகளின் முற்பகுதியில் இவ்வாசகம் எழுதப்பட்டது என்று இன்று கூறுகின்றனர். கற்ற இளைஞரும் கமம் செய்யும் விவசாயிகளும் பல்தொழில் மாந்தரும் பெண்களும் சேர்ந்துதான் இந்த ஒரு வாசகத்தை எழுதினார்கள் என்றால் அது உங்களுக்கு நம்புவதற்குச் சற்றுச் சிரமமாகவிருக்கும். ஆனால் உண்மை அதுதான். சமூகப்போராட்டத்தின் வரலாறு எழுதப்படுமளவிற்குச் சமூக ஒற்றுமையின் வரலாறு அதிகம் எழுதப்படுவதில்லை. அறுபதுகளின் பிற்பகுதியில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற சமூக எழுச்சிப் போராட்டங்களின் அடிப்படை உண்மையை உணர்ந்த எம் ஊரவர்கள் சாதிவேறுபாடற்று அன்போடு ஒற்றுமையாக எவ்வித பிரச்சினையும் இல்லாமல் எழுதிய வாசகம்தான் இது என்பதற்கு அப்பால், சமூகவிடுதலைப் போராட்டங்களின் விளைவாக, சமய வேதாகமங்களைவிடவும் சமூகமேன்மைக்கு அவசியமான மகா வாக்கியமாக இது துலங்கியதுதான் உண்மை. வேதாகமங்களைவிடவும் மக்கள் சமுதாயத்திற்குப் பொதுவுடைமை வேதம்தான் அவசியம் என்பதையும் அதனை ஒப்புக்கொண்ட “நவீன சமய வெளி”ச் சுவரையும் காணும்போதுதான் சமயம் சமூகத்திற்கானது என்ற அதியுண்மை அதிகம் உறுதிப்படும்.

சங்ககாலக் கணியன்பூங்குன்றனாரின் “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற வாசகத்தைவிடவும் யாழ்ப்பாணச் சமூகவரலாறு அறிந்தோர்க்கு யாழ்ப்பாணத்தில் “இவ் ஆலயம் ஊர்ப் பொது” என்ற வாசகத்தின் சமூக வரலாற்று முக்கியத்துவமும் மேன்மையும் சொல்லாமற் புலப்படும். நான் பிறந்த கிராமம் நவீன பூங்குன்றர்களாலும் பூங்குன்றிகளாலும் நிறைந்துவழிந்தது. நான் பிறந்த கிராமம் மட்டுமல்ல இன்று யாழ்ப்பாணத்தில் ஊர்ப் பொதுவான ஆலயங்கள் இருக்கும் அனைத்துக் கிராமங்களுமே நவீன பூங்குன்றர்களும் பூங்குன்றிகளும் நிறைந்தவைதாம்.
யாழ்ப்பாணத்தில் தமது சொந்த ஆச்சியைத் தெரியாதவர்கள் ஆயிரம்பேர் இருக்கலாம். ஆனால் ஆறுமுகநாவலரைத் தெரியாதவர்கள் ஒருவர்கூட இருக்கமுடியாது. தெரிதல் வேறு. அறிதல் வேறு. அவர் உலகில் அறியப்பட்டதும் அறிவிக்கப்பட்டதும் ஒரு புனிதராக. இன்னும் கூறுவதானால், “ஒளிவட்டம் பொருந்திய ஐந்தாங் குரவராக” “நவீன இந்து மதச் சீர்திருத்தவாதியாக” “சமூக சமய மறுமலர்ச்சியாளராக” எல்லாம் யாழ்ப்பாண மேட்டுக்குடியினர் எனக்கருதுவோர் மோடிப்படுத்தப்பட்ட நாவலரையே அறிவிப்புச்செய்தனர். மொழி நவீனத்துவத்திலும் இலக்கிய வளர்ச்சியிலும் நாவலரின் பணி எவ்வளவுக்கு நவீனமானதும் முற்போக்கானதுமாக அமைந்ததோ அதேயளவிற்குச் சமூக மறுமலர்ச்சியிலும் சமயச்சீர் திருத்தத்திலும் பழைமைத் தன்மையானதும் பிற்போக்கானதுமாக அமைந்தது. இதனை அவரது நூல்களிலும் அவர் பற்றிச் சமூகவியல் மற்றும் அறிவியல் நோக்கிலும் எழுதப்பட்ட நூல்களிலும் தெளிவாகக் காணமுடியும். சமயம் மற்றும் சமூகம் பற்றிய அவரின் பதிவுகள் சிலவற்றை இங்கே குறிப்பிட்டு விளக்கலாம்.

“சிவப்பிராமணர்கள் கர்ப்பக்கிருகத்திலும்… பிராமணர்கள் அர்த்த மண்டபத்திலும் சத்திரியர் மகாமண்டபத்திலும் வைசியர் இடபத்திற்கு முன்னும் சூத்திரர் இடபத்திற்குப் பின்னும் நின்று அர்ச்சிக்கக் கடவர்”1 (சிவாலய தரிசன விதி – விதி எண்: 20) “புலைச்சாதி நந்தன் வழிபட மறைத்த நந்தி” எனும் பழங்கதையை நினைவூட்டுவோர்க்கு, ஆலயத்தினுள் எவர் எவ்விடத்தில் நின்று வழிபட வேண்டும் என விதிவகுக்கும் நாவலரது ‘சூத்திரர் இடபத்திற்குப் பின்னிற்க வேண்டும்’ எனக் கூறும் கூற்றில் “சூத்திரர்” ஆக எச்சாதியினரைப் பொருள் கொள்கிறார் என்பதைப் புரிந்து கொள்வது கடினமல்ல. “போசன பந்திக்கு யோக்கியர் யாவர்? சம சாதியாராயும் சிவதீட்சை பெற்றவராயும் நியமாசாரமுள்ளவராயும் உள்ளவர்”2(சைவ வினா விடை – நித்தியகருமவியல்:264)
“போசனம் செய்வதற்குரிய தானம்(இடம்) யாது? வெளிச்சம் உடையதாய்ப், பந்திக்கு உரியரல்லாதார் புகப்பெறாததாய்க் கோமயத்திலே மெழுகப்பட்டதாய் உள்ள சாலை” 3 (சைவ வினா விடை – நித்தியகருமவியல்:265)
“போசனம் பண்ணும் பொழுது செய்யத்தகாத குற்றங்கள் எவை? ….நாய்,பன்றி, கோழி, காகம், பருந்து, கழுகு என்பவைகளையும் புலையர், ஈனர், அதீட்சிதர், விரதபங்கமடைந்தவர், பூப்புடையவள் என்பவர்களையும் பார்த்தல்…”4(சைவ வினா விடை – நித்தியகருமவியல்:270)
மேற்குறித்த மூன்று கூற்றுக்களும் சமபந்தி போசனம் பற்றிய நாவலரின் பிற்போக்குப் பார்வைகள். சமசாதியோடு மட்டும் போசனம் செய்யவேண்டும் எனக் கூறும் நாவலர் கூற்றில் பந்தியில் சம ஆசனத்தைத் தவிர்த்து, மேட்டுக்குடி வெள்ளாளர்களைக் காப்பாற்றவே காப்பு நூல்கட்டுகிறார் என்பது சொல்லாமலே புலப்படுகிறது. இரண்டாவது கூற்றில் “பந்திக்கு உரியரல்லாதார்”(தாழ்ந்த சாதியினர்) எனக் கூறுவதிலிருந்து மேட்டுக்குடி வேளாளர்களுக்கு மட்டுமே சைவ வினா விடையை எழுதியதைச் சுலபமாகக் கண்டு கொள்ளலாம். மூன்றாவது கூற்று நாய், பன்றி, கோழி, காகம், பருந்து, கழுகு என்பவற்றுடன் புலையர் முதலிய சாதிகளைச் சமனாகக் கருதும் நாவலரது சாதிய மனத்தையும் பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பாத பண்பற்ற மனித நடத்தையையும் காட்டுகிறது.

“பத்திர புஸ்பம் எடுக்க யோக்கியர் ஆகாதவர் யாவர்? தாழ்ந்த சாதியர், அதீசிதர், ஆசௌசமுடையவர்…முதலானவர்”5(சைவ வினா விடை – நித்தியகருமவியல் : 287)
ஆலயத்துக்கு மலர் கொய்யத் தகுயற்றவர்களாகத் தாழ்ந்த சாதியைக் கருதும் நாவலரின் கூற்றில் இருக்கும் உண்மை என்னவெனில், தாழ்ந்த சாதியினர் தீண்டிக் கொய்த மலரை ஆலய உரிமையாளர்களான மேட்டுக்குடிகளோ பிராமணர்களோ தீண்டிவிடக் கூடாது என்னும் தீண்டாமை நோய்தான். இதனைப் புரிந்து கொண்டால் இனிவரும் கூற்றைச் சுலபமாகப் புரிந்து கொள்ளலாம். “நியமகாலத்திலன்றி இன்னும் எவ்வெப்பொழுது ஸ்நானஞ் செய்தல் வேண்டும்? …இழிந்த சாதியாரும் புறச்சமயிகளும்…… தீண்டினும் உடுத்த வஸ்திரத்துடனே ஸ்நானஞ் செய்வது அவசியம்” 6(சைவ வினா விடை – நித்தியகருமவியல் : 255)

இழிந்த சாதியாரும் (வெள்ளாளர் அல்லாதவர்) புறச்சமயிகளும் (கிறிஸ்தவர் மற்றும் இஸ்லாமியர்) தீண்டினால் உடுத்த வஸ்திரத்துடனே ஸ்நானஞ் செய்தல் பற்றிய கூற்றிலிருந்து நாவலரின் மூடத்தனமான சாதிப் பாதுகாப்பு மனோநிலை புலனாகிறது.
“ஒளிவட்டம் பொருந்திய ஐந்தாங் குரவராக” “நவீன இந்து மதச் சீர்திருத்தவாதியாக” “சமூக சமய மறுமலர்ச்சியாளராக” யாழ்ப்பாண வெள்ளாள மேட்டுக்குடிகளால் உலகுக்குப் படம்போட்டுக் காட்டப்பட்ட இந்தப் பெருமானாரின் சமய மற்றும் சமூக நோக்குகள் இவைதாம். கட்டுரையின் விரிவஞ்சியே நிறைய எடுத்துக்காட்டுக்கள் தரப்படவில்லை. நாவலர் பெருமானாரின் கண்களிலே ஒரு கண் மட்டுமே தமிழ்ப் பார்வை கொண்டது என்பதையும் மறுகண் மேட்டுக்குடிக்கேயான தீண்டாமைப் பார்வை கொண்டது என்பதையும் அவரது கருத்துக்கள் உணர்த்தி நிற்கின்றன.
இப்போது பின்நோக்கிப்பார்த்தால் “இவ் ஆலயம் ஊர்ப் பொது” என்ற வாசகத்தை எழுதிய கற்ற இளைஞர், கமம் செய்யும் விவசாயிகள், பல்தொழில் மாந்தர், பெண்கள் ஆகியோரைவிடவும் சமய மற்றும் சமூக (தமிழ்மொழி தவிர்ந்த) வரலாற்று நிலையில் நாவலர் மிகவும் அவலத்துக்குரிய பாத்திரமாகவே காட்சியளிக்கிறார். இவ்வாறு நாவலருக்குச் சோடிக்கப்பட்ட கதாநாயகத் தன்மையை நாவலரது வாக்குமூலத்தைக் கொண்டு தோலுரிக்கும்போதுதான் நாவலரின் உண்மைத்தன்மையும் அவரை யாழ்ப்பாணத்தின் அடையாளமாகத் திணிக்க முயன்ற முயலுகின்றவர்களின் உண்மைத் தன்மையும் வெட்ட வெளிச்சமாவதுடன் உண்மையான சமய மற்றும் சமூக மறுமலர்ச்சியாளர்களை அறியவும் அடையாளங்காணவும் முடியும்.

நாவலரைவிடவும் முக்கியத்துவமான சமய மற்றும் சமூகம்சார் மேய்ப்பர்கள் யாழ்ப்பாணச் சூழலில் வரலாற்றுநிலையில் உயர்நிலைப் பாத்திரங்களாக விளங்குகின்றனர். இவர்கள்தாம் ஒவ்வொரு சாதிக்குழுமமும் தத்தம் வீரராகக் கொண்டாடத் தகுதி பெற்றவர்கள். இவ்வாறு ஒடுக்கப்பட்ட சாதிக்குழுமம் என்று கருதப்பட்டவற்றை வாழ்விக்க வந்தவருள் மாட்சிமையுடன் மறைந்தவர் சிலர். வாழ்பவர் சிலர். மறைந்தும் வாழ்பவருள் ஒருவர்தாம் தங்கவடிவேல் மாஸ்ரர் என்ற ஆளுமையாளர்.
வடமராட்சியில் குறிப்பாக உடுப்பிட்டியில் தங்கவடிவேல் மாஸ்ரர் ஆசிரியராகவும் சமூகப் போராளியாகவும் பெரும்பாலும் நன்கறியப்பட்டவர். தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரியில் அவர் கணித ஆசிரியர் எனினும் எங்கள் வகுப்புக்குத் தமிழ் ஆசிரியர் என்பது மட்டுமே அப்போது எமக்குத் தெரிந்தவிடயம். தங்கவடிவேல் மாஸ்ரர் வகுப்பறையில் ஆடுவார், பாடுவார், நடிப்பார், வகுப்பறையையே ஆட்டிவைப்பார், நகைச்சுவை பேச்சில் இருக்கும், தெளிவான உச்சரிப்பு, அலட்டல் இல்லாத ஆசிரியர்களில் அவரும் ஒருவர். ஒரு பாடத்தையே ஆற்றுகைக் கலையாக மாற்றும் ஆசிரியக் கலைஞராக அவர் இருந்தார். பெரும்பாலும் எங்கள் வகுப்பிற்கு வெள்ளைசேட், வெள்ளை வேட்டியுடன்தான் வருவார். சிலவேளை நீளக் காற்சட்டையுடன் சேட். எளிமையான மனிதர். யுத்த சூழ்நிலை காரணமாக வியாகேசு அண்ணையின் பீக்கோன் கல்வி நிலையத்தின் ஓலைக்கொட்டிலே எமது வகுப்பறையாக அமைந்தது. எங்களுக்கு அவர் பாடிக்காட்டி எங்களையும் பாடவைத்த முதல் பாடல் “துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ” என்பதாகும்.

தங்கவடிவேல் மாஸ்ரரிடம் எல்லோரும் மிகுந்த மரியாதையுடன் பழகுவார்கள். அவர் இல்லாத நேரத்தில்கூட அவர் பற்றிய அன்பான மதிப்புடன்கூடிய உரையாடல்கள் இருக்கும். ஓய்வுபெற்ற ஆசிரியரிலிருந்து கடைக்காரர்வரையும் அவரை அன்போடு நினைவுகூருவர். சொலமன் மாஸ்ரர், நீலகண்டன் மாஸ்ரர், தில்லையம்பலம் மாஸ்ரர், சிவானந்தம் மாஸ்ரர் ஆகிய முற்போக்குச் சிந்தனை மிக்க நல்லாசிரியர்களின் நெஞ்சுக்கு மிக நெருக்கமான நண்பராகவும் அவர் இருந்தார். அனைவரின் அன்பிற்குப் பாத்திரமாகவும் எப்படி ஓர் ஆசிரியர் இருக்க முடியும்? கற்பித்தல் ஊழியம் செய்தமைக்காக மட்டும் இத்துணை அன்பும் பாராட்டும் நிச்சயம் அவருக்குக் கிடைத்திருக்காது. சமகாலக் கணியன்பூங்குன்றனாராக நம் மத்தியில் அவர் வாழ்ந்த கொள்கைப் பற்றுள்ள வாழ்வுதான் அவர் எல்லோர் மனதிலும் சரியாசனம் போட்டமரக் காரணமாகியது. இன்னும் குறிப்பாகச் சொல்லப்போனால் சாதியின் பேரால் வஞ்சிக்கப்பட்டு வருத்தப்பட்டுப் பாரஞ்சுமப்பவர்களின் பிரதிநிதியாகவே அவர் தம்மை அடையாளம் காட்டினார். தங்கவடிவேல் மாஸ்ரர் தோழர் சண்முகதாசனின் நினைவுக் கூட்டம் ஒன்றில் உரையாற்றுகையில் தன்னைப் பின்வருமாறு அறிமுகப்படுத்தினார்.
“நான் தாழ்த்தப்பட்ட சாதி என்று கருதப்பட்ட அந்தச் சாதியைச் சார்ந்தவன் என்பதால் சொல்கிறேன். அந்தச் சாதி காலங்காலமாய்ப்பட்ட விபரிக்கமுடியாத துன்பங்களைச் சுமந்து அந்தச் சுமையைத் தாங்கமுடியாது மிகவும் துன்புற்றுப்போன சமூகத்தில் இருந்து ஒருவனாகப் பேசுகிறேன்.”7
உலகில் தனது அடையாளத்தைச் சாதியின் பெயரால் வருத்தப்பட்டுப் பாரஞ் சுமப்பவர்களின் பிரதிநிதியாகவே வாழ்நாள்;பூராவும் நிறுவிக்கொண்டவர்தான்; தங்கவடிவேல் மாஸ்ரர். இது ஆசிரியத் தொழிலைவிட மேலானது. வகுப்பறைக் கற்பித்தல் என்ற ஊழியத்தைவிடவும் சாதியத்தால் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு மேய்ப்பராக இருந்து, துயரம் சுமப்பவர்களுக்கு வழியும் ஜீவனும் ஒளியுமாக இருந்து யாதும் ஊரே யாவரும் கேளீர் என்ற சங்க காலக் கவிஞன் கணியன்பூங்குன்றனாரின் கவிதைத் தொடரின் மானுட வடிவமாகச் சமகாலத்தில் தன்னை அடையாளங்காட்டி உயிர்ப்போடு வாழ்ந்த நவீன கணியன் பூங்குன்றனார்தான் தங்கவடிவேல் மாஸ்ரர்.
‘காத்தார்’ கம்யூனிஸ்ட் கார்த்திகேசன் ஒருமுறை பின்வருமாறு கூறினார். “தமிழர்கள் எல்லோரும் ஒன்றல்ல. அவர்களில் சுரண்டுபவனும் இருக்கிறான் சுரண்டப்படுபவனும் இருக்கிறான். சாதிவெறியனும் இருக்கிறான். சாதி ஒடுக்குமுறைக்குள்ளாகுபவனும் இருக்கிறான். இவ்வாறு பல வடிவங்களில் தமிழர்கள் ஒன்றுபடமுடியாது பிரிக்கப்பட்டுள்ளனர். எனவே அடக்கியொடுக்கப்பட்ட சுரண்டப்பட்ட மக்கள் அவற்றுக்கெதிராகப் போராடவேண்டும்”.8 கார்த்திகேசனின் இக்கூற்றுத் தொடர்பாகத் தமிழரசுக்கட்சி செல்வநாயகம் மிகுந்த கடுப்புப் கொண்டதாகச் “செல்வநாயகம் விரும்பாத இரண்டு தமிழர்களும் கார்த்திகேசனின் தீர்க்கதரிசனமும்”9 எனும் கட்டுரையில் சண்முக சுப்பிரமணியம் விரிவாகக் குறிப்பிடுகிறார். இந்த நிலையில் தோழர் சண்முகதாசனைத் தன் கொள்கைவழித் தலைமையாக ஏற்றுக்கொண்டு சாதிஒடுக்குமுறைக்கு உள்ளான தமிழர்களில் ஒருவராக இருந்து, சாதிவெறியர்களுக்கு எதிராகப் போராடியவர்களில் தங்கவடிவேல் மாஸ்ரரும் ஒருவர்.
24.04.1943இல் தொடங்கப்பட்ட சிறுபான்மைத் தமிழர் மகாசபை 31.08.1955இல் நடத்திய 12ஆவது மாநாட்டில் வரவேற்புரை நிகழ்த்திய ஆ.ம.செல்லத்துரை தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மறுக்கப்படும் உரிமைகளையும் தீண்டாமை நடைமுறைகளையும் தனது உரையில் பின்வருமாறு பட்டியலிட்டுக்காட்டினார்.10

1. கோயில்களுக்குள் செல்லமுடியாது.
2. தேனீர் கடைகளுக்குள் செல்லமுடியாது.
3. போசனசாலைகளுக்குள் புகமுடியாது.
4. சலூன்களில் மயிர் வெட்டமுடியாது.
5. சலவைத் தொழில் நிலையங்களில் உடைகள் கழுவமுடியாது.
6. பல பாடசாலைகளில் கல்வி கற்கமுடியாது.
7. சைவப் பாடசாலைகளில் கல்வி கற்பிக்கமுடியாது.
8. சில சுடலைகளில் பிரேதம் எரிக்கமுடியாது.
9. சில கிராமங்களில் பெண்கள் சேலை, மேற்சட்டை உடுக்கமுடியாது.
10. சில கிராமங்களளில் பெண்கள் தாலிகட்ட முடியாது.
11. சில கிராமங்களில் செருப்புப் போடமுடியாது.
12. பொதுக் கிணறுகளில் தண்ணீர் அள்ளிக் குடிக்கமுடியாது.
13. கொண்டாட்டங்களுக்கு மேளம் அடிக்க முடியாது.
14. தாம் விரும்பியவர்க்கு வாக்குப்போட முடியாது.

இத்தகைய கொடுமைகளை அழிப்பதற்காகத் தோழர்கள் சு.வே.சீனிவாகசம், நா.சண்முகதாசன், கே.டானியல், சி.கா.செந்திவேல் முதலிய பல சமூகப் போராளிகள் நடத்திய சாதியத்திற்கெதிரான போராட்டங்களில் ஒரு துடிப்புமிக்க சமூகப் போராளியாக இணைந்துகொண்டவர்தான் தங்கவடிவேல் மாஸ்ரர். மேற்குறிப்பிட்ட அடக்குமுறைக்கு எதிரான போராட்டங்களில் கொள்கைப் பற்றோடும் அர்ப்பணிப்போடும் ஈடுபட்டவர், அவர்.
மார்க்சிய கருத்துக்களின் தாக்கம் பரவலாகச் செல்வாக்குப் பெற்ற அப்போதைய இலங்கைச் சமூகத்தில்; சாதிய அடக்குமுறைக்கெதிரான விடுதலைப் போராட்டத்தை மார்க்சிய தத்துவ வழிநின்று ஏற்றுக்கொண்டவர், மாஸ்ரர். மார்க்சின் இயங்கியல் தத்துவ விதிகளுக்கு அமைவாகச் சமூக அசைவைக் கூர்ந்து நோக்கும் திறன் படைத்தவர் மாஸ்ரர் என்பதை அவரது உரைகள் எடுத்துக்காட்டின. அவர் கூறினார், “நாங்கள் கற்ற மார்க்சிய தத்துவம் சொல்லித் தருவது என்ன,? தொடர்ச்சியான சமூகப் போராட்டந்தான் எங்களுக்கு உண்மையான விடிவைப் பெற்றுத்தரும்”.11 சாதிய அடக்குமுறைக்கெதிரான போராட்டத்தில் இறக்கும்வரை அவர் ஓய்ந்துவிடவில்லை. தொடர்ச்சியாகப் போராடியவர். மரணம் வரையும் போராடிய மகத்தான போராளி அவர்.

அடிமைத் தனத்திற்கு எதிரான அரசியல் என்பது வெறும் வாய்ச்சொல் வீரமாக இருக்கக்கூடாது என்பதில் அவர் இறுக்கமாக இருந்தார். ஈழத்தில் கோட்பாட்டுக் கொமினிசவாதிகள் சிலர் இருக்கிறார்கள். தலைநகரங்களில் ஓரிருவர் இருக்கிறார்கள். அவர்கள் ‘மேடும் பள்ளமும்’ உள்ள சமூகத்தைப் புரிந்து கொள்வதில்லை. அவர்களால் சாதிவெறியர்களாக வாழ்ந்து சமரசம் பற்றி வாய்கிழியப் பேசும் ஈருடகவாழிகளைக்கூட அடையாளங்காண முடிவதில்லை. அவர்களால் ‘புதிய உதயம்’ எதுவும் எந்தச் சமூக மாற்றமும் எந்த ‘நிமிர்வு’ம் இடம்பெறப்போவதில்லை. தம்மைப் பற்றித் தாமே கட்டுரைகள் எழுதுவிக்கும் இவர்களைக் ‘கால வெள்ளம்;’ அடித்துச் சென்றுவிடும். தேசிய கலை இலக்கியப் பேரவை சார்ந்தவர்களும் ஞானம் போன்ற ஓரிரு அமைப்புக்களும் தவிர, கல்வித்துறையிலும் இலக்கியத்துறையிலும் இருந்த இக் கொமினிசவாதிகளின் புரட்சி அவர்கள் கற்றுக்கொண்ட தத்துவ உலகுக்குள்ளேயே முளைவிடாது கருகிவிட்டது.


சு.வே.சீனிவாசகம், நா.சண்முகதாசன், கே.டானியல், சி.கா.செந்திவேல், எம்.சி.சுப்பிரமணியம், சி.சிவசேகரம் முதலியோர்தான் (எடுத்துக்காட்டுக்காகச் சில பெயர்கள் மட்டுமே கூறப்பட்டுள்ளன) ஈழத்தில் செயல்முறைக் கொமினிசவாதிகளாகவும் இருந்திருக்கின்றனர். இவர்களுள் பலர் சண்முகதாசனுடன் இணைந்து போராட்டம் நடத்தியவர்கள். அவர்களுள் தங்கவடிவேல் மாஸ்ரரும் ஒருவர். பொன்கந்தையாவின் மறைவிற்குப்பின்; சண்முகதாசனின் பாசறைப் போராளியாக, செயல்முறைக் கொமினிசவாதியாகத் தங்கவடிவேல் மாஸ்ரர் விளங்கினார், இயங்கினார்.
“தயவுசெய்து நீங்கள் நினைக்காதீர்கள். நாங்கள் வெறும் வாய்ப்பேச்சால் மட்டும் இந்த அரசியல் கல்வியைக் கற்றவர்கள் என்று. நாங்கள் செயல்மூலம் கற்றுக்கொண்டவர்கள். போராட்டம் என்பதைச் செயல்வடிவில் தருகின்றபோது அதற்கு விதிகள் இருக்கின்றன என்பதைச் சண் சொல்லித்தந்தார்”12 என்ற தங்கவடிவேல் மாஸ்ரர் கூறுவது இதனை மேலும் மெய்ப்பிக்கின்றது.
கோட்பாட்டுக் கொமினிசவாதிகளின் பலவீனத்தையும் தனது முன்னோடி சண்முதாசனின் முக்கியத்துவத்தையும் தங்கவடிவேல் மாஸ்ரர் பின்வருமாறு குறிப்பிட்டார். “அழியாத சாதியெனும் அந்தப் பொய்யை அழிக்கலாம் என்று சொன்ன கொமினிசவாதிகள் வாய்ச்சொல்லால் சொன்னார்களேயொழிய தத்துவங்களை விளக்கினார்களேயொழிய வேறெதுவும் செய்யவில்லை. செயல்முறையில் இதனை(சாதி) இப்படித்தான் விழுத்தமுடியும் என்று சொல்லித்தந்தவர் சண் என்பதை யாருமே மறுப்பதில்லை. இதை யாரும் இல்லையென்று சொல்லமுடியாது.”13
சாதிய ஒடுக்குமுறைப் போராட்டங்களில் தலைவர் சண்முகதாசன் அவர்களின் துணிவைத் தங்கவடிவேல் மாஸ்ரர் விதந்து போற்றுவார். ஈழத் தமிழர் வரலாற்றில் இதுவரை இத்தகைய துணிச்சலான, சாதிய ஒடுக்கு முறைக்கெதிரான ஒரு சமூகத் தலைவர் தோன்றவில்லை என்பது அவரின் முடிந்த முடிபு. அது உண்மையும்கூட “இலங்கையில் சிங்களவரை விடுவோம். முஸ்லிம்களை விடுவோம். தமிழர்களில் யாராவது ஒருவர் இவ்வளவு துணிச்சலாகப் பொலிசையும் அரசாங்கத்தையும் அவர்களது ஆயுதங்களையும் அடக்குமுறைகளையும் எதிர்த்துச் சாதியத்திற்கு எதிராகப் போராடினார்களா? சண் மட்டும்தான் அவ்வாறு செய்தார்”14 என்று மாஸ்ரர் கூறவது சண்முகதாசனைத் தனது கொள்கைவழித் தலைமையாக ஏற்றமைக்கான காரணத்தை மேலும் தெளிவிக்கிறது.
சாதி பற்றிய வரலாற்றுக் கண்ணோட்டம் அவரிடம் தெளிவாகவே இருந்தது. புராதன காலத்திலும் நவீன காலத்திலும் சாதிய அடக்குமுறைகளையும் சாதியத்தின் அழிக்கும் அரூபகரங்களையும் தெளிவாக அடையாளம் கண்டவர்களுள் தங்கவடிவேல் மாஸ்ரரும் ஒருவர். “புராண இதிகாச காலங்களில் இருந்து மனித நிலையில் தொற்றுவியாதி நோயாக விட்டுவிலகாமல் இன்றுவரை அநியாயம் செய்வது சாதி”15 என்று அவர் கூறினார்.
தமிழர் மத்தியில் புரைபோடிப்போன சாதீயத்தின் விஷவிதைகளை விதைத்தவர்களைத் தங்கவடிவேல் மாஸ்ரர் ‘கீழ்சாதி’ என்று குறிப்பிட்டார். “தமிழன் என்றோர் இனம் உண்டு. தனியே அதற்கோர் குணம் உண்டு. என்ன குணம்? உயர் சாதியின் கீழ்ச்சாதிக்குணம். எங்களை மனிதராகப் பார்க்கத்தெரியாத விலங்கு நடத்தையுள்ளவன் உயர்சாதியும் இல்லை, தாழ்சாதியும் இல்லை. கீழ்சாதி - விலங்குகள். மனிதன் மாதிரி வாழாதபடியால் அவர்கள் கீழ்சாதி அதாவது விலங்குகள்”16 என்று அவர் கூறுவது நோக்கத்தக்கது.
1966 ஒக்டோபர் 21இல் சுன்னாகம் சந்தையில் இருந்து சாதியத்திற்கெதிராக நடந்த ஊர்வலத்தில் பங்கெடுத்த போராளிகளில் தங்கவடிவேல் மாஸ்ரரும் ஒருவர். அப்போது மாஸ்ரர் பதுளையில் படிப்பித்துக்கொண்டிருந்தார். தனது மனைவிக்குச் சுகமில்லை என்று சொல்லிவிட்டு அந்தப் போராட்டத்தில் கலந்துகொள்வதற்காக யாழ்ப்பாணத்திற்கு வந்ததாக ஓரிடத்தில் கூறியுள்ளார். அப்போராட்டத்தில் இருந்து இறுதிவரை தீவிரம்மாறாத, அறநெறிப் போர்க்குணம் அவரிடம் இருந்ததை அவதானிக்கமுடியும். மாவிட்டபுரம், நெல்லியடி, அச்சுவேலி, சுன்னாகம், சாவகச்சேரி, கொடிகாமம் முதலிய இடங்களில் நடைபெற்ற சாதிஅடக்குமுறைக்கு எதிரான போராட்டங்களில் தங்கவடிவேல் மாஸ்ரர் பங்கேற்றிருந்தார்.
தேனீர்க்கடைப் போராட்டம், சலூனில் போராட்டம், உணவுக் கடையில் போராட்டம், ஆலயத்தில் போராட்டம், பள்ளிக்கூடத்தில் போராட்டம் என எல்லா இடங்களிலும் நடைபெற்ற போராட்டங்களிலும் பங்குபற்றியவர் தங்கவடிவேல் மாஸ்ரர். அவர் கூறினார் “பள்ளிக்கூடத்தில் போராட்டம் - அங்குகூடச் சாதியம். அதுதான் ஆக வேடிக்கை.”17 என்று. சாதி அடிப்படையில் மட்டுமல்ல முற்போக்குச் சிந்தனை கொண்டவர்களைக்கூட அப்போது சைவப்பாடசாலைகளில் அனுமதிப்பதில்லை. இதற்கு ஒரு சம்பவத்தைக் குறிப்பிடலாம்.
கம்யூனிஸ்ட் கார்த்திகேசன் யாழ் இந்துக்கல்லூரியில் ஆசிரிய வெற்றிடத்திற்கு விண்ணப்பித்தார். விண்ணப்பத்தைப் பரிசீலனை செய்த இந்துக்கல்லூரி நிர்வாகத்தினர் இந்துபரிபாலன சபையால் நடாத்தப்படும் ஒரு பாடசாலையில் கம்யூனிஸ்ட் கார்த்திகேசனை எவ்வாறு ஆசிரியராக ஏற்றுக் கொள்ளலாம் எனத் தயங்கினர். இது சம்பந்தமாக எந்த முடிவும் எடுக்கமுடியாத நிலையில் நிர்வாகத்தினர் இறுதியில் யாழ்ப்பாணத்தில் கொழும்புத்துறையில் ஆச்சிரமம் அமைத்து வாழ்ந்துவந்த பெரும் சித்தர் யோகர்சுவாமிகளிடம் சென்று ஆலோசனை கேட்டனர். அவர்களது பிரச்சினைக்கு யோகர் சுவாமிகள் பின்வருமாறு பதிலளித்தார். “அட அவன் கார்த்திகேசன் கணிதத்தில் ஒரு விண்ணன் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அவனும் படிப்பித்துவிட்டுப் போகட்டுமே”.18இவ்விடயம் தொடர்பாக “கார்த்திகேயனின் கல்விச் சேவைக்குக் கால்கோள் இட்ட யோகர் சுவாமிகள்”19 என்ற கட்டுரையில் விரிவாகக் காணமுடியும். ‘உண்மையான முற்போக்குவாதிகள்’ பெருமானார் எனும் நாவலர் வளர்த்த சைவத்தின் விளைவால் எதிர்கொண்ட இன்னல்கள் இதுபோன்று நீளும் அவலத்தொடர்தான்.
மனித உயர்வுக்கு அடையாளம் சாதி அல்ல அறிவே என்றும் அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் முழக்கமிட்டவர்களில் தங்கவடிவேல் மாஸ்ரரும் ஒருவர். மனித அடையாளம் மனிதப் பண்பு சார்ந்தே இருக்கவேண்டும். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற வழியில் அவர் பின்வருமாறு கூறினார். “நீ உயர்ந்தவனானால் கல்வி கல். நீ உயர்ந்தவனானால் பொருள் சம்பாதி. நீ உயர்ந்தவனானால் எல்லாவற்றுக்கும் முதலில் அறிவாளியாகு”.20 ஒடுக்கப்பட்ட சாதிக்குழுமங்களின் மிகப்பெரிய ஆயுதம் கல்வி என்பதை ஒடுக்குபவரும் நன்கறிவதால்தான் கல்வி மற்றும் உயர்கல்வி நிலையங்களில் நேரடியாகவும் திரைமறைவிலும் அதனைத்தடுக்கும் கபட நாடகங்கள் இன்றும் நடந்தேறுகின்றன.
‘நீரின்றி அமையாது உலகு’ என்பதை யாழ்ப்பாணச் சாதிவெறியர்கள் வேறுவிதமாகப் புரிந்து கொண்டார்கள். கம்யூனிஸ்ட் கார்த்திகேயன், “நீரைப் பிரித்துத்தான் அணுவிஞ்ஞானிகள் பல புதிய கண்டுபிடிப்புக்களைச் செய்து விஞ்ஞான வளர்ச்சிக்கு வித்திட்டார்கள். ஆனால் அவர்களுக்கு முன்னரே தமிழன் தனது பாணியில் தண்ணீரைப் பிரித்துச் சாதனை படைத்திருக்கிறான்”21 என்று ஒருமுறை கூறினார் என்பதைத் ‘தண்ணீரைப் பிரித்த தமிழன்’ என்ற கட்டுரை விபரிக்கிறது. அவரது கூற்றில் வரும் ‘தமிழன் தனது பாணியில்’ என்ற தொடரின் சூசணப் பொருளை யாழ்ப்பாணச் சமூக வரலாற்றை அறிந்தவர்கள் புரிந்துகொள்வர்;. நீரின்றி அமையாத உலகு என்பதை வடபகுதித் தமிழர்கள் புரிந்துகொண்டவிதம் நீரின் அவசியம் பற்றியதாகவன்றி வேறுபாட்டின் அத்திபாரமாகவே என்பதை யாழ்ப்பாண சமூக பண்பாட்டில் இன்றும் நீறுபூத்த நெருப்பாக இருக்கும் சாதிவெறித்தனத்தின் வேர்களையும் விருட்சங்களையும் மட்டுமன்றி விழுதுகளையும் அவற்றின் அசைவுகளையும் அவதானிக்கின் தெற்றெனப் புலப்படும்.
தேனீர்க் கடைகளின் உள்ளே செல்ல முடியாது, கடைகளில் சமதையாக அமர்ந்து தேனீர் அருந்த முடியாது, பொதுக்கிணறுகளில் தண்ணீர் அள்ள முடியாது முதலிய அடக்குமுறை வடிவங்களை எதிர்த்துப் போராடியவர்களில் தங்கவடிவேல் மாஸ்ரரும் குறிப்பிடத்தக்கவர். கந்தபுராண கலாசாரம் எனும் பேர்படைத்த யாழ்ப்பாணக் கலாசாரம், அதைவிடவும் பேரும் புகழும் கொண்டு திகழ்ந்தது ‘உள்பேணி’, ‘வெளிப்பேணி’ பேணிய கலாசாரமாகத்தான். தேனீர்க் கடைகளில் உயர் சமூகத்தினருக்கு உள்பேணி. அது பித்தளையில் செய்யப்பட்டதாக இருக்கும். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வெளிப்பேணி. அது தகரத்தில் செய்யப்பட்டதாகவும் கறள் பிடித்ததாகவும் இருக்கும். தீண்டாமைக்கு எதிரான போராட்டங்கள் உக்கிரமாக நடந்த அக் காலகட்டத்தில் அன்று இருந்த உள்பேணி, வெளிப்பேணி என்ற சாதி வெறியரின் வேறுபாட்டை நையாண்டி செய்யவே கார்த்திகேசன் “குறள்கண்ட தமிழனுக்குக் கறள்கொண்ட பேணியா?” என்று கிண்டலாகக் கேள்வியெழுப்பினார்.22 உடுப்பிட்டி தொடக்கம் கொடிகாமம் வரையும் இதை ஒழிப்பதற்காகப் போராடியவர்களில் தங்கவடிவேல் மாஸ்ரரும் ஒருவர்.23
யாழ்ப்பாணச் சமூகப் பண்பாட்டில் ஆலய உள்நுழைவுக்கான போராட்டங்கள் நடைபெற்றன, நடந்துகொண்டிருக்கின்றன என்பதே சைவசமயத்தின் ஆன்மீகப் பயில்நிலையைக் கேள்விக்குட்படுத்தும் ஒரு விடயமாகும். மாவிட்டபுரக் கோவில் நுழைவுப் போராட்டம் முக்கியமான ஒன்று. மாவிட்டபுரத்தில் ஆலய நுழைவுக்காக நடத்திய போராட்டங்களின் செயற்பாட்டாளர்களில் ஒருவராகத் தங்கவடிவேல் மாஸ்ரரும் கலந்துகொண்டிருந்தார். பேராசிரியர் தில்லைநாதன் “மானிடத்துக்கு மாவிட்டபுரத்தின் சவால்” (1-3-1971) என்ற தலைப்பில் கருத்தாழமும் கலைத்துவமும் மிக்க கவிதை ஒன்றை எழுதியிருந்தார். அப்பாடற்பகுதியின் சிலஅடிகள் வருமாறு:
“அந்தரதேவர்கள் வந்தனைசொல்லச்
சந்திரமண்டலம் சார்ந்துவந்தாயோ?
திங்களின் மீதிற் றிரிவதுபெரிய
சங்கதிதானோ? சாதனையாச்சோ?
இந்தநிலத்தில் உந்தன் இனத்தவர்
வந்திட மூடும் வாசலும் உண்டு
காக்கைநுழையுமென் கந்தன் திருத்தலம்
பாக்கியமிலாவுன் பஞ்சமர்க்குப் பூட்டு
உலகப் படத்தைஒருமுறைபாரேன்
பலவகைப் பெருமைகள் படைத்தயாழ்ப் பாணப்
பதியின் பெருமிடம் பார்வையிற் பட்டால்
அதிலேசிறந்தஆகமம் பேணும்
மாவிட்டபுரமென் மகத்துவம் காண்பாய்
…………………………………………
ஆணவம் விட்டுஆண்டையைமதித்துப் பேணுவாய் ஆகமப் பெருமையைச் சிறியோய்!”24
‘மா (குதிரை) விட்ட புரத்தில் மனிதனை விட்டால் என்ன?’25 என்று கார்த்திகேயன் ஒருமுறை கிண்டலாகக் குறிப்பிட்டார். 1960களின் நடுப்பகுதியில் சுமார் மூன்று வருடங்களாகத் தொடர்ந்து நடைபெற்ற மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில் நுழைவுப் போராட்டம் முக்கியமானது. சாதிவெறியர்களுக்கான தமிழரசுக்கட்சியின் ஆதரவும் ‘அடங்காத் தமிழர் அமைப்பு’ எனும் அமைப்பின் சாதிவெறிச் செயற்பாடுகளுமே இக்கால நீட்சிக்குக் காரணங்கள். பல சமூகப் போராளிகள் இணைந்து மேற்கொண்ட இப் பெரும் போராட்டத்தில் தங்கவடிவேல் மாஸ்ரரும் இணைந்து செயற்பட்டார்.26
தங்கவடிவேல் மாஸ்ரர் கரணவாய் முதலைக்குழி முருகன் ஆலய நுழைவுக்கான போராட்டத்தில் தலைமைதாங்கிச் செயற்பட்டவர்களில் முக்கியமானவர். அவர் அப்போது அமெரிக்கன் மிஷன் கல்லூரி ஆசிரியராக இருந்தார். முதலைக்குழி முருகன் ஆலய அப்போதைய தர்மகர்த்தா சபைத் தலைவராக விளங்கியவர் தங்கவடிவேல் மாஸ்ரரின் சக ஆசிரியர் ஒருவரின் தந்தையார். ஆனால் ஆலய நுழைவுப் போராட்டம் நடைபெற்ற அன்று உள்ளே செல்வதற்கு அவரது சக ஆசிரியரும் அவர் தந்தையாரும் அனுமதிக்கவில்லை. சில ஆண்டுகளின் பின்னர் குறித்த சக ஆசிரியர் ஓய்வுபெறும் நாள் வந்தது. கல்லூரியில் பிரியாவிடை நிகழ்வும் ஏற்பாடாகியது. குறித்த சக ஆசிரியரின் பிரியாவிடை நிகழ்வில் உரையாற்றும்போது எல்லோரும் குறித்த ஆசிரியருக்குப் புகழ்மாலைசூடி விளாசித் தள்ளினர். தங்கவடிவேல் மாஸ்ரர் பேச எழுந்தார். ஆலயத்திற்குள் நுழையவிடாத குறித்த ஆசிரியரின் மனிதாபிமானமற்ற செயலைச் சக ஆசிரியரின் ஆசிரியவாண்மையோடு சேர்த்துக் கேள்வியெழுப்பி உரையாற்றச் சக ஆசிரியர் குழம்பினார். அதோடு கூட்டமும் குழம்பியது. அஞ்சாது முகத்திற்குநேர் எதையும் கூறும் அவரது மனச்சாட்சிக்கு, அவரின் மனிதத் தன்மையின் உண்மைக் காட்சிக்கு இந் நிகழ்வும் ஒரு சாட்சி.27
சைவமரபில் அல்லது தமிழர் மரபில் சமரசம் உலாவும் இடமாகப் பொதுவாகச் சுடலையையே குறிப்பிடுவர். ஆனால் யாழ்ப்பாணத்தில் “நீங்கா நினைவுகளை நெஞ்சில் இருத்தி மாண்டவரின் சாம்பல் படிந்த அம்மேட்டினிலே மீண்டும் ஒரு மனிதன் அச்சாம்பல் திடலில் தனித்துத் தெரியவில்லை, சாம்பலிலா உண்டு தனித்தன்மை? ஓ அந்தச் சாம்பலிலா உண்டு தனித்தன்மை?”28 என்ற கவிதையின் உண்மை பொய்யாகித் சாம்பலும் தனித்துத் தெரிந்ததாம். அந்த அளவிற்கு யாழ்ப்பாணச் சுடலைகளில் சமரசமின்மையே நிலவியது. தங்கவடிவேல் மாஸ்ரர் “யாழ்ப்பாணத்தில் சுடலையில் சமரசம் எப்போதாவது நிலவியதா? இருந்ததா? இல்லை. உயர்சாதிக்கு ஒரு இடம். தாழ்ந்த சாதிக்கு ஒரு இடம். சுடுவதிலும் சரி. புதைப்பதிலும் சரி”29 என்று கூறுவது அக்காலத்தில் எவ்வளவு கேவலமான யதார்த்தம்.
யுத்தத்திற்குப் பின்னான வடபகுதியில் இன்றும் சில சுடலைகளில் இந்த ‘வெள்ளைச் சாம்பல்’ ‘கறுத்தச் சாம்பல்’ வேறுபாடு தொடர்கிறது. எழுத்தாளர் ஷோபாசக்தி “தனிநாடு கோரிப் போராடிய நமது இனத்தில் இன்றுகூட இடுகாடுகளில் தலித்துகளிற்குத் தனியிடம் ஒதுக்கப்பட்டிருப்பது கேவலத்திலும் கேவலமான செய்தியல்லவா?”30 என்று கூறுவது ‘சுண்டியெடுத்த உயர்சாதியினர்’ எனக் கருதுவோரின் சண்டித்தனத்தையும் யாழ்ப்பாணத்தில் கிறிஸ்தவ மிஷனெறிகள் நவீன மதம் என்று கருதிப் பரப்பிய கிறிஸ்தவத்தின் தோல்வியையும்தான் காட்டிநிற்கின்றன. இறந்த பின்னர் உடலைப் புதைக்கும் மண்ணில் சாதியின் பெயரால் பாகுபாடு காட்டும்நிலை இருக்கும்வரையிலும் மண்ணுக்காகப் போராடுவதில் என்ன மகத்துவம் இருக்கிறது? மண்ணில் நல்ல வண்ணம் வாழத்தெரியாதவரையில் ஆயுதப்போராட்டமும் சரி, அரசியல் போராட்டமும் சரி எண்ணில் நல்ல கதிக்கு எல்லாக் குறைபாடும் உடையதே.
சமூக அடக்குமுறைக்கு எதிரான ஒரேவழி போராட்டம்தான். அந்தப் போராட்டமும் யுத்திகளுடன் கூடியதுதான். அது கண்மூடித்தனமான சண்டையல்ல. தங்கவடிவேல் மாஸ்ரர், “முரண்பட்ட அரக்கத் தனமான தடைகளை முடியறிக்க ஒரேயொருவழி போராட்டம்தான். போராட்டம் என்பது கண்டபடி அடிபடுவதில்லை. போராட்டத்திற்கான யுத்திகள் இருக்கின்றன. நுட்பங்கள் உள்ளன. சாதியப் போராட்டம் - அது ஒரு போர்க்கலைதான்.”31 என்று கூறுவதிலிருந்து சாதி அடக்குமுறைக்கெதிரான போராட்டமும் முறையான போர்க்கலைசார்ந்ததே என்பது புலப்படுகிறது. புறந்தள்ளப்பட்ட மக்களின் நவீன புறத்திணை என அதனை வரைந்துகொள்ளலாம் எனப் படுகிறது. பொதுவாக ஒன்றை எதிர்த்துப் போராடுபவர்கள் தாம் எதிர்ப்பதைப் படிமவாக்கம் செய்வதுண்டு. பெரும்பாலும் அந்தப் படிமவாக்கம் பண்பாடுசார் தொன்மங்களின் மீட்டுருவாக்கப் படிமமாக அதிலும் குறிப்பாகத் தீமையின் பிரதிநிதிப் படிமமாகவே கற்பிதம் செய்யப்படுவதுண்டு. ஆறுமுகநாவலர் முதலான சாதிமான்கள் தம்மைக் கடவுளுக்கு நெருக்கமானவர்களாகவும் கடவுளின் பிரதிநிதியாகவும் தாம் ஒடுக்குவோரைத் தீமையின் பிரதிநிதியாகவும் தீண்டத்தகாதவர்களாயும் கருதினர். சமூக அடக்குமுறைக்கு எதிரான போராளிகள் ‘மறுத்தோடி’களாக இருந்தனர். அதாவது உண்மைநிலை சார்ந்து நின்று தீமையை எதிர்ப்பவராயினர். அவர்கள் “சாதிவெறி” என்பதை அரக்கனாகப் படிமவாக்கம் செய்தனர். தங்கவடிவேல் மாஸ்ரர் ஓரிடத்தில் பின்வருமாறு கூறினார்.
“இந்த அழிக்கமுடியாது என்று நினைத்த சாதி அரக்கனை நாங்கள் இப்போது அடித்துக் குப்புற விழுத்தியிருக்கிறோம். இந்த அரக்கன் விழுந்தநிலை உண்மை. ஆனால் என் மீசையில் இன்னும் மயிர் முட்டவில்லை, ஆனபடியால் நான் தோற்கவில்லை என்று அவன் சொல்லப் பார்க்கிறான். முடியாது… விடமாட்டோம். எப்போதும் அந்த அடி தொடர்ச்சியாக நடக்கவேண்டும். சாதி அரக்கனை உண்மையாகவே முற்றுமுழுதாக அழித்து வெற்றிகாணவேண்டும்”.32
இனமுரண்பாட்டினை நீக்குவதற்கு முன்னர் சமூத்தில் நிலவும் உள்முகமான முரண்பாடுகள் நீக்கப்படவேண்டும் என்று தங்கவடிவேல் மாஸ்ரர் வலியுறுத்தினார். “தமிழரைத் தமிழரே தாக்குகின்ற, தமிழரைத் தமிழரே கொன்றொழிக்கின்ற, தமிழரைத் தமிழரே அடக்குகின்ற சாதிவெறித்தனத்திற்கு முடிவுகட்டிவிட்டுத்தான் தமிழ் சிங்கள முரண்பாட்டினைப் பற்றிப் பேசமுடியும். தமிழரின் உள்முரண்பாடுகள் தீர்க்கப்படாது அதுபற்றிப் பேசுவது அர்த்தமற்றது”33 என்பது அவர் கருத்து.
ஈழத்தில் இன ஒடுக்குமுறைக்கெதிரான போராட்டங்களின் முன்னோடியாக சமூகவிடுதலைப் போராட்டங்களே அமைந்தன எனும் உண்மையை அரசியல் வரலாற்று எழுத்தாளர்கள் காணத்தவறிவிடுகின்றார்கள். தமிழ் விடுதலை இயக்கங்களுக்குச் சாதிய எதிர்ப்புப் போராட்டங்களே முன்னோடியாக அமைந்தன என்பது மறுக்கமுடியாத உண்மை. விடுதலைப் புலிகள் தொடக்கம் ஏனைய இயக்கங்கள் வரையும் இந்தச் சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங்களின் அம்சங்களைப் பெற்றுத்தான் இன ஒடுக்குமுறைக்கெதிரான போராட்டங்களை வடிவமைத்தன. தங்கவடிவேல் மாஸ்ரர் பின்வருமாறு கூறுகிறார்.
“சொல்லவேண்டியதைச் சொல்லத்தான் வேண்டும். நாங்கள் இடைவிடாமல் நடாத்திய இந்தப் போராட்டத்திலிருந்து கற்ற கல்விதான் புலிகளோ மற்ற இயக்கங்களோ ஆயதமேந்தத் தொடங்கியதற்கு அடிப்படை. அதை அவர்கள் இல்லை என்று சொன்னால் அதைவிடப் பொய் இந்த உலகத்தில் வேறு இருக்கமுடியாது”.34
பிரான்ஸ் நாட்டில் பாரிசில் 2003ஆம் ஆண்டு ஒழுங்குசெய்யப்பட்ட கருத்தரங்கில் தங்கவடிவேல் மாஸ்ரர் ஒரு முக்கிய பேச்சாளராகக் கலந்துகொண்டார். அப்போது சபையில் பலதரப்பட்டவர்கள் இருந்தார்கள். இலங்கை இராணுவம் மற்றும் விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தல் ஆகியவற்றுக்கு அஞ்சிப் புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழ்ப் போராளிகள் பலரும் அக் கூட்டத்திற்கு வந்திருந்தார்கள். தங்கவடிவேல் மாஸ்ரர் அந்த அரங்கில் அவர்களையெல்லாம் நோக்கிப் பின்வருமாறு கூறினார்.
“இங்கே இயக்கத்தோடு இருந்தவர்கள் இருக்கிறீர்கள். முன்னாள் தமிழ்ப் போராளிகள் இருக்கிறீர்கள். நீங்களே உங்கள் மனச்சாட்சியைத் தொட்டுப்பாருங்கள். யாருடைய போராட்ட வழிகளை நீங்கள் முதலிலே மனதில் ஏற்றுக்கொண்டீர்கள்? நிச்சயமாக இந்த ஒடுக்கப்பட்ட மக்களுடைய போராட்டத்தில் இருந்துதான் நீங்கள் அந்த ஆரம்ப நம்பிக்கையைப் பெற்றீர்கள்”.35
இதிலிருந்து ஒடுக்கப்பட மக்களுடைய போராட்ட வழிமுறைகளை விடுதலை இயக்கங்கள் பெற்று வளர்ந்த தன்மை புலனாகின்றது. இன அடக்குமுறைக்கு எதிரான தமிழர்களின் ஆயுதப்போராட்டத்தை ஒட்டுமொத்தமான சமூகப் பின்னணியில் வைத்து நோக்கியவர்களில் தங்கவடிவேல் மாஸ்ரரும் ஒருவர். ஆயுதத்தைக் கையில் வைத்திருந்த தமிழ்ப் போராளிகளுக்கு அஞ்சாநெஞ்சுரம் படைத்தவராக அவர் விளங்கினார். தெளிவற்ற கொள்கை, நுட்பமற்ற அரசியல் தந்திரோபாயம், ஒழுங்குமுறைக்கமைய வகுக்கப்படாத போராட்ட உத்திகள் முதலியவற்றால் போராட்டம் தோல்வியில் முடியும் என்பதை ஆயுதப் போராட்டத்தை மையமாக வைத்து அவர் எதிர்வுகூறினார். “ஈழம் என்றால் என்ன என்பது தெரியாமல் சுதந்திரம் என்றால் என்ன என்பது தெரியாமல் விடுதலை என்றால் என்ன என்பது தெரியாமல் இனப்பிரச்சினை என்றால் என்ன என்பது தெரியாமல் ஆயிரமாயிரம் மக்கள் எல்லாம் செத்து மடிந்தார்கள். என்ன தேவைக்காக?”36என்று கூறிய தங்கவடிவேல் மாஸ்ரர் தாம் ஆயுதத்திற்கு அஞ்சவில்லை என்பதையும் பின்வருமாறு கூறினார். “உங்களுக்குப் புதியதோர் உலகத்தைத் தருவோம் என்று சொன்னவர்கள் கைவிட்டுவிட்டார்கள். அவர்களே கைவைத்தார்கள். இதைச் சொல்ல நாங்கள் பயப்படவில்லை”.37 ஆயுதப்போராட்ட வலிமையானது சாதியத்தை ஒழித்துவிட்டது, சமூகத்தடைகளை நீக்கி ஒற்றுமையை ஏற்படுத்திவிட்டது என்பதெல்லாம் பொய்யாய்ப் பழங்கதையாய் இருந்ததைத் தமிழ் ஆயுதப் போராளிகள் இருந்த காலத்திலே துணிவோடு எதிர்த்துக்கூறியவர்கள் சிலரே. ஆசிய நாடுகளில் குறிப்பாக இந்தியா, இலங்கை போன்ற தேசங்களில் சாதிய விஷவேர்களை முற்றுமுழுதாகக் களைந்தெறியாமல் இனவிடுதலையை எண்ணிப்பார்க்கமுடியாது என்ற யதார்த்தத்தை அவர்கள் நன்கறிந்திருந்தார்கள்.
“தமிழ் மக்களிடையே இன்று நடைபெறும் ஆயுதப் போராட்டம் சாதி ஒடுக்குமுறையை முற்றுமுழுதாக இல்லாமலாக்கிவிட்டது என்று சொல்;லமுடியுமா?” என்று எழுத்தாளர் டொமினிக் ஜீவாவிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு “நீறு பூத்த நெருப்பாக இன்றும் கனன்றுகொண்டுள்ளது. முற்றாக மறைந்துபோய்விடவில்லை. சந்தர்ப்பம் வசதியானால் மீண்டும் தலைதூக்கும் ஆபத்தும் உண்டு.”38 என அவர் ஆயுதப் போராட்டம் கோலோச்சிய காலத்திலேயே கூறியது நோக்கத்தக்கது.
தங்கவடிவேல் மாஸ்ரர் இன்னும் வெளிப்படையாகப் போராட்ட அமைப்பின் பெயர் சுட்டியே கூறினார். “சாதியத்தைப் பற்றிப் பேசுபவர்கள் அது முடிந்துவிட்டது, அது ஒழிந்துவிட்டது. அது அங்கே பலவீனமாய்க் கிடக்கிறது என்கிறார்கள். சாதியம் சாகவில்லை. புலிகளின் துப்பாக்கி நிழலில் அது உறங்குகிறது. இதைச்சொல்ல நாங்கள் பயப்படவில்லை”39என்று தங்கவடிவேல் மாஸ்ரர் கூறியது சமூக யதார்த்தம் நிறைந்தது. “வடக்கு கிழக்கில் சாதியெதிர்ப்பு, ஆலயப் பிரவேசம் போன்றன பெருமளவு முன்னெடுக்கப்படாமைக்குக் காரணம் தேசிய இனப்பிரச்சினையும் தமிழரசுக் கட்சியின் செயற்பாடுமே”40எனப் பேராசிரியர் சி. சிவசேகரமும் இதுபற்றி விரிவாகக் குறிப்பிடுகிறார்.
முப்பது வருட யுத்தத்திற்குப் பின்னரும் இன்றும் சமூகத்தின் பலதளங்களிலும் சாதிப்பாகுபாட்டுப் பிரச்சினைகள் மேலோங்கிவருவது என்பது மாற்றமுறாச் சமூகத்தின் பிரதிபலிப்பைத் தெளிவாகக் காட்டுகின்றது. இரத்தம் சிந்திய போராட்டங்கள் அனைத்துமே சமூக ஒற்றுமையின் தளத்தைப் பலப்படுத்தவில்லை என்பதைச் சமகாலச் சமூக நிகழ்வுகள் வெளிச்சம்போட்டுக் காட்டுகின்றன. இன்றும் திறக்கப்படாத கோயில்களும் வழங்கப்படாத பதவிக்கதிரைகளும் திருத்தப்படாத தெருக்களும் சாதியத்தின் பெயரால் நடந்தேறுவதைப் பச்சையான யதார்த்தமாக ஏற்றுக்கொள்ளவேண்டும். இன்று பாடசாலையில் இருந்து பல்கலைக்கழகம்வரை சாதியின் பெயரால் மறைமுகமாகவும் நேரடியாகவும் வஞ்சிக்கப்படும் நிகழ்வுகளைப் பத்திரிகைகள் தெரிவிக்கின்றன. ஆணவத்தடிப்போடும் சாதித்திமிரோடும் பதவிக் கதிரைகளில் அமர்ந்துகொண்டு போடும் அதிகார ஆட்டங்கள், நீதிமன்றங்கள் விசாரித்துத் தீர்ப்புச் சொல்லும்வரை தொடர்கின்றன. சாதிக்கொரு பிள்ளையார் கோவிலும் சாதிக்கொரு தேவாலயமும் இன்றும் வடக்கிலும் கிழக்கிலும் இருக்கின்றன. பிள்ளையார் கோவிலும்; தேவாலயமும் சாதியின் பெயரால் அழைக்கப்படும் எனினும் ஐயரும் பாதிரியாரும் முறையே கோவில்களுக்கும் தேவாலயங்களுக்கும் பொதுவான விந்தையும் நகைப்பூட்டத் தவறவில்லை.
புலிகள் இயக்கம் இருந்தபோது அனைவருக்குமாகத் திறக்கப்படாத கோயில்கள் சிலவற்றைப் பூட்டிச் சாவியினை எடுத்தனர். அனைவருக்குமாகக் கோயில்கள் திறக்கப்படாதிருப்பதற்கும் அவற்றைப் பூட்டிச் சாவியினை எடுப்பதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை. அவர்களது வன்னி இராச்சியத்தில்கூட இந்த நிலையை மாற்ற முடியவில்லை. ஒடுக்கப்பட்ட சாதியினர் எனக்கருதப்படுவோர் உள்நுழையக்கூடாது என்பதற்காக நள்ளிரவில் கோவிலில் எண்ணெய்; காப்புச் சாத்தும் சங்கதியும் அற்ப சுயநலத்துக்காக உயர் கல்விப் பீடங்களில் இந்து கலாசாரத்துக்குரிய கதிரையையே பிறர் தீண்டக்கூடாது என்பதற்காகக் காலி செய்து கலாசார சுத்திகரிப்பாளராகத் தம்மைக்காட்டும் பொறுப்பற்ற சுயநலநடத்தையும் ஒடுக்கப்பட்ட சாதியினர் தொல்காப்பியம் முதல் எக்காப்பியமும் கற்கவும் கற்பிக்கவும் ஆகாமற் தடுக்கும் தீண்டாமைப்புத்தியும், மணிவிழாக்களில்கூடச் தங்கள் சாதி மணியைக் கட்டி அடிக்கும் தன்மையும் கல்விக் கதிரைகளில் இருந்துகொண்டு தம்மாணவரின் உழைப்பைத் தம் உழைப்பாகக் காட்டிப் படமோட்டும் திறமை உறிஞ்சிக் குணமும் கல்வியால் பண்பும் உயர்வும் வராததால் சைவத் தமிழ் பண்பாட்டு நிலைக்களனாய் மிளிரும் கிராமங்களில் இருந்து புறப்பட்டவராய்த் தம்மைக் காட்டும் தன்மையும் செத்தவீட்டில் பிணமாகவும் கலியாணவீட்டில் மாப்பிளையாகவும் எப்போதும் தம்மைக்காட்டும் ஒருவித மனநோயுமெனப் பக்குவப்படாத சில மேட்டுக்குடிகளின் பூப்படையாத புலமைத்தனமும் அடியறுப்பு வகிபங்குகளும் நீளும்.
யாழ் புதிய பொதுநூலகத் திறப்பு விழா பற்றிப் பல முரண்பாடான கருத்துக்கள் இருக்கலாம் எனினும் நடந்த சிலசம்பவங்கள் வருந்தத்தக்கவை. உதாரணத்திற்கு ஒன்று. “தேசிய நாளிதழான தினக்குரல் தனது 16.02.2003 பதிப்பில் செல்லன் கந்தையன் அவர்களை (அப்போதைய மேஜர்) சாதி அடையாளங்களுடன் வரைந்த சாதிவெறிக் கேலிச் சித்திரம் ஒன்றையும் வெளியிட்டது. மிகக் கவனமாக இந்தக் கேலிச் சித்திரம் தினக்குரலின் யாழ் பதிப்பில் மட்டுமே வெளியாகியது”41 என்று ஷோபாசக்தி குறிப்பிடுவதும் விடுதலைக்கான ஆயுதப் போராட்ட காலத்தில்தான் நடந்தேறியது. யுத்த காலத்தில் இனவிடுதலைப் போராட்டத்திற்குள் சாதிவெறித்தனம் அழிந்துவிட்டது எனச் சமூக அரசியலில் கண்மூடிப்பூனைகளாக இருந்து கருத்துக்கூறுவோர் “சீரணி நாகம்மாள் கோவிலில் சாமி காவிய தலித் வாலிபர்களை ஆதிக்க சாதியினர் தாக்கியதுடன் அவர்களைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்று இராணுவத்திடம் காட்டியும் கொடுத்தனர்”42 என்பது போன்ற பல சம்பவங்கள் மட்டுமல்லாது யாழ் மத்திய கல்லூரி அதிபர் கணபதி இராசதுரை போன்ற சமூகப் பயன் வழங்குநர்கள் சாதியைத் தவிர வேறெந்தக் காரணமும் இன்றிப் படுகொலைசெய்யப்பட்ட துக்க நிகழ்வுகளும் விடுதலைக்கான ஆயுதப் போராட்ட காலத்தில்தான் நடந்தேறின என்பதையும் அறிந்து கொள்ளவேண்டும். இதனால்தான் தங்கவடிவேல் மாஸ்ரர் தெளிவாகக் கூறினார், “சாதியம் சாகவில்லை, புலிகளின் துப்பாக்கி நிழலில் அது உறங்குகிறது” என்று. அதற்காகப் புலிகள் எதையும் சாதிக்கவில்லை என்பதல்ல அர்த்தம். அவர்கள் சமூகப்பிரச்சினைக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்காத இனவிடுதலை முயற்சிகளில் ஈடுபட்டமையானது உண்மையான சமூக ஒற்றுமையை மக்கள் உணராமல் தடுத்துவிட்டது.
யுத்தகால ஈழத்து அரசியலை நுண்ணரசியல் அணுகுமுறையோடு அணுகும் எழுத்தாளர் ஷோபாசக்தி தனது நூல் ஒன்றில் தங்கவடிவேல் மாஸ்ரர் எனும் ஆளுமையைப் பின்வருமாறு பதிவு செய்கிறார்.
“ஒக்ரோபர் எழுச்சியை ஒட்டி உருவான சாதியத்திற்கு எதிரான போராட்டங்களை வழி நடத்திய சிந்தனையாளர்களில் முக்கியமானவரான தங்கவடிவேல் மாஸ்ரர் 2003ம் வருடம் ஈழத்திலிருந்து பிரான்ஸிற்கு வந்திருந்தபோது அவரை மையப்படுத்தித் தோழர்களால் ஒரு சிறிய கருத்தரங்கு பாரிஸில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. கருத்தரங்கில் உரையாற்றிய அவர் ஈழத்துச் சாதியப்படிமுறைகள், வழமைகள், ஒடுக்குமுறைகள், சாதியத்தை எதிர்த்துத் தோன்றிய அமைப்புக்கள், போராட்டங்களென்று விரிந்த தளத்தில் காத்திரமானதோர் உரையை நிகழ்த்தினார். எனினும், அவரின் உரை ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எழுபதுகள் வரையான வரலாற்றுடனேயே நின்றுவிட்டது. பின் தொடர்ந்த கலந்துரையாடலின்போது தங்கவடிவேல் மாஸ்ரரிடம் ஒரு தோழர் ‘நீங்கள் எழுபதுகளுக்குப் பிந்திய தலித் மக்களின் போராட்டங்கள் குறித்தோ சாதிய ஒடுக்கு முறைகள் குறித்தோ ஏன் பேசவில்லை? முப்பது வருடங்களாகத் தொடரும் தேசியவிடுதலைப் போராட்டத்திற்குப் பின்பாக ஈழத்தில் சாதியம் எப்படியிருக்கிறது?’ என்ற கேள்விகளை எழுப்பினார். அந்த இரு முக்கியமான கேள்விகளுக்கும் சேர்த்துத் தங்கவடிவேல் மாஸ்ரரும் ஒரு அதிமுக்கியமான பதிலை இவ்வாறு சொன்னார்: ‘எனக்கு இப்போது எழுபத்தியிரண்டு வயதாகிறது, என்றாலும்கூட எனக்கு இன்னமும் உயிர் மேல் ஆசையிருக்கிறது, நான் இந்தக் கருத்தரங்கத்தை முடித்துக்கொண்டு மீண்டும் யாழ்ப்பாணத்திற்குத்தான் செல்லவேண்டியிருக்கிறது.’
தங்கவடிவேல் மாஸ்ரரின் பதிலை விளங்கிக் கொள்வதில் அறிவு நாணயம் உள்ளவர்களுக்குச் சிரமமேதும் இருக்காது. இன்றைக்கு ஈழத்தில் குறிப்பாகத் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் தலித் அரசிலை மட்டுமல்ல வேறெந்த அரசியலைப் பற்றியும் யாரும் எதுவும் பேசிவிடமுடியாது…..எல்லாவிதமான சமூக ஒடுக்கு முறைகளையும் தமிழ்த் தேசியத்தின் பேரால் சகித்துக் கொள்ளுமாறும் பொறுத்துப் போகுமாறும் தமிழ்த் தேசியவாதம் ஒடுக்கப்பட்ட மக்களிற்கு ஆயுதமுனையில் எச்சரிக்கை செய்கிறது.”43 இங்கே தங்கவடிவேல் மாஸ்ரர் புலிகளுக்குப் பயந்து கருத்துக்கூறுவதாக நினைத்தால் அது தவறானது. அன்றைய அரசியல் யதார்த்தத்தை எவ்வளவு எளிமையாகப் புரியவைக்கிறார் என்பதையும் அதற்காகத்தான் அவ்வாறு கூறினார் என்பதையும் தெளிவாகப் புரிந்து கொள்ளவேண்டும்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் தேர்தலில் ஓர் இடதுசாரி இயக்கம் வெற்றிபெறாமைக்குப் பிரதான காரணம் சாதிதான் என்பதைக் கூறிய இடதுசாரிப் போராளிகளில் தங்கவடிவேல் மாஸ்ரரும் ஒருவர். “தேர்தலில் ஒரு இடதுசாரி இயக்கம் வடக்கு அல்லது கிழக்கு மாகாணத்தில் தலையெடுக்கமுடியாமைக்கான காரணம் பலவாறாக இருந்தாலும் வடபகுதியில் பிரதானமான காரணம் சாதிதான். இடதுசாரி இயக்கத்தைக் கட்டிவளர்க்கக்கூடிய சூழ்நிலைகூட அங்கு இருக்கவில்லை என்பதுதான் யதார்த்தம்” 44என்று அவர் கூறுவது நோக்கத்தக்கது. சிங்களத் தேசியவாதத்தை எதிர்த்த வலிமை மிக்க தமிழ்த் தேசியவாதப் போராட்டமானது சிங்களத் தேசியவாதத்தைத் தனக்கு நிகராக வளர்த்துச் சென்று, தான் தோற்றுப்போனபோது சிங்களத் தேசியவாதத்தைப் பலமுடைய ஒற்றைத் தேசியவாதமாக மேலும் மீபலமடையச் செய்தது. அதுபோல இனப்பிரச்சினை முலாம் பூசப்பட்ட சமூக ஒடுக்குமுறைப் பிரச்சினைகள் இனவிடுதலைப் போரின் வீழ்ச்சியின் பின்னர் மிகவும் பூதாகரமாக இடிமுழக்கத்துடன் வெளிச்சங்காட்டத் தொடங்கின. தங்கவடிவேல் மாஸ்ரர் இதுபற்றிப் பின்வருமாறு கூறினார்.
“இங்கே சாதியப் போராட்டம் ஒழிந்துவிட்டன என்கின்றனர் இப்போதும். பொய். பச்சைப் பொய். அது ஒழியவில்லை. வாழ்க்கை முடியவில்லை. கொடுமைகள் முடியவில்லை. சமுதாயச் சிக்கல்கள் தீரவில்லை. ஏற்றத்தாழ்வுகள் அசையவே இல்லை. ஏமாற்றங்கள் மலிந்துகொண்டு போகின்றன. கொலையும் ஏமாற்றும் வஞ்சகமும் தலைவிரித்தாடுகின்ற ஒரு பொல்லாத காலத்திலே நாங்கள் இருக்கிறோம். சாதி எப்படி ஒழியும்? அதிலும் எனக்கு மற்ற நாடுகளைப் பற்றித் தெரியாது. யாழ்ப்பாணச் சாதி என்பது நாங்கள் கற்பனைக் கதைகளாகப் படித்திருக்கின்ற ஏகலைவன் கதையை விடவும் பொல்லாதது”.45 அவரது கூற்று யாழ்ப்பாணச் சமூகத்தில் சாதியின் கட்டிறுக்கத்தால் அதன் தீவிரத்தால் விளைந்த கொடுமைகளைச் சுமந்த அனுபவ வலியின் பதிவாகக் காணப்படுகிறது.
1968இல் தொழிலாளர் என்ற காங்கிரஸ் பத்திரிகையில் வெளியாகிய சுபத்திரனின் ‘சங்கானைக்கென் வணக்கம்’ என்ற கவிதையைத் தங்கவடிவேல் மாஸ்ரர் உணர்ச்சி பொங்க அழகாகப் பாடுவார்.
“… செங்குருதிக் கடல் குடித்துச்
செழித்த மதத்திற்குள்
வெங்கொடுமைச் சாக்காடாய்
வீற்றிருந்த சாதியினைச்
சங்காரம் செய்யத்
தளைத்தெழுந்து நிற்கின்ற
சங்கானைக் கென் வணக்கம்”46
சாதியம் அழியாத ஊர்கள் தங்கவடிவேல் மாஸ்ரரால் வணங்கப்படாத ஊர்களே. அதற்குச் சாட்சியாகவும் தமிழ்த் தேசியவாத எழுச்சியின் அவலமான வீழ்ச்சிக்குச் சாட்சியாகவும் சாதியமும் சாதியப் போராட்டமும் ஒழியவில்லை என்பதற்குச் சாட்சியாகவும் தங்கவடிவேல் மாஸ்ரரின் போராட்ட நீட்சியாகவும் அண்மைக் காலத்தில் வடபகுதித் தமிழர்கள் மத்தியிலும் இலங்கையின் பிறபகுதிகளில் உள்ள வடபகுதித் தமிழர்கள் மத்தியிலும் கல்விப்புலத்தில் நடந்தேறிய சாதிசார் அடக்குமுறைகள் பல. அவற்றில் பலவற்றை ஆதாரங்களுடன் விவரிக்க முடியும். கட்டுரையின் விரிவஞ்சிக் கல்விப்புலத்தில் நடந்த ஒருவிடயத்தை மட்டும் இங்கு சுருக்கமாக விரிக்கலாம். தங்கவடிவேல் மாஸ்ரர் அதிகம் வாழ்ந்த உடுப்பிட்டியில் நடந்த நிகழ்வு என்பதால் இவ்விடத்தில் பேசுவதுதான் பொருத்தமானது.
அண்மைக்காலத்தில் ஆய்வறிஞர் பேராசிரியர் ராஜன் கூல் எழுதிப் புகழ்பெற்ற விழுந்த பனை - ராஜினி திரணகமவில் இருந்து போர் முடியும்வரை என்ற நூலில் சமூக அரசியல் நிகழ்வுகளும் அவற்றின் அடிப்படைகளும் விவரிக்கப்படுகின்றன. அந்நூலில் குறிப்பிடப்படும் சமூக ஒடுக்குமுறைசார்ந்த விடயங்களை உள்ளடக்கி “குணசிங்கம் பக்கங்கள்” எனத் தமிழில் சிறு கையேடும் வெளிவந்துள்ளது. ராஜன் கூலின் குறித்த நூலில் வரும் ‘ஒடுக்கப்பட்ட சமூகமும் தமிழ்த் தேசியவாதமும்’ என்ற பகுதியில் இந்நிகழ்வு விரிவாகக் கூறப்படுகிறது. பத்திரிகைகளிலும் இச்சம்பவம் தொடர்பான அதிக விடயங்கள் வெளிவந்துள்ளன. இவை அனைத்தையும் அடிப்படையாகக் கொண்டு புகழ்பெற்ற “அதிபர் வழக்கு” எனும் குறிப்பிட்ட சம்பவம் தொடர்பான விரிவான பகுதிகளைத் தேவைகருதிக் கீழ்வருமாறு சுருக்கமாகக் குறிப்பிடலாம்.

காலனித்துவ மிஷனெறிகளால் உருவாக்கப்பட்ட வரலாற்றுப் புகழ்பெற்ற உடுப்பிட்டி மகளிர் கல்லூரி அதிபர் நியமனத்தில் சாதி அடக்கு முறைக்கெதிராகப் போராடி வெற்றியீட்டி அதிபர்பீடத்தில் அமர்ந்த புரட்சிகரப் பெண்மணி திருமதி நவமணி சந்திரசேகரம் அம்மையாரின் சாதனை சாதியத்திற்கெதிராக ஓங்கிய அடித்த அடியாக வடபகுதியை மட்டுமல்ல முழு இலங்கையையுமே அதிரவைத்தது. அக் கல்லூரியின் புகழ் பெற்ற பழைய மாணவியான அவர் சகலவிதமான கல்வி மற்றும் தொழில் தகைமைகளைத் தன்விடா முயற்சியால் இளவயதிலேயே பெற்றுக்கொண்டவர். இலங்கை அதிபர் சேவையில் தரம் 1ஐப் பெற்றவர். அதிபர் சேவையில் இருந்து அனுபவம் பெற்றவர். 23.03.2010இல் மேற்படி கல்லூரிக்கு அதிபர் பதவி வெற்றிடத்திற்கு விண்ணப்பித்திருந்தார் எனினும் அவருக்கு நேர்முகப் பரீட்சைக் கடிதம் அனுப்பப்படவில்லை. அவரைவிடவும் குறைந்ததரத்தில் ஆசிரியர் சேவையில் உள்ள எல்.என்.ஜோசேப் என்பவரே அதிபராக நியமிக்கப்பட்டார். ஆனால் உடுப்பிட்டி மகளிர் கல்லூரி ஒரு 1யுடீ பாடசாலை. விண்ணப்பம் கோரப்பட்டபோதும் அதிபர்சேவை தரம்1 மட்டுமே எனக் கோரப்பட்டிருந்தமையும் நியமனமும் ஒன்றுக்கொன்று முரணானவையாகவே அமைந்தன.
பின்னர் குறித்த ஆசிரியர் தரத்தில் உள்ள அதிபர் 14.11.2012 இல் தனது ஆசிரிய சேவைக்காலம் முடிந்து ஓய்வு பெற்றபோது மீண்டும் சுற்றுநிருப விதிகளையும்மீறி இலங்கை அதிபர் சேவையில் தரம் 1ஐ உடைய திருமதி நவமணி சந்திரசேகரன் புறக்கணிக்கப்பட்டு அவரைவிடவும் தரங் குறைந்த அதிபர் தரம்2 உடைய, கல்லூரியின் பழைய மாணவியும் அல்லாத கௌரி சேதுராஜா அதிபராக அதுவும் முதல்நியமனமாக அதுவும் 1யுடீ பாடசாலைக்கு நியமிக்கப்பட்டார். திருமதி நவமணி சந்திரசேகரம் அவர்களை அதிபராக நியமிக்க வேண்டும் என்று 04.07.2013இல் ஆளுநர் நீதியான முறையில் கடிதம் ஒன்றைக் கல்விச் செயலருக்கு அனுப்பியிருந்தார். மறுநாள் மாகாணசபைத் தேர்தல் அறிவிக்கப்பட்டமையால் கல்விச் செயலர், திருமதி நவமணி சந்திரசேகரன் அவர்களை 23.09.2013 இல் பதவி ஏற்கும்படிகோரி 13.08.2013 திகதியிட்ட கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். இச் சந்தர்ப்பத்தைச் சாதகமாகப் பயன்படுத்தி இந்த நியமனத்தை இரத்துச் செய்ய வேண்டுமென எஸ். பரமேஸ்வரன், எல்.என்.ஜோசெப், கமலவதனா தேவராஜா ஆகியோர் யாழ் வடமாகாண மேல்நீதிமன்றில் மனுச் சமர்ப்பித்தனர். அதற்கு முன்னர் பழைய மாணவிகள் சங்கக் கூட்டம் ஒன்றைக் கைக்கெட்டியவர்களைக் கொண்டு நடாத்தி சேவைசெய்வதற்கு திருமதி நவமணி சந்திரசேகரம் அவர்களுக்குக் காலம் போதாது என்ற போர்வையில் வழக்குத் தாக்கல் செய்வதற்குப் 15பேரிடம் கையொப்பமும் வாங்கியிருந்தனர்.

யாழ்ப்பாணத்தில் வழக்கு நடந்தது. பதவிக்கு இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது. வழக்கு நீண்டு சென்றது. அதிபர் தரம்1ஐயும் அதிபர் தரம்2ஐயும் சமன்செய்து சீர்தூக்க சுமார் ஆறு தவணைகள் முடிந்து ஏழாவது தவணையும் குறிக்கப்பட்டது(03.12.2013). வழக்கு நீடித்துச் சென்றமையால் நீதி கேட்டு யாழ்ப்பாணத்திற்கு வெளியே கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றை நாடினார், திருமதி நவமணி சந்திரசேகரம். 05.05.2014இல் கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம் கௌரி சேதுராஜாவைவிடவும் திருமதி நவமணி சந்திரசேகரம் அவர்களே அதிபர் பதவிக்குத் தகுதியானவர் என்று கருதி பதவிக்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையுத்தரவை நீக்கி, உத்தரவிட்டுத் தீர்ப்பு வழங்கியது. ஆனால் கல்விச் செயலரோ கௌரி சேதுராஜாவோ மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பினை அலட்சியமாகக் கருதினர். தீர்ப்பை நடைமுறைப்படுத்தாத காரணத்தால் கல்வி அமைச்சின் செயலாளரும் கௌரி சேதுராஜாவும் மீண்டும் 13.06.2014 அன்று மேன்முறையீட்டு நீதிமன்றுக்கு உடனடியாக அழைக்கப்பட்டனர். தீர்ப்பை ஏன் நடைமுறைப்படுத்தவில்லை என்று கேள்வியெழுப்பிய நீதிபதி 16.06.2014இல் இருந்து திருமதி நவமணி சந்திரசேகரம் அவர்களே கல்லூரி அதிபர் எனவும் அதற்கான கடிதம் உடனடியாக வழங்கப்படவேண்டும் எனவும் திருமதி சந்திரசேகரனைவிடத் தகுதியில் குறைந்த கௌரி சேதுராஜா அதே பாடசாலையில் உபஅதிபராகவோ அல்லது ஆசிரியராகவோ அல்லது வேறுபாடசாலையிலோ பணியாற்ற விரும்பினால் பணியாற்றலாம் எனவும் எதுஎவ்வாறாயினும் 16.06.2014இல் இருந்து திருமதி நவமணி சந்திரசேகரம் அவர்களே கல்லூரி அதிபர் எனவும் கடுமையான உத்தரவிட்டது. 13.06.2014 அன்று வெள்ளிக்கிழமை வழங்கப்பட்ட இத் தீர்ப்பின் அடிப்படையில் 13.06.2014 எனத் திகதியிடப்பட்ட நியமனக் கடிதம் 15.06.2014 அன்று ஞாயிற்றுக்கிழமை திருமதி நவமணி சந்திரசேகரத்தின் வீட்டிற்கு சென்று அலுவலகப் பணியாளர் ஒருவரால் வழங்கப்பட்டது.
16.06.2014 அன்று திங்கட்கிழமை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அதிபராகத் திருமதி நவமணி சந்திரசேகரம் உடுப்பிட்டி மகளிர் கல்லூரியில் பதவியேற்றார். 23.03.2010இல் அவர் அதிபராக விண்ணப்பித்தபோது அவருக்குச் சேவைக்காலம் நாலரை வருடங்களாக இருந்தன. 16.06.2014இல் அவர் பதவியேற்றபோது அவரது சேவைக்காலம் ஒரு மாதமும் பத்து நாட்களுமாக மட்டுமே இருந்தன. இந்தக் கால இழுத்தடிப்பிற்குக் காரணம் குறித்த பதவியில் இருந்து அவரை ஓரங்கட்டுவதல்லாமல் வேறெதுவாய் இருக்கமுடியும். இதற்கிடையில் எஸ். பரமேஸ்வரன், எல்.என்.ஜோசெப், கமலவதனா தேவராஜா ஆகியோர் திருமதி நவமணி சந்திரசேகரம் நீதிமுறையாகப் பதவியேற்ற பின்பும் அவரைப் பதவியிலிருந்து தூக்குவதற்காக 06.06.2014இல் மேன்முறையீட்டு நீதிமன்றில் வழக்குத்தாக்கல் செய்தனர். 03.08.2014இல் இரண்டாவது தவணை வந்தபோது அதனை அவர்களே வாபஸ் வாங்கிக் கொண்டனர். திருமதி நவமணி சந்திரசேகரம் சேவையிலிருந்து ஓய்வுபெற்றுவிட்டமையே இதற்குக் காரணம். இது எதனைக் காட்டுகிறது?
சுமார் நாலரை வருடமாகச் சாதிய அடக்குமுறைக்கு எதிராக ஒரு பெண்ணாக நின்று நீதிவேண்டிப் போராடி, வெற்றியீட்டி, சாதிய அரக்கனைத் தலைகுனியவைத்து ஒரு மாதமும் பத்து நாட்களும் மட்டுமே சேவையாற்றிய திருமதி நவமணி சந்திரசேகரன் அவர்கள் ஒடுக்கப்பட்ட மக்களின் கல்விநிலைப் பதவிக்காகப் போராடிய போராளியாக வரலாற்றுரீதியான மனநிறைவோடு 26.07.2014 அன்று தனது மகத்தான சேவையிலிருந்து ஓய்வுபெற்றார்.47

‘சேவைசெய்வதற்கு திருமதி நவமணி சந்திரசேகரம் அவர்களுக்குக் காலம் போதாது’ எனக் கருதிய இறுதிநேர ஓரங்கட்டுதலையும் திருமதி நவமணி சந்திரசேகரம் 41 நாட்கள் மட்டுமே உள்ள சேவைக்காலத்தில் தகர்த்தெறிந்தார். 41 நாட்களுக்குள் ஆங்கிலதின விழா, பரிசளிப்பு விழா, கல்விக் கண்காட்சி என்பவற்றை கல்லூரி வரலாறு காணாத விதத்தில் செய்துமுடித்தார். ஒழுக்கத்தில் கல்லூரியை மேன்மைப்படுத்தினார். மிகக் குறுகிய காலத்திலான அவரது உயரிய சேவையை ஆங்கிலப் பத்திரிகை பின்வருமாறு பதிவு செய்தது. “In July 16, 2014 Mrs N.Chandrasegaram was appointed as the principal of the Uduppiddy Girl's College. She worked for a short period (41 days) yet, she rendered an excelent service to the collage. She retired on July 25, 2014" 48

இவை தொடர்பான உண்மைத் தகவல்களை முன்புகுறிப்பிட்ட நூல்களிலும் “உடுப்பிட்டி மகளிர் கல்லூரிக்கான ஆளுநரின் அதிபர் நியமனம் சரியானது என மேன்முறையீட்டு நீதிமன்று தெரிவிப்பு” என்ற தலைப்பில் 17.05.2014இல் உதயன் பத்திரிகையில் வெளியான செய்தியிலும் “உடுப்பிட்டி மகளிர் கல்லூரி அதிபர் கடமையேற்க வேண்டும் மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு” என்ற தலைப்பில் 15.06.2014 வீரகேசரிப் பத்திரிகையில் வெளியான செய்தியிலும் “உடுப்பிட்டி மகளிர் கல்லூரி அதிபராக திருமதி நவமணி கடமைகளை இன்று பொறுப்பேற்கின்றார்” என்ற தலைப்பில் 16.06.2014 அன்று உதயன் பத்திரிகையில் வெளியான செய்தியிலும் “கடமைகளைப் பொறுப்பேற்றார் உடுப்பிட்டி மகளிர் கல்லூரி அதிபர்” என்ற தலைப்பில் 17.06.2014 உதயன் பத்திரிகையில் வெளியான செய்தியிலும் இணையத் தளங்களில் வெளிவந்த செய்திகளிலும் இலங்கைத் தமிழ் ஆசிரியர் சங்க அறிக்கைகளிலும் அறியலாம்.
இச்சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு “சுற்றுநிருபங்களைப் பின்பற்றாததால் வடபுலகல்வித் துறையில் குறைபாடுகள் - இலங்கைத் தமிழாசிரியர் சங்கம் குற்றச்சாட்டு” என்ற தலைப்பில் யாழ் தினக்குரலில் 03.12.2013 அன்று வெளியாகிய இலங்கைத் தமிழாசிரியர் சங்கப் பொதுச்செயலாளர் சரா. புவனேஸ்வரனின் அறிக்கையும் முக்கியமானது.
முழு இலங்கைக்கும் சுற்றுநிருபம் என்பது ஒரேமாதிரியானதாக அமைகின்றபோதும், யாழ்ப்பாணத்தில் அச் சுற்றுநிருபத்தை நடைமுறைப்படுத்தாது, சமூக அடுக்கமைவு சார்ந்தநிலையில் எழுதாமறைச் சுற்றுநிருபம் ஒன்றைத் தமக்கென்று உருவாக்கிக்கொண்டு சமூக ஒடுக்குமுறை ஆயுதமாக அந்த எழுதாமறைச் சுற்றுநிருபத்தைக் கல்விச் செயலர், மாகாண மற்றும் வலயக் கல்விப் பணிப்பாளர், பாடசாலைசார் சமூகத்தினர் பின்பற்றுவதையே அவ்வறிக்கை புரியவைக்கிறது.
16.06. 2014 அன்று உதயன் பத்திரிகையில் “இலங்கை ஆசிரியர் சங்கம் எதிர்ப்பு” என்ற சிறிய தலைப்பில் இச்சம்பவம் தொடர்பாக வெளியான செய்தியில் “வடக்கில் கல்விப் புலத்தில் தொடரும் இத்தகைய அராஜகத்துக்கு எதிராகத் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும்”49 என்று எச்சரிக்கப்பட்டும் உள்ளது.
இவ்விடத்தில் சாதியத்திற்கு எதிராக உடுப்பிட்டிச் சந்தியில் போராட்டம் நடத்திய தங்கவடிவேல் மாஸ்ரரின் வழியில் வந்த இன்றைய இளைஞர் யுவதிகளின் பங்கும் மறுக்க முடியாதது. நீதிக்காகப் போராட்டம் நடத்திக் கோசமிட்ட உடுப்பிட்டி இளைஞர், யுவதிகளின் உண்மைக் கலகக்குரல் பைபிளைவிடவும் தேவார திருவாசகங்களைவிடவும் மேலானதுதான். ஆளுநர் நிர்வாகத்துக்கு இடையூறானவர் என்று கருதி அவரை நீக்க வேண்டும் எனப் பொங்கும் தமிழ் அரசியல்வாதிகளும் வாக்குக் கேட்டு வருவார்களேயன்றி இத்தகைய அநீதியைக் கண்டு கொள்வதில்லை. இந்த விடயத்தில் ஆளுநர் எடுத்த முடிவு சரியானது என்பதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பும் ஒரு ஆதாரம். நீதிக்காக ஒரு பெண் அதிபர் தென்னிலங்கையில் பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த சட்டத்தரணி சாவியா பீரிஸ் அவர்களை நாடுமளவிற்கு யாழ்ப்பாணத்தில் நீதிசார் நம்பிக்கை இருக்கிறது.
ஒரு தகுதிவாய்ந்த பெண் அதிபர் சாதியின் பெயரால் ஓரங்கட்டப்பட்டமை எதனை உணர்த்துகிறது? தங்கவடிவேல் மாஸ்ரர் கூறிய புலிகளின் துப்பாக்கி நிழலில் உறங்கிய சாதியம் துயில்கலைந்து வேட்டையாடப் புறப்பட்டதை உணர்த்துகிறது. இலங்கையில் சட்டத்துறையைச் சேர்ந்த பெரும் அறிஞர்கள் என்று கருதப்படுபவர்களும் பல்கலைக்கழக அறிஞர்கள் என்று கருதப்படுபவர்களும் பொதுச் சேவையில் உயர்நிலையாளர் என்று கருதப்படுகிறவர்களும் பெரும்பாலும் உடுப்பிட்டிப் பாடசாலைகளில் இருந்துதான் உருவானவர்கள். பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த பிரதம நீதியரசர் சிரானி பண்டாரநாயக்காவுக்கு ஆதரவாகப் நீதிகேட்டுப் போராடிய பெருமைமிகு சட்டத்தரணியும் உடுப்பிட்டிப் பாடசாலையில்தான் கருவானவர் மட்டுமல்ல உருவானவரும்கூட. பாடசாலை வளர்ச்சியில் அக்கறை காட்டுவதாகக் கூறிவரும் உலகம் பரவிய உடுப்பிட்டிப் பழைய மாணவர்சங்கக் கிளைகளை இயக்கும் மாணவர்களும் இங்கிருந்துதான் உருவாகினார்கள். எனினும் இப் பிரச்சினையை அவர்கள் கண்டுகொள்ளாததும் தீர்த்து வைக்காததும் அதற்கு முகம் கொடுக்காததும் கள்ளமௌனம் சாதித்ததும் எதனால் என்பதைச் சொல்லித்தான் புரியவேண்டும் என்பதில்லை.

இது எதனை உணர்த்துகிறது? தங்கவடிவேல் மாஸ்ரர் கூறிய புலிகளின் துப்பாக்கி நிழலில் உறங்கிய சாதியம் வேட்டையாடிவிட்டு உண்டுகொண்டே அதிகார நிழலில் அமைதியாக உறங்குவதை உணர்த்துகிறது. முற்போக்குப் போராளியும் பேராசிரியருமான சிவசேகரம் ஒருமுறை கூறிய “யாரும் ஏறாத மலை மீது ஏறுவது சாதனைதான். அதைவிட ஊருக்கு நல்லதாகச் செய்யப்படுகிற சிறியதோர் காரியம் மேலானது”50 என்ற வாசகத்தை இவ்விடத்தில் நினைவுகூருவதுதான் அதிக பொருத்தமானது.
திருமதி நவமணி சந்திரசேகரம் அவர்களின் உறவினர் (சகோதரனின் துணைவி) அமரர் இரஞ்சிதம் குட்டித்தம்பி (போல் மிஸ்) அவர்கள் அதிபர் திருமதி இராஜேந்திரசிங்கம் அவர்களுக்குப்பின் அதிபர் பதவிக்குத் தகுதியானபோதும் அவரை ஓரங்கட்டுவதற்குக் கையொப்பவேட்டை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது விடுதலைப்புலிகள் இயக்கத்தின் அருண் மாஸ்ரர் தலையிட்டு, உரியமுறையில் கையொப்பவேட்டையை வேட்டையாடி அமரர் இரஞ்சிதம் குட்டித்தம்பி (போல் மிஸ்) அவர்களுக்குத் தகுதிமுறையில் கிடைக்கவேண்டிய பதவியைச் சாதிய அரக்கனின் வாயில் இருந்து பிடுங்கிக்கொடுத்தமை பலரும் அறிந்ததே.
பேராசிரியர் ராஜன்கூல் திருமதி நவமணி சந்திரசேகரன் அம்மையாருக்கு இழைக்கப்பட்ட அநீதி பற்றித் தனது ஆய்வின் இறுதிப் பகுதியைப் நிறைவுசெய்கிறார்.
“Caste mentality is the thin end of the wedge that opens the door to widespread disregard for the rules, rank favouritism and debasement of merit in our educational environment. The most subtle weapon in the hands of those in power is deniability, by distorting the rules and maliciously throwing doubt on the credentials of those who have been cheated" 51
ஊடகங்களும் ஆய்வாளர்களும் இப் பிரச்சினையை விவாதித்த அளவிற்கும் பதிவுசெய்த அளவிற்கும் முக்கியத்துவம் கொடுத்த அளவிற்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக எழுதுகிறோம் என்று முழங்கும் எழுத்தாளர்களும் பல்கலை விற்பன்னர்களும் பறக்கமுடியா மரக்கொக்குகளாக மௌனம் சாதித்தமைதான் எல்லாவற்றை விடவும் வேடிக்கையானது.
கல்விப் புலத்தில் தொடர்ச்சியாக நடைபெறும் இத்தகைய சிறுமைத் தன்மைகளை அகற்றுவதற்காகப் போராடுவது ஒடுக்கப்படுவோரின் உரிமையும் கடமையும் ஆகும். அதே நேரத்தில் பிறசாதியினரிலும் உண்மை மனிதாபிமானிகள் இருக்கிறார்கள் என்ற உண்மையையும் மறந்துவிடக்கூடாது. அவர்கள் கண்ணியத்திற்கும் கௌரவத்திற்கும் உரியவர்கள். எழுத்தாளர்களில் அசையாத நெஞ்சுரம் படைத்த டானியல், சி.கா.செந்திவேல், சி.சிவசேகரம், ரவீந்திரன், ஆகியோரைத் தவிர, பிற புனைகதையாளர் எவரையும் தங்கவடிவேல் மாஸ்ரர் ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்களை மறுதலிப்பவர்களாகவே அவர் இருந்தார். போராட்டங்களில் பங்குபற்றாத வெள்ளை வேட்டி எழுத்தாளர்களையோ அவர்களது எழுத்துக்களையோ தங்கவடிவேல் மாஸ்ரர் கண்டுகொள்வதில்லை. தன் சமூகத்தோடு ஒட்டாது வாழும் ஒருவன் பிறசமூகம் அடக்குவதைப் பற்றிப் பேசுவதற்கும் எழுதுவதற்கும் அருகதையற்றவன் என்பதே அவரின் துணிபு.
நான் மதிக்கும் மூத்த எழுத்தாளர் ஒருவரை அவரது இல்லத்தில் ஒருமுறை சந்தித்திருந்தேன். சாதியத்தை எதிர்த்து எழுதுபவர்களில் அவரும் ஒருவர் என்று கருதப்படுபவர். அற்புதமான எழுத்தாளர். கருத்தியல் கூர்மையும் அழகியல் மேன்மையும் அவர் புனைவுகளில் கோலோச்சும். அவருடன் உரையாடிக்கொண்டிருந்தபோது ‘நெல்லியடி தடங்கன் புளியடி முருகமூர்த்தி ஆலய மண்ணைத் எனது கால்கள் ஒருபோதும் மிதியா’ என்று கூறினார். காரணத்தை வினவினேன். தமிழில் ஒரு பெருங்காவியத்தை எழுதிய கவிஞனின் பெயரால் வடமராட்சியில் அவ் ஆலயமண்டபத்தில் ஒரு கிளைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டபோது அதில் தன்னை ஒரு முக்கிய உறுப்பினராகத் தான் பிரசன்னமான வேளையில் தெரிவுசெய்துவிட்டு பின்னர் தன்னை நீக்கிவிட்டனர் என்று கூறினார். கேட்பதற்கு அதிர்ச்சியாக இருந்தது.
யுத்தத் தீ மூண்டெரிந்த காலத்தில் சாதியச் சுவடுகளைச் சமூகநோக்குடன் ‘இன்னுமா” சிறுகதையில் இரண்டு பாத்திரங்களில் உரையாடலில் மின்னல் தெறிக்கக் காட்டியவர், அவர். பாத்திரங்கள் பின்வருமாறு உரையாடுகின்றன. ‘அது சரி தம்பி… ஆரார் ஆரார் உங்க செத்ததாம்?’ “நீங்கள் கவலைப்படாதையுங்கோ அண்ணே… எங்கடை ஆக்கள் ஒருத்தரும் இல்லை. அதூஉ… எல்லாம் சமரபாகுப் பள்ளரும் இலந்தைக்காட்டு நளவருந்தானாம்”.52 இவ் உரையாடலின் சமூக யதார்த்தத்தைப் பார்த்து எழுத்தாளரின் சமூக நோக்குக் குறித்து வியந்துபோயிருந்தேன்.
அதுமட்டுமல்ல, மூன்றாவது மனிதனில் வெளிவந்த அவரது நேர்காணல் ஒன்றில் “தேசிய இனப்பிரச்சினையினுள்ளே சாதியம் மறைந்துபோய்விட்டதாகச் சாதியத்தை வளர்க்க விரும்புகின்றவர்களே சொல்லிக்கொண்டிருக்கின்றனர்”53 என்றும் குறிப்பிட்டும் இருந்தார்.
ஆனால் சில ஆண்டுகளின் பின்னர் பெருங்காவியத்தை எழுதிய கவிஞனின் பெயரால் தலைநகரில் அமைந்த அமைப்பின் பொன்னாடையையும் மலர்மாலையையும் விருதினையும் ஏற்றுத் தன் ஓர்ம விரதத்தினை முடித்துக்கொண்டார், அவர். அவர் “நெல்லியடி தடங்கன் புளியடி முருகமூர்த்தி ஆலய மண்ணைத் தனது கால்கள் ஒருபோதும் மிதியா” என்று ஓர்மத்துடன் கூறியபோது எனக்கு ஏற்பட்ட அதிர்ச்சியைவிட இது பெரும் அதிர்ச்சியாகவிருந்தது. இதை அவர் மேலான எல்லா மரியாதைகளோடுந்தான் பதிவுசெய்கிறேன். அற்புதமான ஒரு வெள்ளை வேட்டி எழுத்தாளனின் அவலமான சரிவு இது. ஒடுக்குமுறைக்குள் இருந்து புறப்பட்டவன் மறுபடியும் அதற்குள் அகப்படுவதில்லை. புறாவும் வேடனும் கைகுலுக்கிக்கொண்டதாக வரலாறு கூறுவதும் இல்லை.
இது தவிர, சில சமூகங்களில் தம்மைத் தாமே தலைவர்களாகக் கருதியும் “எழுச்சித் தந்தை” என்று தமக்குத்தானே லேபிள்களைப் போட்டும் தமது சமூகத்துடனேயே ஒட்டாது தம்மை அங்கிகரிக்க வேண்டும் என்பதற்காகவும் புகழ வேண்டும் என்பதற்காகவும் உயர்நிலை அதிகாரிகளுடன் ஒட்டுண்ணி வாழ்க்கை நடத்தியும் தங்கள் படங்களைத் தாங்களே அட்டையில் போட்டு ஒளிவட்டப் படம் காட்டியும் தாம் ஆடுவதற்குத் தாமே ஒப்பனை செய்வதுபோலத் தமக்குத்தாமே கௌரவங்களுக்கான ஏற்பாடுகளைச் செய்தும் தமது சமூகத்தவர்களுக்குள்ளேயே தாம் ஏற்றத்தாழ்வு பார்த்துக்கொண்டும் தமது சமூகத்தை நன்கு புரியாத மதியுரைஞர்களை வைத்து அவர்கள் பெயரில் தம் காரியத்தை நிறைவேற்றி வருவதும் சமூக “எழுச்சிப்பாதை” என்பதன் அர்த்தம்கூடப் புரியாமல் வீழ்ச்சிப்பாதை நோக்கியே செயலாற்றுபவர்களும் தங்கவடிவேல் மாஸ்ரரின் அடிச்சுவடுகளை ஊன்றிப் படிக்கவேண்டும்.
எனக்கு நன்கு தெரிந்த சமூக முன்னேற்றக் கழகங்களின் சமாசம் ஒன்று தனது ஆறம்சக் கொள்கைகளில் ஒன்றாக ஒடுக்கப்பட்டவர் எனக்கருதுவோரின் அரசியல் பிரவேசத்தைக் கொண்டிருந்தது. ஆனால் பின்னாளில் ஒடுக்கும் சமூக மதியுரைஞர்களின் ஆசீர்வாதத்துடன் ஆறுமுகநாவலரின் ஒழுக்க விதி போன்ற ஒரு விதியை ஆறாவதாக ஏற்று முன்னையதை மாற்றிக்கொண்டது. இது குறித்த சமூக மக்களின் ஆணையின்றியே நடந்தேறியதுதான் அவலத்திலும் அவலம். இதற்குக் காரணம் குறித்த சமூகத்தின் எழுச்சித் தந்தை எனத் தன்னைத்தானே தம்பட்டம் அடிக்கும் ஒருவர் தனக்கு விழா எடுத்து மலர் வெளியிடுவதன்றி வேறெதுவும் இல்லை. இத்தகைய சமூகப் போலியாளர் பல்கலைக்கழகத்தில் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஒரு சமூகவியல் பேராசிரியரிடம் தனது புகழ்பாடும் அந்த மலருக்கு வாழ்த்துரை பெற்றுத்தருமாறு என்னை விடாப்பிடியாகப்பிடித்துக் கொண்டபோது நானும் அதனை விடாமுயற்சியால் விலத்திக் கொண்டேன். இதற்கு முன்னர் இதே புகழ்மகுடிப் பெரியார் தனது சமூகத்தைச் சேர்ந்த பேராதனைப் பல்கலைக்கழகச் சமூகவியல் மாணவர் ஒருவரிடம் தன்னைப்பற்றி ஒருநூல் எழுத வேண்டும் என்றும் தானே தகவல்களும் பணமும் தருவதாகவும் கூற அந்த மாணவர் அந்த அநீதிக்குச் சம்மதிக்காது அதனை என்போன்றவர்களிடம் கூறியும் உள்ளார். நீதியான அந்த மாணவர் இப்போது மேலைநாட்டுப் பல்கலைக்கழகம் ஒன்றில் சமூகவியல் துறையில் யாழ்ப்பாணத்துச் சாதிமுறைமை தொடர்பாகக் கலாநிதிப்பட்ட ஆய்வை மேற்கொண்டு வருகிறார். யாழ்ப்பாணச் சாதியமைப்புத் தொடர்பாகச் சில நூல்களையும் வெளியிட்டுள்ளார்.
இத்தகைய போலிக் காவடி ஆட்டக்காரர்களுக்குத் தங்கவடிவேல் மாஸ்ரர் போன்ற சமூகப் போராளிகளின் வாழ்க்கை நல்லதொரு கற்கைநெறி. போலிக் காவடியாட்டக்காரர்கள் தங்கவடிவேல் மாஸ்ரர் போன்றவர்களின் வாழ்க்கைநெறியில் இருந்துதான் சாதியப் பேயோட்டும் மந்திரத்தைக் கற்றுக்கொள்ள வேண்டும்.
அமெரிக்கன் மிஷன் கல்லூரியில் இருந்து மாஸ்ரர் ஓய்வுபெற்றபோது அவருக்கு வழங்கிய பெறுமதிமிக்க பரிசில்களையும் கல்லூரிக்கென்றே வழங்கி நின்ற வெறுங்கையான வெளிச்சம் அவர்.
சாதி வெறித்தனம் போன்றதே தமிழின வெறியும் சிங்கள இன வெறியும் எனத் தங்கவடிவேல் மாஸ்ரர் அடிக்கடி கூறுவார். மனிதகுலப் பிரச்சினைகளுக்குரிய தீர்வினைப் பாட்டாளி வர்க்க அரசியலால்தான் ஏற்படுத்த முடியும் என அவர் நம்பினார். “தண்ணீர்விட்டோ வளர்த்தோம் சர்வேசா இப் பயிரைக் கண்ணீரால் காத்தோம் கருகத் திருவுளமோ” என்ற பாரதியின் கவி வரிகள் சாதியப் போராட்டம் ஓயும்போதெல்லாம் அவர் வாயில் ஒலித்தன. சாதிவிடுதலைக்குப் பின்பே உலக விடுதலை சாத்தியமாகும். சமூக விடுதலைக்குப் பின்பே உலக விடுதலை சித்திக்கும் என்றும் அவர் கூறுவார். சமூக விடுதலைக்கான போராட்டத்தில் இயங்கும் தோழர்களின் மத்தியில் அவர் ஒருமுறை பின்வருமாறு கூறினார்
“அடித்தட்டு மக்களுடைய வர்க்க குணாம்சம் எப்படியானது என்று நீங்கள் படித்திருப்பீர்கள். சாதிய எதிர்ப்புப் போராட்டத்திற்குப் பிறகுதான் சமூக விடுதலைக்குப் பிறகுதான் முழுநாட்டிற்கும் விடிவுவரும். அதன் பின்னர்தான் முழு உலகத்திற்கும் விடிவுவரும். அந்த விடிவு ஒருநாள் முழு உலகத்தையும் ஆட்சி செய்யும். ஆகையால் நம்பிக்கையோடு இருங்கள் தோழர்களே. எந்த நேரத்திலும் எதற்கும் அஞ்சாதீர்கள்”.54
தங்கவடிவேல் மாஸ்ரரின் ஆளுமை ஒரு தனிமனிதனில் வெளிப்படவேண்டும் என்று கூறவரவில்லை. அந்த ஆளுமை ஒரு தனிமனிதனில் வெளிப்படத்தேவையில்லை. குறைந்தது ஒரு நூறுபேர் சேர்ந்து இன்னொரு தங்கவடிவேல் மாஸ்ரராகச் செயற்படலாம். அவ்வாறு செயற்படும்போது சமூக விழிப்புணர்வு இயக்கமாக அது உருவாகும். ஒடுக்கப்பட்ட சமூகத்தவர் அனைவரும் ஒன்றிக் கலந்த இயக்கமாக அது உருவாக வேண்டும். அது வரலாற்றுத் தேவையும்கூட. பாராளுமன்ற அரசியல் மற்றும் உள்ளுராட்சி அரசியலில் ஒடுக்கப்பட்டவர்களின் உரிமை பற்றிய நம்பிக்கை வரட்சியே நிலவுகிறது. “தாழ்த்தப்பட்ட மக்களின் குறிப்பிட்ட உரிமைகளும் அவற்றுக்கான வெற்றிகளும் பாராளுமன்றத்தால் அல்லாது புரட்சிகரமான போராட்டங்களினாலே பெறப்பட்டன”55 என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. எனவே நாவலர் வளர்த்த சைவவேளாளத் தீண்டாமை நோயை அரசியலை ஆயுதமாகக் கொண்டு போராட ஒன்றிணைவதே தங்கவடிவேல் மாஸ்ரருக்கு நாம் செலுத்தும் அஞ்சலியும் கொடுக்கும் மரியாதையும் ஆகும்.
தமிழ் இலக்கணத்தில் தொகைநிலை, தொகாநிலை என்ற இரண்டு தொடர்கள் உள்ளன. உருபு மறைந்து வருவதைத் தொகைநிலை என்றும் உருபு மறையாது வெளிப்பட்டு வருவதைத் தொகாநிலை என்றும் கூறுவர். அதுபோல இன்றைய ஈழத்துத் தமிழ்ச் சமூகத்தில் சாதியப் பயில்நிலைக்கு இலக்கணம் வகுத்தால் சாதியம் மறைவில் செயற்படுவதைத் “தொகைநிலைச் சாதி” எனவும் சாதியம் வெளிப்படையாகச் செயற்படுவதைத் “தொகாநிலைச் சாதி” எனவும் குறிப்பிடலாம். “இன்றைய ஈழத்துத் தமிழ்ச் சமூகம்” என்ற தொடருக்கும் “தொகைநிலைச் சாதியும் தொகாநிலைச் சாதியும்” என்ற தொடருக்கும் பொருள்நிலை வித்தியாசம் எதுவும் இல்லை. தங்கவடிவேல் மாஸ்ரரின் எண்ணம், சொல், செயல் அனைத்துமே தொகைநிலையாகவும் தொகாநிலையாகவும் இருக்கும் சாதி ஒடுக்குமுறைக்கெதிராகப் போராடியவைதாம்.
எழுத்தாளர் ஷோபாசக்தியின் பின்வரும்கூற்றுடன் இக் கட்டுரையை நிறைவு செய்யலாம். “சாதியத்தின் வேரே இந்துமதம்தான் என்ற உரையாடலே நமது சமூகத்தின் அறிவுத்தளத்திலும் கிடையாது. பொதுப் புத்தியிலும் கிடையாது. வேரை விட்டுவிட்டு இலைகளைக் கிள்ளிக்கொண்டு இருந்தால் பெரு விருட்சம் சாயாது.”56

 • அடிக்குறிப்புகள்
 • 1. ஆறுமுகநாவலர். (1960) சிவாலய தரிசன விதி, கொழும்பு: இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம்.ப.20.-->>>

  2. ஆறுமுகநாவலர் (1959) சைவ வினா விடை - இரண்டாம் புத்தகம், சென்னை: வித்தியாநுபாலன அச்சகம்.ப:57.-->>>
  3. மேலது. ப:57.-->>>
  4. மேலது. ப:58.-->>>
  5. மேலது. ப:63.-->>>
  6. மேலது. ப:55.-->>>
  7.https://www.youtube.com/watch?v=fKAv3mAMCKc-->>>
  8. சண்முக சுப்பிரமணியம்(தொ.ஆ.) (2010) கம்ய10னிஸ்ட் கார்த்திகேயன் : நகைச்சுவை-ஆளுமை-தீர்க்கதரிசனம், இலங்கை: முற்போக்குக் கலை இலக்கிய மன்றம். ப.60.-->>>
  9. மேலது. பக். 58-61.-->>>
  10. வெகுஜனன், இராவணா. (2007) இலங்கையில் சாதியமும் அதற்கெதிரான போராட்டங்களும், சென்னை: சவுத் வி~ன்.ப.118.-->>>
  11. https://www.youtube.com/watch?v=fKAv3mAMCKc -->>>
  12. https://www.youtube.com/watch?v=fKAv3mAMCKc-->>>
  13. https://www.youtube.com/watch?v=fKAv3mAMCKc -->>>
  14. https://www.youtube.com/watch?v=fKAv3mAMCKc-->>>
  15. https://www.youtube.com/watch?v=fKAv3mAMCKc-->>>
  16. https://www.youtube.com/watch?v=fKAv3mAMCKc-->>>
  17.https://www.youtube.com/watch?v=fKAv3mAMCKc-->>>
  18.சண்முக சுப்பிரமணியம்(தொ.ஆ.) (2010) மு.கு.நூ. ப.2.-->>>
  19.மேலது. பக்.1-4.-->>>
  20. https://www.youtube.com/watch?v=fKAv3mAMCKc-->>>
  21.சண்முக சுப்பிரமணியம்(தொ.ஆ.) (2010) மு.கு.நூ. ப.6.-->>>
  22.மேலது. பக்.22-23.-->>>
  23.விரிவுக்குப் பார்க்க:https://www.youtube.com/watch?v=fKAv3mAMCKc------->
  24.மேற்கோள்: அருணாசலம், க. (1997) ‘நெஞ்சம் நிறைந்த பேராசிரியர் தில்லையர்’. பேராசிரியர் சி. தில்லைநாதன் அவர்களின் மணிவிழா மலர், பேராதனை – கண்டி: மணிவிழாச் சபை. ப.14.-->>>
  25.சண்முக சுப்பிரமணியம்(தொ.ஆ.) (2010) மு.கு.நூ. ப.24.-->>>
  26.விரிவுக்குப் பார்க்க: https://www.youtube.com/watch?v=fKAv3mAMCKc-->>>
  27.தகவல்: திரு எஸ்.சிவானந்தம் (ஓய்வு பெற்ற ஆசிரியர்- உடுப்பிட்டி அமெரிக்கன் மிசன் கல்லூரி) 11.08.2015.-->>>
  28.சுதர்சன், செல்லத்துரை. (தொ.ஆ.)(2010) சாவதும் புதுவதன்றே – மரணம் பற்றிய கவிதைகள் மற்றும் கவிதைசார் எழுத்துக்களின் தொகுப்பு
  ‘நான் வளர்ந்த கருப்பை – எம்.ஏ.நுமான்’ வல்வெட்டித்துறை: அமரர் கு.குணசிங்கம் நினைவு வெளியீடு. ப.11.-->>>

  29. https://www.youtube.com/watch?v=fKAv3mAMCKc-->>>
  30.ஷோபாசக்தி (2014) முப்பது நிறச் சொல் : நிறம்-கதை-படிமம், சென்னை: கருப்புப் பிரதிகள். ப.158.-->>>
  31. https://www.youtube.com/watch?v=fKAv3mAMCKc -->>>
  32. https://www.youtube.com/watch?v=fKAv3mAMCKc-->>>
  33. https://www.youtube.com/watch?v=fKAv3mAMCKc-->>>
  34. https://www.youtube.com/watch?v=fKAv3mAMCKc-->>>
  35. https://www.youtube.com/watch?v=fKAv3mAMCKc -->>>
  36. https://www.youtube.com/watch?v=fKAv3mAMCKc -->>>
  37. https://www.youtube.com/watch?v=fKAv3mAMCKc-->>>
  38.டொமினிக் ஜீவா (ஏப்ரல்-மே 1997) மூன்றாவது மனிதன் - இதழ் 4, ‘நேர்காணல்’, அக்கரைப்பற்று - இலங்கை. ப.8.-->>>
  39.https://www.youtube.com/watch?v=fKAv3mAMCKc-->>>
  40.விரிவுக்குப் பார்க்க: (ஜனவரி-மார்ச் 2000) மூன்றாவது மனிதன் - இதழ் 7, ‘நேர்காணல்’, அக்கரைப்பற்று - இலங்கை. பக்.7-17.-->>>
  41.ஷோபாசக்தி (2007) வேலைக்காரிகளின் புத்தகம், ‘வசந்தத்தின் இடிமுழக்கம் - ஒக்ரோபர் 21 எழுச்சியின் நாற்பதாவது வருட நினைவுகளும் பாடங்களும்’, சென்னை: கருப்புப் பிரதிகள். ப.41.-->>>
  42. ஷோபாசக்தி (2014) மு.கு.நூ. ப.158-159.-->>>
  43. ஷோபாசக்தி (2007) மு.கு.நூ. ப.35-36.-->>>
  44. https://www.youtube.com/watch?v=fKAv3mAMCKc-->>>
  45. https://www.youtube.com/watch?v=fKAv3mAMCKc-->>>
  46. வெகுஜனன், இராவணா.(2007) மு.கு.நூ. ப.166.

  -->>>


  47.Rajan Hoole, Palmyra Fallen என்ற நூலிலும் குணசிங்கம் பக்கங்கள் என்ற கையேட்டிலும் “உடுப்பிட்டி மகளிர் கல்லூரிக்கான ஆளுநரின் அதிபர் நியமனம் சரியானது என மேன்முறையீட்டு நீதிமன்று தெரிவிப்பு” என்ற தலைப்பில் 17.05.2014இல் உதயன் பத்திரிகையில் வெளியான செய்தியிலும் “உடுப்பிட்டி மகளிர் கல்லூரி அதிபர் கடமையேற்க வேண்டும் மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு” என்ற தலைப்பில் 15.06.2014 வீரகேசரிப் பத்திரிகையில் வெளியான செய்தியிலும் “உடுப்பிட்டி மகளிர் கல்லூரி அதிபராக திருமதி.நவமணி கடமைகளை இன்று பொறுப்பேற்கின்றார்” என்ற 16.06.2014 அன்று உதயன் பத்திரிகையில் வெளிவந்த செய்தியிலும் “கடமைகளைப் பொறுப்பேற்றார் உடுப்பிட்டி மகளிர் கல்லூரி அதிபர்” என்ற தலைப்பில் 17.06.2014 உதயன் பத்திரிகையில் வெளிவந்த செய்தியிலும் “சுற்றுநிருபங்களைப் பின்பற்றாததால் வடபுலகல்வித் துறையில் குறைபாடுகள் - இலங்கைத் தமிழாசிரியர் சங்கம் குற்றச்சாட்டு”என்ற தலைப்பில் யாழ் தினக்குரலில் 03.12.2013 அன்று வெளியாகிய இலங்கைத் தமிழாசிரியர் சங்கப் பொதுச்செயலாளர் சரா. புவனேஸ்வரனின் அறிக்கையிலும் இது பற்றி விரிவாக அறியமுடியும்.-->>>

  48. Sunday Times, November 09, 2014.page:10.-->>>
  49.விரிவுக்குப் பார்க்க: 16.06. 2014 உதயன் பத்திரிகை.-->>>
  50.சிவசேகரம்,சி. (ஜனவரி-மார்ச் 2000) மூன்றாவது மனிதன் - இதழ் 7, ‘நேர்காணல்’, அக்கரைப்பற்று - இலங்கை. ப.12.-->>>
  51. Hoole, Rajan . (2015) Palmyra Fallen: From Rajani to War|s End, Jaffna: University Teachers for Human Rights.p.381.-->>>
  52. தெணியான். (1996) மாத்து வேட்டி (சிறுகதைத் தொகுப்பு), யாழ்ப்பாணம்: மல்லிகைப் பந்தல்.ப.99.-->>>
  53.தெணியான். (ஜனவரி-மார்ச் 2003) மூன்றாவது மனிதன் - இதழ் 16, ‘நேர்காணல்’, அக்கரைப்பற்று - இலங்கை. ப.04.-->>>
  54. https://www.youtube.com/watch?v=fKAv3mAMCKc-->>>
  55. வெகுஜனன், இராவணா. (2007) இலங்கையில் சாதியமும் அதற்கெதிரான போராட்டங்களும், சென்னை: சவுத் விஷன்.-->>>
  56.ஷோபாசக்தி (2014) முப்பது நிறச் சொல் : நிறம்-கதை-படிமம், சென்னை: கருப்புப் பிரதிகள். ப.168.-->>>

 • (இக் கட்டுரை பிரான்ஸ்-பாரிஸில் இருந்து வெளிவரும் 'ஆக்காட்டி' சஞ்சிகையில் இருந்து பெறப்பட்டது. 'ஆக்காட்டி'குழுவினருக்கும் கட்டுரையாசிரியருக்கும் மிக்க நன்றிகள்)


 • கட்டுரையாளர் செல்லத்துரை சுதர்சன் அவர்கள் இலங்கை பேராதனைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை விரிவுரையாளர்.

  Sunday, August 23, 2015

  ஈழத்தமிழ் சமூகத்தின் குறுக்கு வெட்டு தோற்றம்
  புத்தகம் பேசுது

  தீண்டத்தகாதவன் : ஈழத்தமிழ் சமூகத்தின் குறுக்கு வெட்டு தோற்றம்

  சு.பொ.அகத்தியலிங்கம்  “காசிக்குப் போனாலும் கர்மம் தொலையாது” என்று ஒரு சொலவடையுண்டு; இதன் உட்பொருள் அவ்வளவு பாவம் செய்திருக்கிறாய் என்பதுதான் . படித்தாலும் , பணம் சேர்ந்தாலும்,நாடுவிட்டு நாடு போனாலும் , போர்க்களத்திலும் , நேற்றும் , இன்றும் ஈழத்தமிழ் சமூகத்தை வதைத்துக் கொண்டிருக்கும் கொடும் பிரச்சனை தீண்டாமை; இச்சிறுகதைத் தொகுப்பின் ஊடும் பாவும் இதுதான். ஈழத் தமிழ் சமூகத்தின் குறுக்குவெட்டுத் தோற்றம் நம்மை உறைய வைக்கிறது. தமிழ்நாட்டின் நகலா கவே இது தோற்றமளிக்கிறது. இக்கதைகளின் வழக்கு மொழியையும், கதைக்களத்தையும் மட்டும் மாற்றினால் போதும் இன்றைய தமிழகச் சூழலுக்கு நூறு விழுக்காடு கனகச்சிதமாகப் பொருந்தும்.
  எட்டாண்டுகளுக்குப் பிறகு மறுபதிப்பு கண்டிருப்பினும் வெப்பமும் வீச்சும் சற்றும் குறையவில்லை. ஏனெனில் தீண்டாமை இன்னும் உறுத்தும் ரணமாகவே உள்ளது.13 எழுத்தாளர்களின் 17 சித்திரங்கள் . ஒவ்வொரு கதையாய் சொல்லவே ஆசை . நூலறிமுகத்தில் அதற்கு இடமில்லை . என்.கே.ரகுநாதன் எழுதியுள்ள “ நிலவிலே பேசுவோம்” என்ற இரண்டாவது கதை இன்றைய தமிழகத்துக்கு உரிய கதை . யாரேனும் குறு வீதி நாடகமாகவே அரங்கேற்றலாம். மதுவை ஒழிக்கப் புறப்பட்ட காந்தியவாதி சிவப்பிரகாசத்தைச் சந்திக்க சில இளைஞர்கள் வருகின்றனர் . அவரும்தெருவுக்கு வந்து நின்றபடியே விவாதம் . “ ….. காந்தியின் பேரைச் சொல்லி மது ஒழிக்கக் கிளம்பிவிட்டீர்களே ! முதலில் தீண்டாமையை ஒழிக்க வேண்டாமா?” என்றது அந்தக்குரல் . ..கதை முடிவில் ; “வெளியே நல்ல நிலவு அங்கே போய் பேசிக்கொள்ளலாம் என சிவப்பிரகாசம் சொன்னதின் அர்த்தத்தைப் புரிந்து கொள்ள அவர்களுக்கு அதிக நேரம் செல்ல வில்லை.
  ”அவன் வெளிநாடு போய் சம்பாதித்து கைநிறைய காசோடு தன் சகோதரிக்கு ஒரு இடம் வாங்கிக் கொடுக்க நினைக்கிறான் . ஒரு மேல்சாதிக்காரரின் நிலத்தை கிரயம் பேசச் செல்கிறான் .அங்கு “ நீங்கள் வந்து படலையில் நிண்டு கூப்பிடுங்கோ,நான் வருவேன்” எனக் கண்டிப்பாக அவர் சொல்லிய வார்த்தைகளில் தெறித்தது சாதி ஆணவம் . . தெணியான் எழுதிய “ வெளியில் எல்லாம் பேசலாம்” என்கிற சிறுகதை இப்படிப் பேசுகிறது .
  ஒடுக்கப்பட்ட மக்களிடையே உள்ள சாதிப் பிளவுகளும் வன்மமும் மா.பாலசிங்கத்தின் “ கோடாரிக்காம்பில்” பேசப்படுகிறது .வெளிநாட்டில் குடியேறிய போதும் விடாது கருப்பெனத் துரத்தும் சாதிய ஆணவத்தை மெல்ல ஆயின் அழுத்தமாய்ப் பேசும் அருந்ததியின் “கேள்விகள்” “கண்ணைக் கசக்கிக் கொண்டே ஓடிவந்து ‘பொறு சிந்தாமணி’ என்று சொல்லிவிட்டு , தண்ணீர் அள்ளி , சிந்தாமணியின் பானையில் தண்ணீர் வாளி படாதவாறு மிகக் கவனமாக நுட்பமாக தட்டாமல் முட்டாமல் ஊற்றினாள்” ஆம் இனப்போர் அவர்களை உருத்தெரியாமல் குலைத்துப் போட்டபின்னும் கிஞ்சிற்றும் குறையாத சாதி அகம்பாவத்தை காட்சிப் படுத்தும் அ. தேவதாசனின் “ கண்ணி” தன் வேலைக்கு வேட்டுவைத்து தீங்கு செய்தவர் விதானையார் எனினும் அவரது பெண்குழந்தை கிணற்றில் தவறி விழுந்த போது காப்பாற்றினான் அவன் . அவரோ மறுநாள் கிணற்றை இறைத்து தூய்மை செய்தார் . டொமினிக் ஜீவாவின் “ காலத்தால் சாகாது” நெற்றியடியாய் தீண்டாமையை வஞ்சகத்தை தோலுரிக்கிறது . கே .டேனியல் , எஸ்பொ கதைகளுக்கு கேட்கவா வேண்டும் ?
  “யாழ்ப்பாணச் சமூகத்தில் இன்றளவும் தொடரும் சாதியக் கட்டமைப்பை இலக்கிய வழி நின்று புரிந்து கொள்ள உதவும் இத்தொகுப்பு . தேசிய இனப்போராட்டம் குறித்த மாயைகளில் ஒன்றைத் தகர்த் தெறிகிறது” என முன்னுரையில் அ,மார்க்ஸ் சொல்லியிருப்பது மிகை அல்ல . மார்க்ஸின் இரண்டு முன்னுரைகளும் பொருள் பொதிந்தவை .வரலாற்றுச் செய்திகள் அறியவும் உதவும் .. எனினும் அதில் நாம் மாறுபட வேண்டிய ஒரிரு இடங்களும் உண்டு .
  கட்டுரைகளில் எவ்வளவு அழுத்தமாய் சொல்லினும் கதைகள் வழி இதயத்தோடு பேசுதல் போல் ஆகுமோ ? இத்தொகுப்பு காலத்தின் தேவை .படியுங்கள் .பரப்புங்கள் . ஒல்லும் வகையெல்லாம் சாதியத்துக்கு எதிராக எழுவோம்
  தீண்டத்தகாதவன்,
  ஈழத்து தலித் சிறுகதைகள் .
  தொகுப்பு : சுகன்,
  வெளியீடு : பாரதி புத்தகாலயம் ,
  7 ,இளங்கோ தெரு , தேனாம் பேட்டை ,
  சென்னை – 600 018.
  பக் : 174 , விலை : ரூ.130


  நன்றி : தீக்கதிர் , புத்தக மேசை 9-08-2015.

  Monday, July 6, 2015

  மனிதம்

  நான் மேதமை வாய்ந்த எழுத்தாளன் அல்ல.ஒரு சாதாரணன்.என்னை யாரும் உருவாக்கவில்லை. வாசிப்பின் மூலம் நான் இந்த இடத்திற்கு வந்திருக்கிறேன்.எனது முன்னோர்களைப் பின் தொடரும் ஏகலைவன் நான்.என் துரோணாச்சாரியர்கள் பலர். அவர்கள் சத்திரியர்களுக்கு குருவாக இருந்தவர்களல்ல.உலகெங்குமுள்ள அடித்தட்டு மக்களின் மாணவர்களாக இருந்தவர்கள். அவர்களிடமிருந்து கற்றதை நான் எழுதுகிறேன். நேற்றும் இப்படித்தான் எழுதினேன், இன்றும் இப்படித்தான் எழுதுகிறேன், நாளையும் இப்படித்தான் எழுதுவேன்.ஒரு உண்மை, உன்னதங்களைத் தேடி நான் எழுதுவதில்லை. எழுதவும் மாட்டேன்.எழுதவே மாட்டேன்.
  ============================================================================================================== மனிதம்
  அவன் இறந்து போனான் ...
  பழங் கோவிலின் உருக்குலைந்து போன கரும் கட்டிடம்போல அவனது உடலும் சிதறிச் சின்னா பின்னப் பட்டுப் போய் விட்டது. கடற்கரை இருந்து ஆவேசத்தோடு திசைற்று சீறிவரும் குண்டுகளின் வெறித்தனத்திற்குத் தப்பிக் கொள்வதற்காக புகலிடம் தேடிவந்த தருணத்தில் அவனும் அவனது குடும்பத்தில் சிலரும் இப்படியாக மரணித்துப் போனார்கள். சவக்காலையின் தென்புறத்து ஆலமாரத்திற்கு இடப்புறம் வெள்ளம் ஓடும் பனை வடலிக்கரை செம்மண் தரையில் அவனதும், அவனது மனைவியதும்,இரண்டு பிள்ளைகளினதும் சடலங்கள் பரவிக் கிடந்தன. முன்தினம் பகல் அந்த விபரீதம் நடக்குமுன் அவர்கள் அறுவராகப்புறப்பட்டிருந்தார்கள். அவன் ,அவனது மனைவி, மூன்று பிள்ளைகள், தொழில் உதவிக்கென தன்னிடம் வைத்திருக்கும் வவுனியாவிலிருந்து கூட்டிவந்த சிறுவன். வடக்கிலிருந்து காற்றைக் கிழித்து வந்து சிதறி வெடித்து உயிர்களைப் பறித்துகொண்ட அந்தக் குண்டு வெடித்து ஒரு இரவு கழிந்து நெடு நேரம். அந்தக் கணமுதல்...சூரியன் மறைந்து தோன்றிய இந்த நேரம்வரை அந்த இரண்டு சீவன்களும் அதே ஆலமரத்தின் கீழ். ஊர் பதுங்கிக் கிடந்தது. அழுதழுது கண்ணீர் வற்றி....பசி....சோர்வு....நித்திரைக் களைப்புடன் அந்த பிஞ்சுவும் அந்த சிறுவனும்...சிதைவுற்ற உடல்களை வெறித்த தென ஒரு பார்வை.
  குண்டுச் சத்தங்கள் ஓய...ஊரில் சில சலசலப்பு ....குசு குசுப்பு..
  “முத்துவும்...பெண்டிலும் ..செத்துப் போச்சுதுகளாம்.. “
  பயம்...வெருட்சி....துயரம்...
  “ஆர் போய்ப் பாக்கிறது ? என்னெண்டு பாக்கிறது ..?”
  நெடு நேரம் கழித்து துணிந்த கிழடு ஒன்று புறப்பட்டது.
  தனிமை ...வெறுமை...பயம்...
  ஆலமரத்தின் கீழ் அதே நிலையில் அந்தச்சிறுவனும், பிஞ்சுவும்..
  விரைவாக நடந்த அந்த கிழம், பரபரப்போடு அவர்களை நெருங்கி ..சிறுவனின் மடியில் இருந்த சிறிசுவை. ஆதரவோடு வாங்கியது தலையைச் சரித்து துவளும் குழந்தையின் களைப்பில் கிழவன் சகலதையும் புரிந்து கொள்ள....
  “தம்பி ...பிள்ளைக்கு பசி ....நான் கொண்டுபோய் தேத்தண்ணி.யாவது பருக்கிறன்...உமக்கும் பசி ..நீரும் வாரும்...”
  சோர்ந்து இருந்த சிறுவனின் குரல் தளதளத்தது விம்மினான்.
  “ எனக்கும் பசிக்குது தான் ...நானும் உங்களோட வந்திட்டாக்கா ஐயாவையும் அம்மாவையும்..காகம் கொத்திப்போடும் ...நீங்க தங்கச்சியை கொண்டுபோங்க...”
  நன்றி: ஈழமுரசு, 1987

  Wednesday, July 1, 2015

  நந்தினி சேவியரின் "அயற்கிராமத்தைச் சேர்ந்தவர்கள் "எனும் இச் சிறுகதை மல்லிகை இதழில் 1972 ஆண்டு வெளிவந்தது. தலித் இலக்கியத்தின் சிறந்த முன்மாதிரிகளில் ஒன்றாக இன்றும் மிளிரும் இச் சிறுகதை ஒடுக்கப்பட்டோருக்கான ஐக்கியம், வாழ்வின் அடித்தளம் ஆகியவற்றை இலக்கிய அமைதியுடன் கூறிச்செல்பவை.

  சிறுகதை:

  அயல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் 

  -நந்தினி சேவியர்
  நந்தினி சேவியர்

  நாங்கள் வழமைபோல குந்தியிருக்கும் ஞான வைரவர் கோவில் ஆலமரத்தின் கீழ் குந்தியிருந்தோம். சின்னையரின் தேநீர்க்கடை இன்னமும் திறக்கவில்லை. முன்புறத்துத் தட்டியை இழுத்துச் சாத்திக் கட்டியிருக்கும் கயிற்றின் முடிச்சு வழமைபோல இறுகியே இருந்தது. மனிதர் காலைக் கடன்களை முடித்துக்கொண்டு தட்டியை அவிழ்க்க ஆறுமணியாகிவிடும். அது எங்களுக்குத் தெரிந்துதானிருந்தது. காலைநேர வயிற்றுப் புகைச்சலைத் தவிர்க்க சின்னையர் போட்டுத்தரும் தேநீருக்காக நாங்கள் காத்துக்கிடந்தோம். எங்களது அணியச் சாமான்கள் ஒதுக்குப்புறமாக விழுதுகளில் சாய்த்து வைக்கப்பட்டிருந்தன .
  முதல்நாள் ஆறுமுகத்தானின் "வாய்ச்சி "ஆணியொன்றில் பட்டுவிட்டதால் எங்களது அணியத்தில் ஒரேயொரு பொருள் மட்டும் குறைந்திருந்தது .

  "கம்மாலைக்குப் போய் அதைத் தோய்வித்துவிடவேண்டும்"
  என்று ஆறுமுகம் அடிக்கடி முனகிக்கொண்டிருந்தான். வலதுகை ஊனமாகிவிட்டது போன்ற மனவருத்தம் அவனுக்கு. ஆப்புகளைப் போட்டுக் கட்டியிருக்கும் சாக்குப் பையையும்வல்லுட்டுக் குத்தியையும் எடுக்கப்போன செல்லையன் இழுகயிறை எடுத்துவரும் கந்தனோடு தொலைவில் வருவது தெரிந்தது. வாய்க்கசப்பைத் தீர்க்க வெற்றிலையைக்கூடப் போடமுடியாமல் சின்னையர் கடைத்தட்டியைத் திறப்பதை எதிர்பார்த்துக் காத்துக்கிடந்தோம். அந்த அதிகாலை வேளையில் எம்மைப்போல் எத்தனையோ மனிதப் பிரகிருதிகள் இப்படித் தொழிலுக்குத் புறப்பட்டுப் போவதையும் காத்துக் கிடப்பதையும் நாங்கள் மனப்பூர்வமாக அறிவோம்.  வாழ்க்கைச் செலவினங்கள் அதிகரித்துக்கொண்டுபோகும் இந்த நாட்களில் எம்போன்றோரின் அவல நிலைகளை நாம் எமக்குள் எண்ணிப்பார்த்துப் புழுங்குவோம். எமது கைகளின் வலுவானது சற்றுத் தொய்யுமாக இருந்தால் நாம் மழை இல்லாத பயிர்களாகிவிடுவோம் என்பது எமக்குத் தெரியாமலில்லை. இவற்றைப் பற்றிச் சிந்திக்குந்தோறும் நாம் உணர்ச்சிவசப்பட்டுவிடுவோம்.

  எங்களது மனைவி மக்கள் எங்களோடு சேர்ந்து பாடுபட்டபோதிலும் எம்மால் அன்றாடச் செலவுகளைக் கூடச் சரிக்கட்டமுடியாது சங்கடங்கள் எறபடுவதைப் பற்றித் தீவிரமாக சம்பாஷிப்போம். படிப்பறிவற்ற எம்மைப்போன்றோருக்கு இவையாவும் புதிர்களாக இருந்த காலமொன்றிருந்தது. நமது பிள்ளைகளை நாம் ஓரளவிற்குப் படிக்கவைத்தோம் .அவர்கள் ஓரளவிற்காவது நமக்குச் சகலவற்றையும் விளக்கக்கூடிய வல்லமை பெற்றவர்களாக இருந்தார்கள். எமது கிராமம் பின்தங்கிய நிலையிலிருந்து விடுபட எமது வாலிபப் பிள்ளைகள் உற்சாகத்தோடு உழைத்தார்கள்.  நாமும் அதற்கு உடந்தையாக இருந்தோம். எமது கிராமம் ஒரு மாறுபட்டவித்தியாசமான - மறுமலர்ச்சியுடன் புத்துயிர் பெற்று வருவதை நாம் அவதானிக்கக் கூடியதாக இருந்தது. இதற்கு எல்லாம் மூல காரணம் எமது ஒற்றுமையும் விட்டுக்கொடுக்கும் தன்மையும் நமது பிள்ளைகளின் உற்சாகமுமே.

  எங்கள் கிராமத்தில் அநேகமானவர்கள் கூலித் தொழிலாளிகளாகவே இருந்தோம். ஆண்கள், பெண்கள் ,வாலிபர்கள், முதியோர்கள் என்ற வித்தியாசம் இன்றி நாம் கூலித் தொழில் செய்து சீவியம் போக்காட்டவேண்டியிருந்தது. நாம் கிணறு வெட்டுதல், மண்சுமத்தல், கல்லுடைத்தல், ஆகிய தொழில்களுடன் பனை அடித்தல், துலா வெட்டுதல், போன்ற தொழில்களிலும் ஒரளவு தேர்ச்சி பெற்று இருந்தமையினால் எமக்குள்ளே போட்டிகளும் பொறாமைகளும் இருக்கவில்லை. அப்படியான ஒரு நிலைமை ஒருகாலத்தில் இருந்ததென்னவோ உண்மைதான். அவை மிகுந்த அவமானத்திற்கும் அசூசைக்குமுரிய பழைய மடிந்துவிட்ட நிலைமைகள்செத்துப்போன அந்தக் காலத்தைப் பற்றி நினைக்கும் தோறும் நாம் எமக்குள் மிகுந்த வெட்கமடைவோம்இந்த ஒரு நிலைமையே எங்களை ஐக்கியமாக்க உதவியதெனலாம்.  காலை நேரங்களில் நாம் அந்த ஞான வைரவர் கோவில் ஆலமரத்தின் கீழ் கூடுவோம்கலட்டி பூவற்கரைத் திடல், முடவானை, குச்சம் முதலிய கிராமத்தின் மனிதர்கள் சந்திக்கும் கேந்திர பூமி அதுஅங்கு சின்னையரின் தேநீர்க்கடையில் சூடாக ஏதாவதை வயிற்றினுள் தள்ளியபின் சிதறு தேங்காய்களாக நான்கு திக்கும் பிரிந்து உழைக்கச் செல்வது நமது அன்றாட அத்தியாவசிய கைங்கரியமாக இருந்துவரும் நித்திய கருமம்மைமலில் சோர்வுடன் திரும்பிய பிறகு எமது உடல்களைச் சற்று ஆசுவாசப்படுத்தியபின் எமது குடில்களின் ஒதுக்குப்புறமாக எமது மக்களின் முகங்களைப்போல இறுகி வெடித்துப் பிளந்து கிடக்கும் பொட்டல் வெளியில் கூட்டமாகக் கூடி இரவு இறுகும்வரை சம்பாசித்துக்கொண்டிருப்போம்.  எங்களில் குடிவெறிகாரர்களும் இருந்தோம்ஆனாலும் அந்த நிலையில் நாம் எமது குடிசைகளுக்குள் போய் முடங்கிக்கொள்வோம்எமது மனைவிமாருக்கும் எங்களுக்கும் இடையில் வாக்குவாதங்களும் வக்கணைகளும் சிலநேரங்களில் மூண்டுவிடுவதுமுண்டுஅப்போது எல்லாம் மற்றவர்கள் தலையிட்டுச் சமாளிக்கும் ஒரு நிலையை ஏற்படுத்தாமல் நாமே அடங்கிப்போகும் ஒரு பழக்கத்தை நாம் உண்டாக்கிக்கொண்டோம்பிறருக்கு இடையூறாக நாம் இருக்கவிரும்புவதுமில்லைபிறர் எம்மை அதற்கு அனுமதிப்பதுமில்லை.

  எம்மைப்போல் தம்மை ஆக்கிக்கொள்ளாத உதிரிகள் சிலர் எம்மிடையே இல்லாமலில்லைஅவையும் தொங்கு தசையாகிக் கிழடு தட்டிவிட்ட மனிதர்கள்தாம்அவர்களின் எண்ணிக்கை மிகமிகச் சொற்பமாகவே இருந்தது.  அந்த மனிதர்களைப்பற்றி நாம் கோபிப்பது இல்லைகாரணம் நிதர்சனத்திலேயே அவர்களை எமக்குப் புரிந்திருந்ததுகாலம் எமக்குச் சரியான திசையைக் காட்டிக்கொண்டிருந்ததுநாம் தெளிவு பெற்றுக் கொண்டிருந்தோம்எம் கண்முன் ஒரு பாதை தெரிந்துகொண்டிருந்ததுஅதன்வழியே நாம் நமது சந்ததியை வழிநடத்திச் செல்வதற்கு ஊக்கமாக இருந்தோம்வழமைபோலவே சின்னையர் நெடுநேரம் காத்திருக்க வைக்கவில்லைஅவர் தட்டியைத் திறப்பதற்கு நாம் உதவி செய்தோம்தேநீர்க்கடை சுறுசுறுப்பாகத் தொடங்கிவிட்டதுஅடுப்பின் புகையோடு சுகந்தமான சாம்பிராணிப் புகையும் காற்றில் மிதந்ததுஉற்சாகமாக சின்னையர் போட்டுத்தந்த தேநீரைப் பருகிவிட்டு வல்லுவங்களை அவிழ்த்து வெற்றிலையைக் குதப்பியபடி அணியங்களைத் தோளில் ஏற்றிக்கொண்டு நாம் நடக்கத்தொடங்கினோம்.

  பிள்ளையார் கோவிலடித் தோட்டவெளியில் இறங்கி  கூவிலை நோக்கி எம் கால்கள் நடந்தன. முதல்நாள் நாம் துண்டுபோட்ட பனையில் இன்று சிலாகைகள் அடிக்கவேண்டியிருந்ததுஎங்களது கால்கள் சற்று வேகமாக நடக்கத்தொடங்கினமாயக்கைக் குளத்தை அண்மி நாங்கள் நடந்தபோது எட்ட நிற்கும் பனை வடலிகளை ஊடறுத்து அழுகுரல் சத்தம் கேட்டதுநாம் துணுக்குற்றுச் செவிமடுத்தோம்காற்றிலே மெல்லிய ஒப்பாரியின் அனுங்கல் பரவிவந்ததுஎமது கால்கள் நிதானித்தன.  நாங்கள் கண்களை வடலிகளை நோக்கி எறிந்து நடந்தோம் .தூரத்தில் மாயக்கை முருகன் காலெறிந்து நடந்து வருவது எமக்குத் தெரிந்ததுநாம் அவனருகில் கடுகி நடந்தோம்அவன் கூறிய சம்பவம் எம்மை மிகுந்த அதிர்வுக்கு உள்ளாக்கியது. நாம் திகைத்து நின்றோம்எங்களது பால்ய நண்பன் கிட்டினன் பனையால் விழுந்து இறந்துவிட்டான் என்ற செய்திதான் அது.  நாம் வடலிக்குள்ளால் விழுந்து கிட்டினன் வீட்டை நோக்கி ஓடினோம்வெட்டிப்பிளந்துவிட்ட மரம் எங்களைக் காத்துக் கிடக்கிறதென்ற நினைப்பே எங்களுக்கு மறந்துபோய்விட்டதுநேற்று மாலை நிகழ்ந்துவிட்ட அந்தச் சம்பவத்தை நாம் அப்போதுதான் அறிந்தோம்எங்களுக்கு மிகுந்த கவலை ஏற்பட்டிருந்ததுகிட்டிணனை நாம் சிறுவயதிலிருந்தே அறிவோம்அவன் மிகுந்த உற்சாகமான ஒரு தொழிலாளி .துணிச்சல் நிறைந்தவன்யாருக்கும் பயப்படாதவன் முரடன்.   எங்களுக்கும் அவனுக்கும் இடையில் இருந்த அந்த நட்பு மானசீகமானது

  அது நெருக்கமானதும் பவித்திரமானதும்கூட. சகல தொழிலாள விவசாயிகளைப்போல அவனிடமும் எங்களிடமும் இழப்பதற்கு ஒன்றுமே இருக்கவில்லைஇந்த நிலைமையும் நமது இறுக்கமான பிணைப்புக்கு ஒரு காரணமாக இருக்கலாம்நேற்று முன்தினம் கூட அவன் எங்களைத் தேடிக் கிராமத்திற்கு வந்திருந்தான்தனக்கும் ஊரில் சில  பெரிய மனிதர்களுக்குமிடையில்  ஏற்பட்ட விரோதங்கள் பற்றியெல்லாம் அப்போது அவன் எங்களிடம் பூடகமாகக் கூறினான்தன்னுடைய சமூகத்தவர்களைத் தன்னுடன் நின்று கதைக்கத் தடை விதிக்கப்பட்டிருப்பதாகவும் கூறினான்.   அந்த மக்கள் மிகுந்த பயமுள்ளவர்களாக இருந்தமையால் கட்டுப்பாடிற்குள் அடங்கிக் கிடப்பதாக அவன் மனமுடைந்து மிக விசனப்பட்டான்நாமும் அதைப்பற்றிக் கவலை தெரிவித்தோம்இன்று அவன் இறந்துவிட்டான்தங்களின் ஒற்றுமையின்மையைப்  பற்றி மனமுடைந்தவன் தனிவழிப் பயணம் புறப்பட்டுவிட்டான்எமது கால்கள் கிட்டினனது வீட்டினுள் பிரவேசித்தபோது அவன் வீட்டின் முன்பு சிறு பந்தல் போட்டு வெள்ளை கட்டப்பட்டிருந்தது. கிட்டினனது சடலம் பெரிய கட்டிலொன்றில் வளர்த்தப்பட்டிருந்ததது. அவனது தலைமாட்டில் குத்துவிளக்கொன்று அழுது வடிந்துகொண்டிருந்தது. கிட்டிணனின் மனைவி தங்கச்சியம்மாவும் மகள் செல்லக்கண்டுவும் பெரிதாக ஒப்பாரி வைத்துக்கொண்டிருந்தார்கள்

  நாங்கள் எங்கள் அணியச் சாமான்களை வைத்துவிட்டு கிட்டிணனை அருகில் சென்று பார்த்தோம் .எமது கண்கள் பனித்து நீரைச் சிந்தின. அன்று எங்களுக்கு வேலைக்குப் போகும் எண்ணமே மறந்துவிட்டது. அயல் கிராமத்து அந்த மனிதனுக்காக நாம் அங்கே நின்றிருந்தோம்முருகன் எல்லாக் கிராமங்களுக்கும் 'இழவு' அறிவித்திருந்தான்எமது கிராமத்திலிருந்தும் பலர் வந்திருந்தார்கள்எங்களது பையன்களும் வந்திருந்தார்கள்சந்தைக்குப் போனவர்கள் திரும்பினர்செத்தவீட்டில் செய்யவேண்டிய அலுவல்கள் நடைபெற்றுக்கொண்டிருந்தன.   நாம் முற்றத்து வேலியோரம் பனை நிழல்களில் குந்தியிருந்து சுருட்டுக்களைப் பற்றுவதும் வெற்றிலைகளை சப்புவதுமாக கிட்டினனைப்பற்றிச் சம்பாசித்துக்கொண்டிருந்தோம்.  நேரம் கடந்துகொண்டிருந்ததுநாங்கள் அயல் கிராமத்து அந்த மனிதனுக்காக எழுந்திருந்து உதவி செய்ய முனைந்தோம்இரண்டு பூவரசம் கதிகால்களைத் தறித்து கிட்டிகளைப் பிணைத்து நாம் பாடை வேலைகளைத் தொடங்கிவிட்டோம்ஆறுமுகம் பன்னாங்கு பின்னும் காரியத்தில் இறங்கியிருந்தான்மாயக்கையின் மனிதர்களது முகங்கள் இறுகிச் சோர்ந்து கிடப்பதை நாம் அந்த வேளையிலும் அவதானிக்காமல் இல்லை. அதன் அர்த்தம் எங்களுக்குப் புரியவுமில்லை. சூரியன் உச்சியைக் கடந்துவிட்டான். மூன்று மணிக்குமேலிருக்கும் போலிருந்தது.  வந்த மனிதர்கள் பலர் விடை பெற்றுச் சென்றுவிட்டார்கள்.   நாமோ காத்து இருந்தோம்அந்த அயல் கிராமத்து மக்கள் மௌனமாக உலாவிக்கொண்டுந்தார்கள்அவர்கள் ஏதோ பயத்தினால் பீடிக்கப்பட்டவர்களாய் ஒதுங்கி ஒதுங்கி நடந்துகொண்டிருந்தார்கள்.  எமக்குப் பொறுமை எல்லைகடந்துவிட்டது . முருகனைக் கைச்சாடை காட்டிக் கூப்பிட்டான் ஆறுமுகம்.

  "என்ன ஆரேனும் .... இன்னும் வரவேணுமே...?"
  "இல்லை ...ஆறுமுகம் "
  "வந்த சனமெல்லாம் போகுது, எப்ப எடுக்கப்போறியள்...?"

  முருகன் விம்முவது எங்களுக்குப் புரிந்தது.   ஏதோ விபரீதம் நடக்கப்போவதாக அவன் அழுவதும் எங்களுக்குத் தெரிந்தது.  ஆறுமுகம் எங்களருகில் விரைந்து வந்தான் . எமது பையன்களும் எமது கிராமத்து மனிதர்களும் வந்தார்கள்.
  "கிட்டினன்ரை சவத்தைக் காவ ஒருத்தரும் போகக்கூடாது என்று தடை விதிச்சிருக்காம், காவச் சம்மதிக்கிறாங்களில்லை....பயப்படுறாங்கள்."

  எமக்கு எல்லாம் புரிந்துவிட்டது. சனத்தின் அழுகுரலையும் அதற்குப் பங்குபோடும் மனிதர்களையும்  விட்டு நாம் சற்று ஒதுக்குப் புறமாக நடந்தோம்.  முருகனைத் தனியே அழைத்து மற்றவர்களைக் கூட்டிவரும்படி கூறினோம். அவர்கள் -ஆண்கள் -தயங்கியபடி எங்களருகில் வந்தார்கள். ஆறுமுகம் சற்றுச் சூடாக அவர்களைப் பார்த்துப் பேசினான்.
  "நீங்கள் ...பயந்தவர்கள் ...ரோசமில்லாதவர்கள் "

  "எப்படியும் அவங்களிட்டைத்தானே நாங்கள் பிழைக்கிறம். ..எங்களுக்கு உதவியில்லை" அவர்கள் தலைகுனிந்து பேசினார்கள்.
  "நாங்கள் இருக்கிறம்...பயப்படாதையுங்கோ...கிட்டினனைப்போல இருங்கோ"  ஆறுமுகம் பேசினான். மாயக்கை வாழ் மனிதர்கள் துணிந்து நிமிர்ந்த அந்த நேரம் நாம் துணிச்சலைக் கொடுத்தவர்கள் என்பதைக் காட்டாமல் ஒதுங்கி நின்றோம். அவர்கள் பரபரப்போடு சவத்தைக் குளிப்பாட்டி வாய்க்கரிசி போட்டு விரைவாகச் செயற்பட்டார்கள். எல்லாம் பரபரப்பாக நடந்து முடிந்தன. முருகன் தேவாரம் பாடினான்.

  " கூற்றாயினவாறு ....விலக்ககலீர் கொடுமைபல செய்தன ...."

  முன்னே கொள்ளிச் சட்டியுடன் கிட்டிணனின் புத்திரர் நடக்க அவர்களின் பிறகே வேலியைப் பிரித்துக் கிட்டிணனின் சவம் நாலு மாயக்கை மனிதர்களின் தோளில் ஏறிப் புறப்பட்டது. நாம் எமது கோடரிகளையும் வாய்ச்சிகளையும் தோள்களில் ஏற்றியபடி சவத்துக்கு முன்னும் பின்னும் நடந்தோம். நம்மில் சிலர் பின்தங்கி கிட்டினனது வீட்டில் காவலுக்கு நின்றார்கள். சுடலையைச் சமீபித்தும் கூட நாம் எதிர்பார்த்தது போல் எதுவும் நடக்கவில்லை. சவம் கட்டையில் வளர்த்தப்பட்டு நெஞ்சாங்கட்டை வைக்கப்பட்டது . சவத்தைச் சுற்றி நடந்த கிட்டிணனின் மூத்த பையன் கொள்ளிக்குடம் கொத்தப்பட்டதும் சம்பிரதாயமாகக் கொள்ளிவைத்தான். அது முடிந்ததும் காவோலைகளைக் கொளுத்தி நெருப்பைப் பெரிதாக்கினார்கள் மாயக்கை வாழ் மக்கள்.  நாங்கள் மெதுவாக அங்கிருந்து நகரத் தொடங்கினோம்எம்மில் சிலர் சுடலையிலும் எரிப்பவர்களுக்கு உதவியாக நின்றிருந்தார்கள்.
  அந்த அயல் கிராமத்து மனிதர்களுக்கு அன்றும்சரி அதற்குப் பிறகும்சரி எதுவித தீங்கும் பிறரால் நேரவில்லை.   அவர்களும் எங்களைப்போல் தங்களையும் ஆக்கிக்கொள்வதற்கு நாம் உதவியாக இருந்தோம்ஒருநாள் அவர்கள் எங்களைப் போலவே  தங்களை ஆக்கிக்கொள்வார்கள்.

  (மல்லிகை : 1972 )