|
| நாம் மலையகத் தமிழர் எமது தாயகம் மலையகம் |
| Monday, June 30, 2008 |
நாம் மலையகத் தமிழர் எமது தாயகம் மலையகம் ஏ.லோறன்ஸ் B.A

மலையக தமிழ் மக்களை, மலையக தமிழ் மக்கள் என்று அழைப்பதா? அல்லது இந்திய வம்சாவளித் தமிழ் மக்கள் என்று அழைப்பதா? எனக்கருத்து வேறுபாடு, அண்மைக் காலங்களில் நிலவுகின்றது. இந்த சர்ச்சை கிளப்பப்பட்ட பின்பே, “இந்திய வம்சாவளித் தமிழர்” என்ற பதம் பற்றி சிந்திக்கப்படுகின்றதேயொழிய, பொதுவாகவே மலையக மக்கள், அவர்கள் நுவரெலியா மாவட்டமாக இருந்தாலும் சரி, பதுளை, கண்டி, இரத்தினபுரி ஆகிய மலை மாவட்டங்களாக இருந்தாலும் சரி, தலைநகராகிய கொழும்பாக இருந்தாலும் சரி, வடகிழக்கில் வவுனியா, கிளிநொச்சி மாவட்டமாக இருந்தாழும் சரி, 80 சதவீதமான மலையக தமிழ் மக்கள், தம்மை, ஏற்கனவே “மலையக மக்கள்” என்றே அழைத்துக் கொள்கின்றனர். தம்மை அறிமுகப்படுத்தும் போது பெருமையாக “மலையகத் தமிழர்” என்றே அறிமுகப்படுத்துகின்றனர். ஆகவே இந்த கட்டுரையில் மலையக மக்கள் என்ற பெயர் உருவாகிய விதம், அப்பெயர் உருவாக்கத்தின் வரலாற்றுப் பின்னணி, அப்பெயர் இந்திய வம்சாவளி என்ற பதத்தையும் விட, எந்த விதத்தில் விஞ்ஞான பூர்வமானது, தர்க்க ரீதியானது, மலையகத் தமிழ் மக்களின் அபிலாசைகளை எவ்வளவு தூரம் பிரதிபலிக்கின்றது, என்பதை, ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
மலையக தமிழ் மக்கள் ஓர் தனியான சிறுப்பான்மை தேசிய இனமாவர்
 மலையக தமிழ் மக்கள் ஓர் தனியான தேசிய இனமாவர். அந்த தேசிய இனம் உருவாவதற்கான பின்புலமாக அமைந்ததே “மலையகம் தான்” என்பது ஓர் மறுக்க முடியாத உண்மையாகும். இந்த நாட்டின் 1000 அடிகளுக்கு (300 மீட்டர்)மேற்பட்ட மலைப் பிரசேதங்களிலேயே நிலையான பெருந்தோட்டப் பயிர்களாகிய தேயிலை, இறப்பர் ஆகிய பெருந்தோட்டப் பயிர்கள் பயிரிடப்பட்டன. இந்தப் பெருந்தோட்டப் பொருளாதாரத்தின் ஆரம்பத்துடனேயே, இலங்கையில் முதலாளித்துவ பொருளாதாரமும் அதன் விளைவாக இந்த நாடு, பல தேசிய இனங்களை கொண்ட நாடாகவும் உருவாகியது. அதற்கு முன்பு இலங்கை நிலப்பிரப்புத்துவ அமைப்பில் பல இராஜதானிகளைக் கொண்டு விளங்கியது. ஆகவே மலையகத் தமிழ் தேசிய இனத்தின் உருவாக்கமே 1000 அடிகளுக்க மேற்பட்ட மலை சார்ந்த பகுதிகளில் இம் மக்கள் பிரித்தானிய ஏகாதிபத்தியத்தால் கொண்டு வந்து குடியேற்றப்பட்ட பிறகுதான் உருவாக்கம் பெற்றது. மலையகத் தமிழ் தேசிய இனமொன்று உருவாக்கத்திற்கு எந்த காரணிகள் துணையாக இருந்ததோ அந்த காரணிகள்தான் “மலையகத் தமிழர்” என்ற பெயரை கொண்ட பிரிவினரையும் உருவாக்கியது. அம்மக்கள் அந்தப் பெருந்தோட்டப் பொருளாதாரத்துடன் தொடர்புடைய புவியியல் தன்மையுடன் நமது இனத்தினது பெயரையும் இணைத்துக்கொண்டனர். ஆகவே “மலையகத் தமிழர்” என்ற வரலாற்று உணர்வு ஏற்பட்டதுதான் முக்கியமே தவிர, அது எந்த தசாப்தத்தில், எந்தக்கால கட்டத்தில் என்பது முக்கியமல்ல. ஆகவே மலையக மக்கள் ஓர் தனியான தேசிய இனம் என்ற கருத்து உருவாக்கம் பெற்று அக்கருத்து ஆழமாகவும் வேகமாகவும் வேரூன்றும் இக் காலகட்டத்தில் மலையக தமிழ் மக்களை மலையக தமிழ் மக்கள் என்று அழைப்பதா அல்லது இந்தியவம்சாவளியினர் என்றழைப்பதா என்ற தேவையற்ற வாத பிரதிவாதங்களை முன்வைப்பது அவர்களை அடிப்படை அரசியல் பிரச்சினையிலிருந்து திசைத்திருப்பும் முயற்சியாகும். வரலாற்று சக்கரத்தை பின் நோக்கிச் சுற்றும் பிற்போக்கு நடவடிக்கையாகும். அம்மக்கள் தொடர்பாக பல முக்கிய விடயங்கள் முன்வைக்கப்படும் போது இந்தப் பெயர் சம்பந்தப்பட்ட சர்ச்சைக்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை விட இம்மக்கள் தொடர்பான பிரச்சினைகளுக்கு கூடுதலான பிரச்சார முக்கியத்துவம் கொடுப்பதுடன் மலையக தமிழ் மக்கள் மத்தியில் அவர்கள் பிரச்சினை தொடர்பாக ஒட்டு மொத்தமான கருத்துருவாக்கதை உருவாக்க முயற்சிக்க வேண்டும்.
மலையக தமிழர் என்று அர்த்தப்படுத்தும் போது, அதில் ஓர் புவியியல் பிரதேசம் உள்ளடங்கியிருப்பதோடு இந்நாட்டில் இருக்கும் கிட்டத்தட்ட 30 இலட்சம் தொழிலாளர்களைக் கொண்ட தொழிலாளர் வர்க்கத்தின் ஒரு பகுதியினரான 10 இலட்சம் தோட்டத் தொழிலாளர்களும் இத்தொழிலாளர் வர்க்கத்தில் உள்ளடக்கப்படுகின்றனர். ஆகவே இந்த 10 இலட்சம் தோட்டத் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ள தோட்டத் தொழிலில் பின் புலத்தையும் பெரும்பான்மையான அத்தொழிலாளர்களை அடையாளங் காட்டுவதாக மலையக தமிழர் என்ற பதம் விளங்குகிறது. ஆகவே மலையக தமிழர் என்பது ஒரு சொற்பதம் மாத்திரமல்ல அது வரலாற்றின் ஒர் உருவாக்கம். இந்த நாட்டின் முதலாளித்துவ பொருளாதாரத்தின் தோற்றத்துடன் தோற்றுவிக்கப்பட்ட பொருளாதாரத்தின் விளைவு. இன்று இந்திய தமிழன் என்பதை விட “மலையக தமிழன்” என்று அழைப்பது சர்வ சாதாரணமான வழக்காறாகிவிட்டது. ஆகவே தோட்டத் தொழிலுக்காக இங்கு வந்து, இலங்கையில் பல பகுதிகளில் ஒன்றரை நூற்றாண்டுகளுக்கு மேல் ஒன்றாக வாழ்வதன் பயனாக, ஏற்பட்ட உணர்வே மலையக தமிழர் என்ற உணர்வாகும். உலகில் குறுகிய கால வரலாற்றுப் பின்னணியைக் கொண்ட தேசிய இனங்களும் நீண்ட வரலாற்று பின்னணியைக் கொண்ட தேசிய இனங்களும் இருக்கவே செய்கின்றன.
மலையகத் தமிழர்களும், அவர் தம் பரம்பலும்
இலங்கையில் ஆகக்கூடுதலாக யாழ் மாவட்டத்தில்தான் 6 இலட்சம் தமிழர்கள் வாழ்கின்றார்கள். இரண்டாவது தமிழர்கள் கூடுதலாக வாழும் மாவட்டம் நுவரெலியா மாவட்டமாகும். இங்கு கிட்டத்தட்ட 4 இலட்சம் தமிழர்கள் வாழ்கின்றார்கள். இந்த மாவட்டத்திலுள்ள மயைக தமிழர்கள் மாத்திரமல்ல பதுளை மற்றும் வவுனியா, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், மட்டகளப்பு, திருகோணமலை, காலி, மாத்தறை, கேகாலை, யட்டியந்தொட்டை பகுதி மலையக தமிழர்களும் தம்மை மலையக தமிழர்கள் என்றே அடையாளம் காட்டுகின்றனர். கீழே காட்டப்பட்டுள்ள அட்டவணை மாவட்ட ரீதியில் மலையக தமிழர்களையும் அவர்கள் கூடுதலாக வாழும் மாவட்டங்களையும் காட்டுகின்றது. நுவரெலியா மாவட்டத்தில்தான் கிட்டத்தட்ட நான்கு இலட்சம் மலையக தமிழர்கள் வாழ்கின்றனர். இங்கு 85 ஆயிரம் பேருக்குமேல் இலங்கைத் தமிழர் என்று காட்டப்பட்டிருந்தாலும் இதில் கணிசமானோர் மலையகத் தமிழர் ஆவர். ஆகவே மலையக தமிழர்களது ஜனத்தொகை நுவரெலியா மாவட்டத்தில் மாத்திரம் மூன்றரை இலட்சமாக அமையும். அட்டவணை I

(மூலம்: பிரதேச செயலகங்களுக்கான வழிகாட்டி1993, கொள்கைத் திட்டமிடல் அமைச்சு) நுவரெலியா மாவட்டத்திற்கு அடுத்த நிலையில் 1 இலட்சம் 20 ஆயிரம் பேருக்கு மேல் மலையக தமிழர்கள் பதுளை மாவட்டத்திலும், கண்டி மாவட்டத்தில் 1 இலட்சத்து 19 ஆயிரம் பேருக்கு மேலும் இரத்தினபுரி மாவட்டத்தில் 77 ஆயிரம் பேரும், அடுத்து மாத்தளை மாவட்டத்தில் 35 ஆயிரம் பேருக்கு மேலும், கேகாலை மாவட்டத்தில் கிட்டத்தட்ட 35 ஆயிரம் பேரும், களுத்தறை மாவட்டத்தில் 32 ஆயிரம் பேருக்கு மேலும், மாத்தறை மாவட்டத்தில் 14 ஆயிரம் பேரும், மொனராகலை மாவட்டத்தில் 12 ஆயிரம் பேரும் மலையகத் தமிழர்கள் பரந்து வாழ்கின்றனர். இதனைத் தவிர யாழ் மாவட்டம, வன்னி மாவட்டம், கிளிநொச்சி மாவட்டம், முல்லைத்தீவு மாவட்டம், மன்னார் மாவட்டம், மட்டக்களப்பு மாவட்டம் ஆகிய மாவட்டங்களிலும் மலையக மக்கள் பரந்து வாழ்கின்றனர். ஆனால் இதில் மூன்றில் ஒரு பங்குக்கு மேல் நுவரெலியா மாவட்டத்திலேயே மலையக தமிழர்கள் வாழ்கின்றனர். மேற்படி புள்ளி விபரங்கள் பிரதேச செயலகங்களுக்கான வழிகாட்டி என்ற கொள்கை திட்டமிடல் அமைச்சால் 1993 ம் ஆண்டு வெளியிடப்பட்ட நூலிலிருந்து பெறப்பட்டது. இதில் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கான புள்ளி விபரம் தரப்படவில்லை. அதே நேரத்தில் கொழும்பு, கம்பஹா மாவட்டங்களுக்கான புள்ளி விபரங்களில் மலையக தமிழரின் புள்ளி விபரம் தரப்படவில்லை. பொதுவாக தமிழர் என்றே மேற்படி இரு மாவட்டங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மலையக தமிழர், பிரதேச செயலக பிரிவு மட்டத்தில் நுவரெலியா அம்பகமுவ பிரதேசச் செயலக பிரிவுகளிலே தமிழர்கள் இரண்டு இலட்சத்துக்கு மேல் வாழ்கின்றனர். கொத்மலை, வலப்பனை ஆகிய நுவரெலியா மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலக பிரிவுகளிலும் கண்டி மாவட்டத்தில் உடபலாத்த, பஸ்பாகே, கோரளை ஆகிய பிரதேச செயலகங்களிலும், பதுளை மாவட்டத்தில் ஹாலியல்ல செயலக பிரிவிலும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மலையக தமிழர்கள் வாழ்கின்றனர்.
30000க்கு மேற்பட்ட ஜனத்தொகையினரைக் கொண்ட பிரதேச செயலாளா; பிரிவுகளாக பதுளை மாவட்டத்தில் பசறை, அப்புத்தளை, ஹல்மதுல்ல ஆகிய மூன்று செயலாளர் பிரிவுகளும், கண்டி மாவட்டத்தில் கங்கவட்ட கோரளையும் விளங்குகின்றன. மலையக தமிழர்கள் பரந்து வாழும் அடிப்படையில் பிரதேச செயலாளர் பிரிவுகளை நோக்கினால் 2 இலட்சத்துக்கு மேற்பட்ட இரு பிரதேச செயலகப் பிரிவுகளிலும் 30 ஆயிரத்திற்கு மேற்பட்ட 5 செயலகப் பிரிவுகளிலும் 20 ஆயிரத்திற்கு மேற்பட்ட ஜனத்தொகையை கொண்ட 11 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் மலையக தமிழர்கள் வாழ்கின்றனர். 15 ஆயிரத்திற்கு மேற்பட்ட மலையக மக்கள் வாழும் பிரதேச செயலாளர் பிரிவுகளாக நுவரெலியா மாவட்டத்தில் 5 பிரதேச செயலாளர் பிரிவுகளும் பதுளை மாவட்டத்தில் 5 பிரதேச செயலாளர் பிரிவுகளும் கண்டி மாவட்டத்தில் 4 பிரதேச செயலாளர் பிரிவுகளும் இரத்தினபுரி மாவட்டத்தில் 3 செயலாளர் பிரிவுகளும் கேகாலை மாவட்டத்தில் 1 செயலாளர் பிரிவும் மொத்தமாக 18 பிரதேச செயலாளர; பிரிவுகள் இம்மாவட்டங்களில் மலையக தமிழர் பரந்து வாழும் பிரதேச செயலாளர் பிரிவுகளாகக் காணப்படுகின்றன.
இந்தியத் தமிழர் என்ற பதம் உத்தியோகரீதியான பதமா?
இந்தியத் தமிழர்கள் என்ற பதத்தின் மூலமே நாம் அடையாளம் காட்டப்படுகின்றோம். அது நமது இனத்தைக் குறிக்கும் உத்தியோக பூர்வமான பதம் என்று சிலர் வாதிடுகின்றனர். ஆனால் மலையக மக்கள் சம்பந்தமாக 1911ம் ஆண்டு குடிசனக் கணிப்பீட்டின் பின் தான் உத்தியோக பூர்வமாக இப்பதம் பயன்படுத்தப்படுகின்றது. ஆனால் இது மலையக மக்களின் சம்மதத்துடன் பாவிக்கப்பட வில்லை. பிரித்தானியர் எம்மீது அக்கறை கொள்ளாதபடியால் இப்பெயரிலும் அவர்கள் அக்கறை கொள்ளவில்லை. பெரும்பான்மை மக்களும் மற்றும் இந்நாட்டின் மலையக மக்கள் தவிர்ந்த ஏனைய சிறுபான்மையினர் கூட நாம் இந்தியாவிற்கு திரும்பி போக வேண்டியவர்கள் என கருதினர். ஆகவே இவர்கள் இந்தியத் தமிழர் என்று அழைக்கப்படுவதே சிறந்தது என்று எண்ணினர். எனவே இந்தியத் தமிழர் என்ற சொல் எமது அபிலாசைக்குப் புறம்பாக பாவிக்கப்பட்ட பெயராகும்.
பிறப்புச் சான்றிதழ் போன்றவற்றில் இந்தியத் தமிழர் என்று பாவிக்கப்பட்டாலும் கூட அது மாற்றப்படக் கூடியது. முஸ்லீம் மக்களினது பிறப்பு சான்றிதழில் அண்மைக் காலம் வரை அவர்களது தேசிய இனத்தை உணர்த்த “மறக்கல” என்றே குறிப்பிடப்பட்டது. ஆனால் மிக அண்மை காலத்தில் பாராளுமன்றத்தில் பிறப்பு, இறப்பு பதிவுச் சட்டத்திற்கு ஒரு திருத்தம் கொண்டுவரப்பட்டு “மறக்கல” என்பதற்கு பதிலாக “இலங்கை சோனகர்” என்ற பதம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆகவே இலங்கையில் உத்தியோக பூர்வமான ஆவணங்களில் “மலையகத் தமிழர்” என்று குறிப்பிட வேண்டும் என்று பாராளுமன்றத்தில் சட்டம் கொண்டு வருவது முடியாத காரியம் இல்லை. முஸ்லீம் மக்களுக்கு செய்த காரியத்தை மலையக மக்களுக்கு செய்யக்கூடாது என்பதல்ல. இது சாத்தியமாகக் கூடியதே. உத்தியோக பூர்வமான ஆவணங்களில் குறிப்பிட்டுள்ளது போலவே வேலை வாய்ப்பிலும் எமது விகிதாசாரத்திற்கு ஏற்ப மலையகத் தமிழருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். ஆகவே மலையத் தமிழர் என்ற பதத்தை உத்தியோக பூர்வமாக மாற்ற முயற்சிக்காமல் இந்திய வம்சாவளித் தமிழர் என்ற பதத்திற்காக குரல் கொடுப்பது அர்த்தமற்ற செயலாகும். பொதுவாக இலங்கையில் வாழும் இனங்கள் பற்றி நூல்களிலோ அல்லது பொதுவான கூட்டங்களிலோ குறிப்பிடும் போது சிங்களவர், தமிழர், முஸ்லீம், பறங்கியர் அல்லது பேகர் என்று முன்னால் குறிப்பிட்டுள்ளார்கள். மலையக மக்கள் பற்றி குறிப்பிடப்படுவதில்லை. ஆயிரக்கணக்காக வாழும் பறங்கியர் பற்றி புள்ளி விபர நூல்களில் உத்தியோக பூர்வமாக குறிப்பிடப்படும் போது மலையத் தமிழ் மக்கள் என்ற பெயரை உத்தியோக பூர்வமாக்குவதும், அழைப்பதும் ஓர் பிரச்சினையான விடயமல்ல.
மலையகம் என்ற பெயரின் வரலாற்றுப் பின்னணி
1960 ஆம் ஆண்டுகளிலேயே மலையகம் என்ற பெயர் அடிபடத் தொடங்கி விட்டது. 1960களின் பின் மலையகம் மலைமுரசு என்ற பெயர்களில் பத்திரிக்கைகள் வெளிவரத் தொடங்கி விட்டன. மலையக மக்கள் தம்மை மலையகத் தமிழர் என்று அழைத்துக் கொள்ள விரும்புவதை வெளிப்படுத்துவது போல் 1970 களில் இளைஞர் அமைப்புகளும் வெகுஜன அமைப்புகளும் உருவாகின. இதில் இரா. சிவலிங்கம் தலைமையில் உருவாகிய மலையக இளைஞர் முன்னணி, வி.எல்.பெரேரா சக்தி பாலையா இவர்களின் தலைமையில் உருவான மலையக இளைஞர் பேரவை சாந்திகுமார், மரியதாஸ் ஆகியோர் தலைமையில் உருவாகிய மலையக மக்கள் இயக்கம், பீ.ஏ.காதர், வீ.டீ.தர்மலிங்கம், ஏ.லோரன்ஸ், எஸ்.தேவசிகாமணி போன்றோர் தலைமையில் உருவாகிய மலையக வெகுஜன இயக்கம், திரு. வீ. புத்திரசிகாமணி, திரு திவ்வியராஜன், நேருஜி ஆகியோர் தலைமையில் உருவாகிய மலையக ஐக்கிய இளைஞர் முன்னனி போன்ற இயக்கங்கள் “மலையகம்” என்ற மக்கள் விரும்பியதை வெளிப்படுத்துவதாகவே அமைந்தது. ஆகவே மலையகத்தில் இளைஞர் அமைப்புகள் வெகுசன ஸ்தாபனங்கள், பெண்கள் அமைப்புக்கள் என்பன மலையகம் என்ற பெயரைக் கொண்டே உருவாகியது. ஏன் மலையகத்தில் உருவாகிய தீவிரவாத அமைப்புக்கள் கூட மலையக அமைப்புகளாகவே தம்மை பிரகடனப்படுத்தின. ஆகவே இளைஞர்கள் நடுத்தர வயதினர், படித்தவர்கள், பெண்கள் என்ற பாகுபாடு இல்லாது “மலையத்தமிழர்” என்று தம்மை அடையாளம் காட்டினர். இலங்கையில் இருந்து தாயகம் திரும்பிய மலையகத் தமிழர்கூட இலங்கையில் மலையகத்தில் வாழும் மலையக மக்களை இன்னும் மலையகத் தமிழர் என்றே அழைக்கின்றனர். தமிழகத்தில் இன்று தாயகம் திரும்பியோர் மத்தியில் வெளிவரும் நூல்களில், சஞ்சிகைகளில் மலையகத் தமிழர் என்ற சொற்பதமே அதிகமாகப் பாவிக்கப்படுகின்றது.
1940 களில் இலங்கை, இந்திய காங்கிரஸ் என்ற அரசியல் அமைப்பு உருவாகினாலும் மலையகத் தமிழரின் வாக்குரிமை 1948ஆம் ஆண்டு பறிக்கப்பட்ட பின் இந்திய என்ற பதத்தைக் கொண்டு அரசியல் ஸ்தாபனங்கள் உருவாகவில்லை. மிக அண்மைக் காலத்தில் உருவாக்கிய இந்திய சமுதாயப் பேரவை என்ற கொழும்பு வாழ் வர்த்தகர்களை பிரதிநிதித்துவப்படுத்திய அமைப்பைத் தவிர வேறு அமைப்பு ஒன்றும் உருவாக்கவில்லை. தொண்டமான் இதன் தலைவர் என்று சொல்லப்பட்டாலும் தோட்டத் தொழிலாளர்கள் யாவரும் இவ்வமைப்பில் அங்கத்தவராக இருக்கவில்லை. தோட்டத் தொழிலாளர்கள் தொண்டமான் இ.தொ.கா தலைவராகவும் மலையகத் தமிழர் ஆகவும் மதிக்கின்றனர். அண்மையில் இந்திய வம்சாவளிப் பேரணி என்ற அமைப்பு இ.தொ.கா. தேசிய தொழிலாளர் சங்கம் மற்றும் பல மலையக அமைப்புகள் இணைந்து கட்சியாக ஆரம்பித்திருந்தாலும் அது தேர்தல் முடிந்தவுடன் செயலற்றுப் போய்விட்டது.
'இந்திய வம்சாவளியினர்' என்ற பதம்
இந்திய வம்சாவளியினர் என்ற பதம் இந்நாட்டில் வாழும் இந்திய வம்சாவளியினரை அதாவது பெரும் முதலாளிகளையும் அவர்களின் இந்திய நலன்களையும் பிரதிநிதித்துவப் படுத்துகின்றது. இந்திய வம்சாவளியினர் என்னும் போது சிந்து, மார்வாடிகள், நாட்டுக்கோட்டை ச் செட்டிகள், கொழும்புச் செட்டிகள், பரத குலத்தினர், கைதராமணி, இந்திய பாய்மார்கள் ஆகியோரைக் குறித்து நிற்கின்றது. இந்திய சமுதாய பேரவை என்ற அமைப்புக்குகூட மலையக மக்கள் பெரும் பான்மையாக வாழும் நுவரெலியா பதுளை இரத்தினபுரி, கண்டி, மாத்தளை மாவட்ட தோட்ட தொழிலாளர்களை குறித்து நிற்கவில்லை. இன்று கருத்து முரண்பாடுகளுக்கு உள்ளடக்கப்பட்டுள்ள “இந்தியத் தமிழர்” “மலையகத் தமிழர்” என்ற பதப்பிரயோகம் தொடர்பாக ஓராய்வை செய்தால் கூட அது 80 வீதமாக மலையகத் தமிழர் என்ற சொல்லைப் பயன்படுத்துவதை வெளிப்படுத்தும். பத்திரிக்கைகள், சஞ்சிகைகள் மற்றும் ஆய்வு நூல்களில் தினசரி தேசிய பத்திரிகைகளில், பெரிதும் பயன்படுத்தப்படுகின்றது. மலையக மக்கள் தவிர்ந்த ஏனைய இனத்தினர் கூட தற்போது மலையகத் தமிழர் என்ற சொல்லையே பாவிக்கின்றனர். மலையகத் தமிழர் என்று குறிப்பிட விரும்பாத இந்தியாவில் இருந்து வந்த தமிழர்கள் குறைந்த வீதத்தினராக இருக்கலாம். ஆனால் பெரும்பான்மையான மலையகத் தமிழர்கள் தம்மை மலையகத் தமிழர் என்றே அழைக்கவே விரும்புகின்றனர். மலையகத் தோட்ட தமிழர்களோடு இணைந்து மலையகத் தமிழர் என்று கூற விரும்பாதவர்களைப்பற்றி நாம் கூடுதலாக அலட்டிக் கொள்ளத் தேவையில்லை. மலையக மக்களின் அபிலாசை அவர்களது இனத்துவம், தனித்துவம், தன்னடையாளம், கலாசாரம், அவர்கள் வாழும் பிரதேசம் என்பவற்றின் தனித்துவம் பாதுகாக்கப்படுவது மிக அவசியமானதாகும். இதன் மூலமே இவர்கள் உரிமையும் அவர்களது பிரதேசமும் பாதுகாக்கப்படும். ஆகவே மலையக மக்கள் எழுச்சிக்கு இந்த மண்ணோடு இணைந்து மலையகத் தமிழர் என்ற பெயர் ஒரு தூண்டுகோலாகும். எழுச்சியை ஏற்படுத்தும் பெயராகவும் அமைவதோடு இந்திய வம்சாவளித் தமிழர் என்ற பதத்தை விட தர்க்கரீதியாகவும் விஞ்ஞான பூர்வமானதாகவும் யதார்த்த பூர்வமானதாகவும் அமையும்.

மாறாக இந்திய வம்சாவளி என்றபதம் முதலாளித்துவ வர்க்க பிரதிநிதிகளைக் குறித்து நிற்கின்றது. மலையகத் தமிழர் பதம் 80 வீதமான தோட்டத் தொழிலாளர்களையும் மற்றும் பிற தொழிற்துறையில் ஈடுபட்டுள்ள மலையக புத்தி ஜீவிகள், படித்தவர்களை குறித்து நிற்கின்றது. ஜனதாவிமுத்தி பெரமுன என்றழைக்கப்பட்ட மக்கள் விடுதலை முன்னனியால் முன்வைக்கப்பட்ட இந்திய விஸ்தரிப்பு வாதம் என்ற வகுப்பில் கூறப்பட்டவர்கள் மேற்படி வசதிபடைத்த முதலாளிகளேயாவர். ஆனால் ஜே.வீ.பி. காரர்கள் தோட்டத் தொழிலாளர்களை சுட்டிக் காட்டி இந்திய விஸ்தரிப்பு வாதிகள் என்று கூறியது அவர்களுக்கிருந்த இனவாத கண்ணோட்டத்தின் அடிப்படையே அதற்கு காரணமாகும். இந்தியாவின் 80 கோடி இந்தியர்கள் வாழ்ந்தும் அவர்கள் இந்தியாவில் தாங்கள் வாழும் மாநிலங்களில் தமது தேசிய இன உரிமையை விட்டுக்கொடுப்பதில்லை. கன்னடர்கள், குஜராத்திகள், கேரளக்காரர்கள், ஒரிசியர்கள், வங்காளிகள், தெலுங்கர்கள், தமிழ்நாட்டுக்காரர்கள் என்றே தம்மை அடையாளப்படுத்துகிறர்கள். பொதுவாக இந்தியர்கள் என்ற பரந்த அடிப்படையில் அழைத்தாலும் தமது மாநில ரீதியிலான அல்லது தேசிய இன அடையாளத்தை விட்டுக்கொடுப்பதில்லை. தமிழ்நாட்டிலுள்ள 5 கோடி தமிழர்களும் தம்மைத் தமிழகத்தவர்கள் என்றுதான் அழைக்கின்றனர்.
 இக் கட்டுரை 'மலைய மக்களின் சமகால பிரச்சினைகள்: ஒரு பல்நோக்குப் பார்வை' (இர. சிவலிங்கம் ஞாபகார்த்த குழு,கொழும்பு, 2003,)என்ற நூலில் இருந்து நன்றியுடன் எடுக்கப்பட்டது. கட்டுரையாளர்: ஏ.லோறன்ஸ்; பிறப்பு: தல்வாக்கொல்லை; கொழும்புப் பல்கலைக் கழக இளமானிப் பட்டதாரி, பத்திரிகையாளர், தொழிற்சங்க-, அரசியற்செயற்பாட்டாளர்.Labels: இந்திய வம்சாவளியினர், தேசிய இனம், மலையகத் தமிழர், மலையகம், லோறன்ஸ் >>>மேலும் வாசிக்க>>>
|
வார்ப்பும் இடுகையும்:நிச்சாமம் @ 6/30/2008 10:52:00 PM  |
|
|
|
| யாழ்ப்பாணத்துச் சாதியம்: காலனித்துவ சமரசம் |
| Tuesday, June 24, 2008 |
யாழ்ப்பாணத்துச் சாதியம்: காலனித்துவ சமரசம்
மு.நித்தியானந்தன்
„மப்பின்றிக் கால மழை காணா மண்ணிலே சப்பாதி முள்ளும் சரியாய் விளையாது ஏர் ஏறாது காளை இழுக்காது எனினுமந்தப் பாறைபிளந்து பயன் விளைப்பான் என்னூரான்“

என்று மகாகவி பாறை பிளந்து பயன் விளைவிக்கும் யாழ்ப்பாணத்து விவசாயியை வியந்து கவிதை வடித்தது உண்மைதான். ஆனால் கடும் பாறையை விட யாழ்மண்ணில் இறுகி வேரோடிப்போன சாதிய உணர்வினை பல நூற்றாண்டுகளாகத் தொடர்ச்சியாக ஆட்சி நடாத்திய ஐரோப்பிய அரசுகளாலும்கூட அசைக்கமுடியவில்லை. மாறாக யாழ்ப்பாண சமூகத்தில் மேலாண்மை செலுத்திய சாதியினர் பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியைப் பயன்படுத்தி மேலும் தம்மை ஸ்திரப்படுத்திக் கொண்டிருக்கின்றனர் என்பதை சரித்திரம் சொல்கிறது.
பிரித்தானியப் பேரரசின் இலங்கையின் முதல் ஆளுநராகப் பதவியேற்ற பிறெடறிக் நோர்த், யாழ்ப்பாணத்தில் நிலவிய சாதிய அமைப்பினை தங்களின் நிர்வாகத்திற்கு வசதியானதெனக் கருதி சாதியமைப்பினை அனுசரித்துச் செல்லும் போக்கினைக் காண்கிறோம்.
யாழ்ப்பாணத்தின் கிராமிய மட்ட சமூகத் தலைமைத்துவம் சாதி வெள்ளாளர்களின் கைகளிலேயே இருந்தது. யாழ்ப்பாணத்தின் பாரம்பரிய சாதியமைப்பினை ஆதாரமாகக் கொண்டுதான் இப்பிரதேசத்தின் சமூகப் பொருளாதர நடவடிக்கைகளும் சமூக உற்பத்தி உறவுகளும் அமைந்தன. சாதி, சமூகஅமைப்பின் மேற்கட்டுமானமாக அல்ல, அதுவே அடித்தளமாகவும் செயற்பட்டிருந்தது.
யாழ்ப்பாணத்தின் பொருளாதாரச் சமூகத்தளம் சாதியினால் வடிவமைக்கப்பட்டு, வெள்ளாள மேலாண்மையால் நிர்வகிக்கப்பட்டு வந்திருக்கிறது. உயர் குடிப்பிறப்பும் விளிம்புநிலைக்குத் தள்ளப்பட்டவர்கள் இழிவுபடுத்தப்படுதலும் யாழ்மண்ணில் தோய்ந்துபோனவை. யாழ்ப்பாணத்தின் அரும்பெரும் சுதந்திரவீரனாக போற்றப்படும் சங்கிலி தனக்கேற்பட்ட ‚வைப்பாட்டி மகன்’ என்ற இழிவினை நீக்க, தன் மூத்த சகோதரர்களை அழித்துத்தான் அரசகட்டிலேறுகிறான். இந்தச் சாதியப் பெருமைகளும் இழிவுகளும் பிரித்தானியர் ஆட்சியிலும் தொடர்ந்தன.
1806ஆம் ஆண்டு அரசு நிறைவேற்றிய 10ஆவது இலக்கக் கட்டளைச்சட்டம் உயர்சாதியினருக்கு வழங்கப்படவேண்டிய மரியாதைகள் தொடர்ந்து வழங்கப்படவேண்டும் என்பதைச் சட்டபூர்வமாக அறிக்கையிட்டது. பிரிட்டிஷ் ஆட்சி அதன் ஆரம்பக்கட்டத்திலேயே சாதியமைப்புப் பாரம்பரியத்தை வலியுறுத்திப்பேண முயன்றிருப்பதை இது குறித்து நிற்கிறது.
அஞ்ஞான இருளில் மூழ்கிக்கிடந்த நாடுகளிடையே அறிவியக்க ஒளிபாய்ச்ச வந்ததாகக்கூறும் ஆங்கிலேய அரசு வலியுறுத்திய சமூக ஒழுங்கு, சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற கோட்பாடு மற்றும் நீதி போன்ற அம்சங்களும் யாழ்ப்பாணத்தில் நிலவிய சாதிய அமைப்பு, பழமையான சமூக ஒழுங்கு முறைமை, சமூகத்தின் மீதான அதிகாரக் கட்டமைப்பு, சமூக ஸ்திரப்பாடு என்பவற்றுக்கும் இடையில் முரண்பாடுகள் எழுந்தபோது இவர்களால் சமூக நீதியின் பேரில் தீர்க்கமான நிலைப்பாட்டினை எடுத்துக் கொள்ளமுடியவில்லை.
யாழ்ப்பாணத்தின் சாதி அமைப்பின் தளத்தில் இருந்து சிக்கல்கள் தோன்றியபோதெல்லாம் சமூக நீதியின் அடிப்படையில் அல்லாமல் சமூகத்தில் நிலவும் ‚அமைதிக்கு’க் குந்தகம் ஏற்படாதவகையில் யாழ்ப்பாணத்தில் வேரூன்றி நின்ற பழைய அதிகாரப் படிமுறையைத் தக்க வைத்துக்கொள்ளுதலே உகந்தது என்ற ரீதியிலேயே ஆங்கிலேயரின் கொள்கை உருவாக்கம் அமைந்தது.
குடியேற்ற நாட்டுச் செயலாளரும் வரலாற்றாசிரியருமான எமர்சன் டெனண்ட்(Emerson Tennen) யாழ்ப்பாணச் சாதியமைப்பின் கொடூரத்தைப் பார்த்துத் திகைத்துப் போனார் என்றாலும் அரசின் கடந்த கால அநுபவங்களைக் கொண்டு பார்க்கின்றபொழுது சாதியமைப்பின் மீது நேரடியாகத் தலையிடுவதைத் தவிர்த்துக் கொள்வதே உசிதமானது என்று கருதினார். ஆங்கிலேய அரசு கைக்கொண்ட தலையிடாக் கொள்கையை யாழ்ப்பாணத்தின் சாதியமைப்பைப்பொறுத்தும் உறுதியாகக் கடைப்பிடிப்பது அவர்களுக்கு வசதியாயிற்று. இந்தச் சாதியமைப்பின் கோரத்தாண்டவத்தைக் காலம்தான் மாற்றியமைக்கும் என்றும் பகுத்தறிவு படிப்படியாக வளரும் போது இது தணிந்து போகும் என்றும் டெனண்ட் எழுதினார்.
நிலமானிய அமைப்பில் போல அரசுக்கு நேரடியாகச் சரீர ஊழியம் போன்ற கடமைப்பாடுகள் தாழ்த்தப்பட்ட சாதியினர் செலுத்தத் தேவையில்லை என்று 19ஆம் நூற்றாண்டில் பிரித்தானிய அரசு கொணர்ந்த சட்டம் குறிப்பிடத்தக்கது. எனினும் சாதியமைப்பின் வேரோட்டத்தை அதனால் எதுவும் செய்ய முடியவில்லை. யாழ்ப்பாணத்தின் முதல் ஆங்கிலேயக் கலெக்டராகவும் பின் அரசாங்க அதிபராகவும் கிட்டத்தட்ட நாற்பதுஆண்டுகள் (1829-1867) வடமாகாணத்தில் பணிபுரிந்த பெர்சிவல் ஏக்லண்ட் டைக்(Percival Ackand Dyke) வகுத்ததுதான் யாழ்ப்பாணத்தில் சட்டமாய் இருந்தது.
யாழ்ப்பாணத்தின் தனிக்காட்டு ராஜாவாக (‚Raja of the North’) டைக் திகழ்ந்தார். கொழும்பில்லிருந்து பிரிட்டிஷ் நிர்வாகத்தின் தொலைதூர எல்லையில் தனது ராஜாங்கத்தை எந்தத் தடையுமின்றி நடத்தி வந்தார். கடுமையான கண்டிப்புமிக்க பெர்சிவல் டைக், தன் காலத்திலும் யாழ் சாதியமைப்பிலிருந்து எழுந்த பிரச்சினைகளை எதிர்கொள்ளவேண்டியிருந்ததது.
1830இல் நளவர் சமூகத்தைச் சேர்ந்த இளம்பெண் காதிலே தோடு அணிந்ததை வெள்ளாளர்கள் எதிர்த்தனர். கிராமியத் தலமைப்பீடம் வெள்ளாளர் கைகளிலே இருந்ததால் இம்மாதிரி நகை அணிகளை இனிமேல் நளவர்கள் யாரும் அணியக்கூடாதென்று அறிவுறுத்தப்பட்டதோடு, பாரம்பரியப் பழக்கவழக்கத்தை மீறியதற்குத் தண்டமும் விதித்தார்கள். சமத்துவத்தைப் போதிக்கும் அரசு, சாதிரீதியான இந்தப் பாரபட்சத்தையும் கொடுமையையும் அனுமதிப்பது சாத்தியமாயிருந்தது. அதேசமயத்தில் இத்தகைய சாதியமைப்புச் சார்ந்த நடவடிக்கைகளுக்கு முடிவுகாணவும் முயலவில்லை. காதில் காதணிகளை அணிந்த பெண்ணுக்கு வழங்கப்பட்ட தண்டனையை டைக் நீக்கினார். பாரம்பரிய மரபுகளில் தலையிடுவதில் அவதானமாக இருக்கவேண்டும் என்ற ஆட்சிநடத்தும் ஜாக்கிரதை உணர்வில் இது போன்ற பிரச்சினைகளை இனிமேல் ஏற்படுத்தவேண்டாம் என்று தனது கீழ் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் கூறியதோடு நின்றுவிட்டார்.
மீண்டும் ஒரு சாதி அடிப்படையிலான பிரச்சினைய டைக் எதிர்கொள்ள நேர்ந்தது. யானை ஏற்றுமதி செய்வதற்கான துறை மேடையை அமைப்பதற்காக பனை மரத்தைக் காவிச் செல்லுமாறு திமிலர் இனத்தவர்களைக் கிராம மணியகாறர் பணித்திருக்கிறார். திமிலர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மணியகாறர் கட்டளைக்குப் பணிய மறுத்திருக்கிறார்கள். இத்தகைய பொதுப்பணிகளின்போது இவ்வாறு தாழ்த்தப்பட்ட சமூகத்திடமிருந்து சேவைகளைப் பெறுவது, பாரம்பரியமாக நடந்துவருவதுதானென்று மணியகாரர் தெரிவித்தார். திமிலர் இனத்தவர்களின் முறைப்பாடு தம்முன்வந்தபோது அதனைப்பரிசீலனை செய்த டைக் மணியகாரரின் நடவடிக்கை அரசாங்கத்தின் கட்டளையை மீறும் செயலே என்று கருதி பனைமரம் காவிச்சென்றதற்கான கூலியை அவர்களுக்கு மணியகாரர் தனது சொந்தப்பணத்திலிருந்தே செலுத்தவேண்டும் என்று கட்டளையிட்டார். யாழ்ப்பாணதில் கடமைக்காகத் தான் வெளியிடங்களுக்குப் போகும்போது சாதி அடிப்படையில் தாழ்த்தப்பட்டவர்களின் ஊழியத்தை இலவசமாகப் பெற்றுத் தங்குமிடங்கள் அமைத்தல் மற்றும் ஏனைய பணிகளைச் செய்யும் நடவடிக்கைகளுக்கு டைக் முற்றுப்புள்ளி வைத்தார். ஆனால் யாழ்ப்பாண சமூகத்தில் வேரோடிப்போன சாதியமைப்பின் அகங்காரம் அவ்வளவு லேசாக அடங்கிவிடுவதில்லை. தாழ்த்தப்பட்ட மக்கள் பரம்பரைபரம்பரையாக வழங்கிவந்த மரியாதைகளையும் கௌரவங்களையும் தங்களுக்கு வழங்குகிறார்களில்லை என்று 1831இல் அப்போது கலெக்டராக இருந்த டைக்குக்கு பெட்டிசன் அனுப்பியிருந்தார்கள். சாதியடிப்படையிலான இந்தக் கோரிக்கையை பெர்சிவல் டைக் கோட்பாட்டு அளவில் ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும் அந்த நிலைப்பாட்டை அவர் பூரணமாக நிராகரித்து விடவில்லை. நிர்வாகத்தைக் கொண்டு நடத்த சாதிவெள்ளாளர்களின் மணியகாரர் தலைமைத்துவம் அரசுக்கு அவசியமாயிருந்தது. எனவே டைக் இந்த வெள்ளாளத் தலைமையினரின் முறைப்பாட்டை நேரே கவர்னருக்குத் தெரிவிக்குமாறு உத்தரவிட்டார். ஆட்சி நிர்வாகத்தில் தங்களுத் துணையாயிருக்கும் கிராமிய வெள்ளாளத் தலைமைத்துவம் உரிய மரியாதையோடும் தனித்துவத்தோடும் பேணப்படவேண்டுமென்பதில் அரசு அக்கறைகாட்டியிருக்கின்றது. பிரிட்டிஷ் ஆட்சியின் ஆரம்பக் கட்டத்தில் யாழ்ப்பாணத்துக் கச்சேரிகளின் வராந்தாவில் தரையில்தான் வெள்ளாள மணியகாரர்கள் உட்கார்ந்திருக்கவேண்டியதாயிற்று. இது ஏனைய தாழ்த்தப்பட்ட மக்களின்முன் தங்களுக்கு அவமரியாதையானது என்று சாதிவெள்ளாளர்கள் முன்வைத்த கோரிக்கையினை டைக் ஏற்றுக் கொண்டு அவர்களுக்கு இருக்கைகள் வழங்க அனுமதித்திருக்கிறார். பொதுக் கிணறுகளில் எல்லா சாதியினரும் தண்ணீர் அள்ளுவதால் கிணறு ‚தீட்டுப்பட்டு’ தாங்கள் அத் தண்ணீரைக் குடிக்கமுடியாதென்று வெள்ளாளர்கள் கோரியதையேற்று அவர்களது அந்தஸ்தை நிலைநிறுத்த அவர்களுக்கென்று தனியே கிணறு வெட்டிக்கொடுக்கவும் டைக் ஏற்பாடுசெய்தார். அரசாங்க ஊழியர்களின் சுய கௌரவத்தை உயர்த்துவது அரசின் தொடர்ந்த ஆசை என்று கூறிய டைக் அவர்கள் விசேடமாகவும் தனி மரியாதையுடனும் நடத்தப்படவேண்டுமென்று கோருவது நியாயமென்று கருதினார். 1849 மார்ச் மாதம் பருத்தித்துறை-புலோலியில் தட்டார் சமூகத்தவர்கள் சாதிவெள்ளாளர்களுக்கு எதிரான முறைப்பாட்டை அரசிடம் கையளித்தபோது கவர்னர் இப்பிரச்சினையை விசாரித்து அதனைத் தீர்த்து வைக்குமாறு யாழ்ப்பாண அரசாங்க அதிபரான டைக்கைக் கேட்டிருந்தபோது அவர் அந்த விசாரணையைச் சாதுரியமாகத் தவிர்த்துக்கொள்ளவே விரும்பினார். சாதியைப் பகிரங்கமாக அங்கீகரிக்கும் நிலையைக் கவனமாகத் தவிர்க்குமாறு விதிக்கப்படிருக்கும் அறிவுறுத்தல்களுக்கமைய இந்த முறைப்பாடும் சாதியடிப்படையில் எழுந்திருந்ததால் இதனை விசாரிக்க முற்படுவது அவசியந்தானா என்ற பாணியில் டைக்கின் பதில் அமைந்தது. தட்டார் சமூகத்தவர்கள் தங்களின் மணியகாரரான வெள்ளாளர் தமக்கு அநீதியாக நடப்பதால் தமது சொந்தச்சாதியிலிருந்தே தலைமைக்காரரைத் தெரிவுசெய்யுமாறு கோரியிருந்தனர். வண்ணார் மற்றும் முடிதிருத்துவோரிடமிருந்தும் வெள்ளாளருக்கெதிரான முறைப்பாடுகள் அரசாங்க அதிபரிடம் வந்தவண்ணம் இருந்தன. யாழ்ப்பாணத்தில் சாதிச்சண்டைகள் தொடர்ச்சியாக சகல இடங்களிலும் நடந்துகொண்டிருந்தன. இத்தகைய சந்தர்ப்பங்களில் சமூக நீதி காக்கவேண்டிய நிர்வாகம் சாதுர்யமாக ஒதுங்கிக் கொண்டது. சாதிப்பிரச்சனைகள் வன்முறையில் முடிந்தபோது அவை குற்றவியல் பிரச்சனைகளாகி நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு விடப்பட்டன. ஊர்காவற்துறையில் ஒரு பிணத்தைப் புதைப்பது தொடர்பாக கத்தோலிக்கர்களின் மத்தியில் சாதிசார்ந்து பிரச்சினை எழுந்தபோது உள்ளூர்வாசிகளின் சடங்காசாரங்களில் அரசு தலையிட விரும்பவில்லையென்று அரசு பிரச்சனையைக் கைகழுவி விட்டது. நீதிமன்றத்திற்தான் நியாயம் கோரவேண்டுமென்று அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. Entrance to old Dutch Fort at Jaffna, Ceylon. Feb. 20, 1924. W.A.Sawyer in rickshaw
தச்சுத்தொழிலாளி ஒருவர் தனது மகளுடைய திருமணத்திற்குப் பந்தல் போட்டு வெள்ளைத்துணியால் அலங்காரம் செய்திருந்தார். வெள்ளாளர்கள் அதை எதிர்த்துப் பந்தலைக் கலைத்து திருமணத்தைக் குலைக்க முயன்றனர் . அரசிற்கு இது முறைப்பாடு செய்யப்பட்டபோது அரசின் உதவி அதிகாரி திருமணத்திற்கு நேரேசென்று அங்கு குழப்பம் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளவேண்டியதாயிற்று. கொள்கை ரீதியாக அரசாங்கம் சாதிப்பாகுபாடை அங்கீகரிக்கவில்லையென்றாலும் அதனை உறுதியாக நடைமுறையில் எதிர்க்கவில்லை. சாதி ஒடுக்குமுறையோடு அது சமரசம் செய்து கொண்டது. பிரஸ்தாப இந்த நிகழ்ச்சியிலும் இதற்குப் பின் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் பந்தல்களில் வெள்ளைத் துணியால் அலங்காரஞ் செய்ய விசேட பத்திரங்களில் வெள்ளாளத் தலைமைக்காரர்களிடம் அனுமதி பெற்றிருக்க வேண்டியிருந்தது. வெள்ளார்கள் அனுமதி பெறவேண்டாத அர்களுக்கே உரித்தான விசேட உரிமையாக அது அமைந்தது. 1864 இல் நல்லூரில் நொத்தாரிஸாக தட்டார் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை நியமித்த போதும் வெள்ளாளர்களிடமிருந்து பெரும் எதிர்ப்பு உருவானது.
அரசாங்க அதிபர் பெர்சிவல் டைக் தன் ஆட்சிக்காலத்தில் தனது அதிகாரத்திற்குச் சிறிய அச்சுறுத்தலாக எது வந்தாலும் அதனை நிர்த்தாட்சண்ணியமாக எதிர்த்து வந்திருக்கிறார். ‚பிரமச்சாரியாக’ அவர் கூறப்பட்டாலும் யாழ்ப்பாணத்தில் ஒரு பெண்ணுடன் அவருக்குத் ‚தொடுப்பு’ இருந்திருக்கிறது. கோப்பாயில் மரணமான டைக் யாழ்ப்பாணத்தை விரும்பி அங்கு பதவி வகித்துவந்திருக்கிறார் என்பதைக் குறிப்பிடவே வேண்டும். கிறிஸ்தவ மிஷனரிகள் கல்விப் போதனைகளில் ஈடுபடுவதையும் யாழ்ப்பாண சமூகத்தின் சாதி அமைப்புகளைத் தகர்க்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதையும் டைக் விரும்பவில்லை. இந்த மிஷனரிகளைத் தனது அதிகாரத்துக்குச் சவாலாக டைக் கருதினார். அரசின் நிர்வாக நடவடிக்கைகளில் அனாவசியத் தலையீடு மேற்கொள்பவர்களாக அவர்களை நினைத்தார். சென். ஜோண்ஸ் கல்லூரியினைக்கூட அவர் ஒரு இடையூறாகவே கருதினார். சென். ஜோண்ஸ் கல்லூரி அதிபரை அவர் பலமுறை சந்திக்க மறுத்திருக்கிறார். வேலை காலி இடங்களுக்கு தங்கள் கல்லூரி மாணவர்களை சென். ஜோண்ஸ் கல்லூரி அதிபர் டைக்குக்குச் சிபாரிசு செய்தபோது அவர் அதனை ஒருபோதுமே கருத்தில் கொண்டதில்லை. 19ஆம் நூற்றாண்டில் யாழ்ப்பாணத்தில் இயங்கிய கிறிஸ்தவ மிஷனரிகளும் அங்கு ஆழ வேரோடியிருந்த சாதி அமைப்பினை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. யாழ்ப்பாணத்தில் வண்ணார்பண்னையில் வெஸ்லியன் மெதடிஸ்ற் கல்லூரியில் வண்ணார் இனத்தைச் சேர்ந்த பையனை அனுமதித்ததற்காக வெள்ளாளர்கள் பெரும் எதிர்ப்புத் தெரிவித்ததையடுத்து அப் பையனைப் பாடசலையிலிருந்து வெளியேற்றவேண்டியதாயிற்று. மீண்டும் 1847இல் இப்பாடசாலையில் நளவர் சமூகத்தைச் சேர்ந்த ஒரு பையன் அனுமதிக்கப்பட்டபோது வெள்ளாளர்கள் எதிர்த்தபோது பள்ளிநிர்வாகம் அதற்கு இணங்கவில்லை. இதனைச் சகிக்கமுடியாத வெள்ளாளப் பெற்றோர் தமது பிள்ளைகளைப் பாடசாலையிலிருந்து நீக்கிக்கொண்டனர். இந்தப் பாடசாலை அனுமதிப் பிரச்சினைகள் பற்றி ஆறுமுகநாவலர் பின்வருமாறு எழுதுகிறார்: வண்ணார்பண்ணையிலுள்ள வெஸ்லியன் மிஷன் இங்கிலீசுப்பள்ளிக்கூடத்தில் ஒரு வண்ணாரப்பையன் மூன்று நான்கு வருஷம் படித்தவன். இவ்வருஷத்திலே மற்றப் பிள்ளைகள் ‚இவ்வண்ணானை எங்களோடிருத்திப் படிப்பிக்கின் நாங்கள் இப்பள்ளிக்கூடத்தை விட்டுவிடுவோம்’ என்றார்கள். அதுபற்றி முதலுபாத்தியார் தாங் கிறிஸ்தவராயிருந்தும், வண்ணானைத் தள்ளிவிட்டார். வண்ணான் பறங்கித் தெருவில் இருக்கிற வெஸ்லியன் பாதிரியிடத்தே போய், தனக்கு கிறிஸ்து மதமே சம்மதமென்றும், தனக்கு ஞானஸ்நானம் செய்து தன்னை அங்குள்ள வெஸ்லியன் பள்ளிக்கூடத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டுமென்றும் வேண்டிக்கொண்டான். பாதிரியார் தாம் அதற்கு உடன்பட்டும், அவனைச் சேர்த்துக்கொள்ளுமபடி தமக்குக் கவர்மெண்ட் ஏசண்டு எழுதிய கடிதம் பெற்றும், அப்பள்ளிக்கூடத்துப் பிள்ளைகளும் சுதேச குருமாரும் உபாத்தியாயர்களும் உடன்படாமையால், வண்ணானைச் சிலகாலம் அடிக்கடி அலைத்துப் பின் ஓட்டிவிட்டார். அவன் இப்போது நெடுந்தூரத்திலுள்ள கத்தோலிக்கப் பள்ளிக்கூடத்திலே படிக்கிறான். ‚அப்பள்ளிக்கூடத்திற்றானே 1847ஆம் வருடம் ஒரு நளப்பையன் படித்தலைக்கண்டு ஏறக்குறைய ஐம்பது பிள்ளைகள் ஓட்டமெடுக்கவும் அந் நளப்பையனைத் தள்ளாத பாதிரியாரைப் பித்தரென்று நினைத்தரோ! நளவனிலும் தாழ்ந்தசாதி வண்ணானென்று கொண்டாரோ! சாதி வேற்றுமை பாராட்டுதல் கிறிஸ்து நாதருக்குஞ் சம்மதமென்று விவிலிய நூலில் எங்கேயாயினும் இப்போது கண்டாரோ? வண்ணானுடைய ஆன்மா பரமண்டலத்தில் இடம்பெறாதென்று தேவதூதன் சொப்பனத்தில் வந்து சொல்லக்கேட்டாரோ! தேவவாக்கினும் பெரிது தம்மைச் சேவிக்குஞ் சுதேச குருமார், உபாத்தியாயர்கள் வாக்கென்று தெளிந்தாரோ! வண்ணானைப் பற்றி மற்றப் பிள்ளைகளெல்லாம் ஓடிவிட்டால், அவர்கள் இருக்குஞ் சம்பளத்தினாலும் அவர்கள் பொருட்டுக் கவர்மெண்டார் உதவும் பணத்தினாலும் தமது பை நிரம்பாதேயென்று பயந்து விட்டாரோ! யாழ்ப்பாணத்திலே சாதி வேற்றுமை அறுத்துக் கிறிஸ்து மதத்தை நிலைநாட்ட வல்லவர்கள் பொருள்வாஞ்சைப் பிசாசா வேசிகளாகிய இந்தப் பாதிரிமாரும் சுதேச குருமாரும் தானோ! சபாசு! சபாசு!’
ஆறுமுகநாவலரின் இந்த நீண்ட குறிப்பு யாழ்ப்பாணத்தில் அன்று ஆழ்ந்து வேரூன்றி நின்ற சாதிவெறித் தனத்திற்கு அச்சொட்டான சாட்சியாக அமைகிறது. இவ்வளவு அழுத்தந் திருத்தமான – இறுகிப்போன சாதி அமைப்பின் பின்னணியிலே கிறிஸ்தவ மிஷனரிகள் இயங்க நேர்ந்தன. இருப்பினும் மிஷனரிமாரின் கல்வித் திட்டம் யாழ்ப்பாணத்தில் நிலவிய சாதியமைப்பின் கோட்டைகளில் பெரும் துளைகளை ஏற்படுத்தவே செய்தது. சாதியமைப்பினால் வட்டுக்கோட்டை செமினரியில் ஆரம்பகாலத்தில் ஏற்பட்ட பிரச்சினைகளைப் பற்றி டெனன்ட் தனது ‚Christinanity in Ceylon’ என்ற நூலிலே குறிப்பிடுகிறார்.
மிஷனரிமார் தமது மதப்பரம்பலுக்குத் தடையாகச் சாதியமைப்பு நிலவுவதாகவே அதனை நோக்கினர். இக்காலகட்டத்தில் இலங்கையில் பணிபுரிந்த மிஷன்ரிமாரின் கடிதங்களிலும் அவர்கள் வெளியிட்ட சஞ்சிகைகளிலும் சாதி பற்றிய குறிப்புக்கள் வரும்போதெல்லாம் அது மதமாற்றத்திற்கு எவ்வாறு தடையாக அமைகிறது என்ற நோக்கத்தில் மட்டுமே பார்க்கப்பட்டிருப்பதைக் காணலாம். சாதியமைப்பிற்கு எதிராக சமயம்பரப்பலில் ஈடுபட்ட கிறிஸ்தவசமயமும் யாழ்ப்பாணத்தின் சாதியக்கொடூரத்தின் முன் சரணாகதியடைய நேர்ந்தமை இந்தச் சோக நாடகத்தின் மற்றுமொரு விரிவான கதை.
1871இல் மிஷனரிமாரின் நடவடிக்கைகளுக்கு எதிராக ஆறுமுகநாவலர் சைவபரிபாலனசபையை நிறுவினார். அவர் நிறுவிய பாடசலையிலும் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பிள்ளைகள் அனுமதிக்கப்படவேயில்லை. சைவ பரிலபாலனசபை ஸ்தாபிக்கப்பட்ட ஆண்டில்தான் 1871இல் மாவிட்டபுரத்தில் சாதிக்கலவரங்கள் வெடித்தன. வெள்ளாளர், வண்ணார், அம்பட்டர், ஆகியோருக்கிடையில் சாதிமோதல்கள் எழுந்தன. அம்பட்டர்களின் உடுப்புக்களைத் தோய்க்கமுடியாது என்று வண்ணார்கள் மறுத்ததன் பின்னணியில் வெள்ளாளர்களே இருந்திருக்கிறர்கள்.
இந்தச் சாதிக் கிளர்ச்சிகள் டைக்கிற்குப் பின் பதவியேற்ற அரசாங்க அதிபர் டுவைநாம்(Twynam) காலத்திலும் தொடரவே செய்தன. இவர்களுக்கெல்லாம் பின்னால் ‚Village in the jungle’ என்ற அற்புதமான ஆங்கில நாவலை எழுதிய சிறந்த எழுத்தாளரான லெனார்ட் வூல்வ் (Leonard Woolf) யாழ்ப்பாணஹ்தில் அரசாங்க அதிபராகப் பணியாற்றினாரெனினும் அவர் யாழ்ப்பாண வெள்ளாள எதிர்ப்பின்பேரில் வெளியேறவே நேர்ந்தது. யாழ்ப்பாணக் கச்சேரியில் லெனார்ட் வூல்வ் (Leonard Woolf) பணியாற்றியபோது பிராமண வகுப்பைச் சேர்ந்த கிளாக்கர் தரையில் எச்சில் துப்பி அசுத்தப் படுத்திவிட்டதைப் பார்த்ததும் அவரையே தரையைச் சுத்தப்படுத்துமாறு பணித்துவிட்டார். தாழ்த்தப்பட்டவர்கள் மத்தியில் அவரே தரையைச் சுத்தப்படுத்தவேண்டிய நிலை அவருக்குப்பெரிய அவமானத்தை ஏற்படுத்திவிட்டதாகக் கூறப்படுகின்றது. வூல்பின் இத்தகைய கண்டிப்பான நடவடிக்கைகளால் அவர் யாழ்ப்பாணத்தில் நிலைக்க முடியவில்லை. அவர் யாழ்ப்பாணத்தவர்களைப் பற்றி நல்லபடியாக ஒன்றும் தனது குறிப்புக்களில் எழுதவில்லை.
யாழ்குடாநாட்டில் வேரூன்றி நின்ற சாதியபிமானம் யாழ்ப்பாணத்தவர்கள் 19ஆம் நூற்றாண்டில் மலாயாவை நோக்கிக் குடிபெயர்ந்தபோது அதுவும் அவர்களோடு சேர்ந்து வெளிநாடுகளிலும் செழித்தது. 1861இல் கோலாலம்பூரில் ஸ்ரீபரஞ்சோதி விநாயகர் ஆலயத்தைக் கட்ட முன்நின்ற ஊரெழுவைச் சேர்ந்த டாக்டர் ஆறுமுகம் விஸ்வலிங்கம் தான் உயர் வெள்ளாளப் பழங்குடியில் வந்தவராகக் கல்வெட்டிலே பொறித்துச் சென்றிருக்கிறார்.
இந்தச் சாதிவெறி இருபதாம் நூற்றாண்டிலும் இன்னும் கோரமாகத் தலைவிரித்தாடியது. 1907இல் பொன். அருணாசலம்கூட சாதியமைப்பு அவசியமானது, நலம் பயப்பது என்று எழுதினார். 1921இல் யாழ்ப்பாணத்தில் ‚தமிழர் நாகரிகம்’ பற்றியுரையாற்றிய மறைமலை அடிகள் தமதுரையில் வெள்ளாளரின் நாகரிகம் குறித்தே பேசினார்.
1930இல் கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் முதல்முறை தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டபோது அவர்களுடன் வெள்ளாள மாணவர்களுக்கும் சமபோசனம் வழங்குவதை எதிர்த்து சேர் பொன். இராமநாதன் கவர்னரிடம் முறையிட்டார். 1929ஆம் ஆண்டு பாடசாலைகளில் இன, மத, சாதி, தேசிய வேறுபாடு காட்டாமல் எல்லாப் பிள்ளைகளுக்கும் சரியாசனம் கொடுக்கவேண்டுமென அரசு அறிவித்தபோது வெகுண்டெழுந்த வெள்ளாளர்கள் பதினைந்து பாடசாலைகளைத் தீக்கிரையாக்கினார்கள். தம் சொந்தச் சகோதரர்களையே அடக்கியும் ஒடுக்கியும் இழிவுபடுத்திய யாழ்ப்பாணச் சமூகத்தின் கொடூரத்தின் கதை அவலம் நிறைந்த, கறை படிந்த கதையாகும்.
கட்டுரையாசிரியர் மு.நித்தியானந்தன், அறியப்பட்ட இலக்கிய விமர்சகர், லண்டனில் வசிக்கின்றார். மூலம்:கறுப்பு,தொகுப்பு: சுகனும் ஷோபசக்தியும், அடையாளம், சென்னை 2002Labels: சமரசம், சாதியம், யாழ்ப்பாணம், வெள்ளாளர் >>>மேலும் வாசிக்க>>>
இதனை மின்னஞ்சல் செய்ய!~~~~~~~e-mail this post
|
வார்ப்பும் இடுகையும்:நிச்சாமம் @ 6/24/2008 06:45:00 PM  |
|
|
|
| ஒரே மொழியைப் பேசி ஒரே பிரதேசத்தில் ஒரே மாதிரியான வாழ்வை வாழ முடியாமற் தடுத்து… |
| Monday, June 23, 2008 |

அமரர் சின்னத்தம்பி செல்லையா(1932-2007) அவர்களை நினைவுகொள்ளல்:
ஒரே மொழியைப் பேசி ஒரே பிரதேசத்தில் ஒரே மாதிரியான வாழ்வை வாழ முடியாமற் தடுத்து…
-கரவைதாசன்(டென்மார்க்)
யாழ்ப்பாணத்து நிலவுடைமைச் சமூகத்தின் முரண்பாடுகளை விளங்கிக்கொண்டு, அச்சமூகத்தில் அசைவியகத்தினை ஏற்படுத்திய கருத்துப் பொறிகளில் மார்க்சிய வழியில் 1950ம் ஆண்டு காலப்பகுதிகளில் தோன்றிய அமைப்பாளர்கள், மாதிரி உருவை வடிவமைத்தவர்கள், மார்க்கத்தினை கண்டறிந்தவர்கள் வரிசையில், வாழ்ந்து பணி செய்த தோழர்கள் வரிசையில் இந்த ஆண்டில், முதலில் அகில இலங்கை சிறுபான்மைத் தமிழர் மகாசபையைச் சேர்ந்த மா.செல்லத்தம்பி அவர்களை இழந்து தவித்து நின்றபோது மகாசபையைச் சேர்ந்த இன்னொரு தோழர் துன்னாலையைச் சேர்ந்த தலைவர் செல்லையாவையும் இழந்துவிட்டோம் என்ற செய்தி வந்து சேர்ந்தது.
தோழர் செல்லையா அவர்கள் அமரத்துவம் அடைந்துவிட்டார். அவர் நிகழ்வுகளை புனைவின்றி பதிவு செய்வதினூடே ஐம்பதுகளில் அடக்கு முறைக்கெதிராக கிளர்ந்தெழுந்த ஒரு சமூகத்தின் வரலாற்றினையும் பதிவு செய்யும் வாய்ப்பு கிட்டுவதை உணர்கிறேன். அன்று ஈழத்திலே ஒரே மொழியைப் பேசி ஒரே பிரதேசத்தில் ஒரே மாதிரியான வாழ்வை வாழ முடியாமற் தடுத்து, நாகரிகமற்ற முறையில் எங்கள் மண்ணின் மைந்தர்கள் அடக்கி ஒடுக்கப்பட்டபோது, கிளர்ந்தெழுந்த வரலாற்றினை பதிவு செய்யும் முயற்சியாகவும் இதனைக் கொள்ளலாம். எனில் எனக்கு எட்டியவரை கிடைத்த தகவல்களின் வழி நான் வாழ்ந்த கிராமத்தில் வாழ்ந்த இவரோடொத்த தோழர்களையும் இவர்களது செயற்பாடுகளையும் ஆவணப்படுத்த நினைக்கிறேன்.
அமரர் சின்னத்தம்பி செல்லையா அவர்கள் ஈழத்தின் வடமராட்சிப் பகுதியில் துன்னாலை மேற்கில் 22-04-1932ல் சின்னத்தம்பி வள்ளியம்மை தம்பதிகளின் இளைய மகனாகப் பிறந்தார். யாழ் /ஞானசாரியார் கல்லூரியில் தனது ஆரம்பக் கல்வியைத் தொடங்கிய இவர் தொடர்ந்து அரசினரால் நடத்தப்பட்ட பாடசாலை, நெல்லியடி மத்தியமகாவித்தியாலயத்தில் ஆங்கில மொழிமூலம் தனது இடைநிலைக் கல்வியினை கற்று தேறினார். தனது ஊரைச் சேர்ந்த பூங்கிளி என்ற பெண்ணை வாழ்க்கைத் துணையாகச் சேர்ந்து ஐந்து பெண் பிள்ளைகளைப் பெற்று ஐவரையும் ஆசிரியைகளாக உருவாக்கியுள்ளார்கள்.
அமரர் அவர்கள் இடைநிலைக் கல்வியினை கற்று தேறிய காலத்திலேயே வாழைச்சேனை காகிதத் தொழிற்சாலையில் கணக்காளராக வேலைக்கமர்த்தப்பட்டார். சமூகச் சீர்திருத்த எண்ணமும் அடக்குமுறைக்கெதிரான போராட்டச் சிந்தனையும் இவரை கம்யூனிசக் கட்சியிலும் அதனைத் தொடர்ந்து எம்.சி.சுப்பிரமணியம் அவர்களை தலைமையாகக் கொண்ட சிறுபான்மைத் தமிழர் மகாசபையிலும் இணைந்து செயற்பட வைத்தது. வடமராட்சியில் மகாசபையின் கிளையினை அமைத்து செயற்பட்ட தோழர்கள் அமரர்கள் ஆ.ம.செல்லத்துரை, கவிஞர் பசுபதி, மு.செல்வபாக்கியம், கிருஸ்ணபிள்ளை, ஜீ.ஜீ.மகாலிங்கம், முருகேசு, மா.செல்லத்தம்பி, ஆ.குலேந்திரம், வ.சின்னத்தம்பி, ஆ.வன்னியசிங்கம், வீ.எஸ்.சிவபாதம், வ.தங்கமணி, மற்றும் இரகுநாதன், தெணியான், க.இராசரத்தினம் ஆகியோருடன் இணைந்து முன்னணியில் நின்று செயற்பட்டார். மகாசபையின் பொதுக் காரியதரிசியாக சட்டத்தரணி பீ.ஜே. அன்ரனி அவர்கள் இருந்து உழைத்துக் கொண்டிருந்தபோது அமரர் அவர்கள் நிர்வாகக் காரியதரிசியாக இருந்து செயற்பட்டார். அப்போது உத்தியோகமா? சமூகப்பணியா? எனக் கேள்வி எழுந்தபோது உத்தியோகத்தினை விட்டு வந்து சமூகப்பணியிலே முழுவதுமாக ஈடுபட்டார்.
இப்டியாக இவர் மட்டுமன்றி எம்.சி.சுப்பிரமணியம் எலிபன்ட் கவுசில் பார்த்த உத்தியோகத்தை துறந்தார். கன்பொல்லைக் கிராமத்தினைச் சேர்ந்த வ.தங்கமணி அவர்கள் பொலிஸ் உத்தியோகத்தினை துறந்துவிட்டு இவர்களுடன் சமூகப்பணியில் சேர்ந்து செயற்பட்டார். அது போலவே கன்பொல்லைக் கிராமத்தினைச் சேர்ந்த வீ.எஸ்.சிவபாதம், ஆ.சிவகுரு இருவரும் கூட தாங்கள் அக்குறனையில் வகித்து வந்த பண்டகசாலைப் பொறுப்பாளர் உத்தியோகங்களை விட்டு வந்து (இப்படிப் பலர்) சமூக மாற்றத்திற்காக எழிச்சியுடன் ஈடுபட்டு உழைத்தார்கள்.
அமரர் அவர்கள் 1956ல் பொன்.கந்தையா அவர்களின் தேர்தல் வெற்றிக்காக கிராமம் கிராமமாக சென்று பிரச்சாரக் கூட்டங்களில் ஈடுபட்டார். சிறந்த பேச்சாளரான இவர் ஆங்கிலத்திலும் தமிழிலும் கனல் பறக்க அரசியல் மேடைகளில் பேசிவந்தார். இவர் போன்ற தோழர்களின் தொடர்ச்சியான உழைப்பு வடக்கு கிழக்கிலிருந்து பாராளுமன்றத்திற்கு கம்யூனிஸ் கட்சியிலிருந்து அனுப்பிவைக்கப்பட்ட ஒரே ஒரு பராளுமன்ற உறுப்பினர் தோழர். பொன்.கந்தையா அவர்கள்தான் என்ற வரலாற்றினை உருவாக்கியது.
இதே1956ல் பிற்றர் கெனமன் வடமராட்சிக்கு வருகை தந்து மாலிசந்தியில் பிரமாண்டமான கூட்டமொன்று நடைபெற்றது. அதனையொட்டி வடமராட்சியில் சைக்கிள் ஊர்வலம் ஒன்றும் நடைபெற்றது அதில் பீற்றர் கெனமனும் பங்குபற்றினார். வடமராட்சியின் முன்னணித் தோழர்களுடன் அமரர் தலைவர் செல்லையா அவர்களும் இரண்டிலும் கலந்து கொண்டார். அச்சைக்கிள் ஊர்வலத்தில் பெண்களும் கலந்துகொண்டிருந்தனர். கன்பொல்லைக் கிராமத்தினைச் சேர்ந்த வீ.எஸ்.சிவபாதம் அவர்களின் சகோதரி லட்சுமி அவர்களும் அவ்வூர்வலத்தில் சேர்ந்திருந்தார். அப்போது வீ.எஸ்.சிவபாதம் அவர்கள் ள.ள.உ படித்துக் கொண்டிருந்த மாணவன். இவர் அடுத்த நாள் பாடசாலைக்கு போகும் வழியில், வட்டவிதானை என அழைக்கப்படும் சாதி வெறியர்களுடைய சண்டியன் சித்தன் என்பவன் (அக்காலங்களில் வட்டவிதானை என அழைக்கப்படும் அரச அதிகாரமற்ற உயர்சாதி கட்டப் பஞ்சாயத்துக்காரர்கள் ஒவ்வொரு வட்டாரத்திலும் இருந்திருக்கிறார்கள்.) வீ.எஸ்.சிவபாதம் அவர்களை வழிமறித்து அவரிடம் அவரது சகோதரியை மிக அவதூறாகப் பேசி அவரை துவரந்தடியால் தாக்கியும் உள்ளார். பதிலுக்கு வீ.எஸ்.சிவபாதம் அவர்கள் அவர் பென்சில் சீவுவதற்காக வைத்திருந்த பேனாக் கத்தியால் சித்தனை தாக்கியுள்ளார். இச்சம்வமானது அன்று சாதி அதிகாரச் சண்டித்தனத்தினை உசுப்பிய சம்பவமாக அமைந்திருந்தது. அன்று மாலை சிவபாதம் அவர்களுடைய வீடு தீக்கிரை ஆக்கப்பட்டது. சேதியறிந்து எம்.சி அவர்களுடன் அமரர் செல்லையா அவர்களும் அவ்விடம் வந்து தோழைமையுடன் அவர்களுடன் சேர்ந்து எதிர் நடவடிக்கைகளில் செயற்பட்டுள்ளார். கன்பொல்லையின் எல்லையை அண்டி இடைக்குறிச்சியில் வாழ்ந்து வந்த வீ.எஸ்.சிவபாதம் அவர்களது பெற்றோர், குடும்பமாக பாதுகாப்புக் கருதி கன்பொல்லையின் மையப் பகுதிக்கு அவரது பெரிய தகப்பனாரின் காணிக்கு இடம் பெயர்ந்தார்கள். இப்படி பாதுகாப்புக் கருதி இடம் பெயர்ந்த ஒரு சம்பவம் சங்கானை நிச்சாமம் கிராமத்தில் தோழர் மான் நா. முத்தையா அவர்களுக்கும் நேர்ந்தது.
ஜீ.ஜீ.பொன்னம்பலம் அவர்கள் பருத்தித்துறைதொகுதி எம்.பியாக இருந்தபோது, சோல்பரி கொமிசன் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தது. அப்போது சாதிக் கலவரங்களினால் பாதிக்கப்பட்ட கிராமங்களை கொமிசனரை அழைத்துச் சென்று காட்டுவதென சிறுபான்மைத்தமிழர் மகாசபை முடிவெடுத்திருந்தது. ஜீ.ஜீ.பொன்னம்பலம் அவர்கள் அதற்கு சம்மதிக்கவில்லை. இருந்தபோதும் சோல்பரி கொமிசனரை இரகசியமாக அழைத்து வந்து கன்பொல்லைக் கிராமத்தில் எரிந்த வீடுகளை புகைந்துகொண்டிருக்கும் நிலையில் காட்டியுள்ளார்கள். இதற்குப் பின்னணியில் கன்பொல்லைக் கிராமத்தினைச் சேர்ந்த ஆசையண்ண என அழைக்கபடும் தோழர் இராசையா அவர்களும், டி.ஜேம்ஸ், வி.டி.கணபதிப்பிள்ளை, எம்.சி.சுப்பிரமணியம் இருந்தார்கள். கூடவே தலைவர் செல்லையாவும் கன்பொல்லைக் கிராமத்தினைச் சேர்ந்த இன்னொரு சமசமாசித்தோழர் பைரவன்.மாசிலாமணி அவர்களும் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. வீடு திரும்பும் வழியில் நெல்லியடிச்சந்தியில் வைத்து வி.டி.கணபதிப்பிள்ளை, எம்.சி.சுப்பிரமணியம், டி.ஜேம்ஸ் ஆகிய மூவரும் சாதிவெறியர்களால் நையப்புடைகப்பட்டார்கள் என்பது பல இடங்களில் பதிவாகியுள்ளது.
பொன்.கந்தையா அவர்களின் காலத்தில் அவர் கல்வி அமைச்சர் டபிள்யு. தகாநாயக்க அவர்களின் உதவியுடன் சிறுபான்மைத்தமிழர் மகாசபையின் அனுசரனையுடன் தமிழ்ப் பகுதிகளில் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக பல பாடசாலைகளை உருவாக்கினார். கூடவே உள்ளுராட்சிசபைகளின் மூலம் தாழ்த்தப்பட்ட மக்களின் விடிவிற்காகப் பாடுபட்டடார். உள்ளுராட்ச்சி சபைகளில் தாழ்த்தப்பட்ட மக்களின் பிரதிநிதிகள் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டனர். அப்போது நெல்லியடி பட்டினசபைத் தேர்தலில் கன்பொல்லைக் கிராமத்தினைச் சேர்ந்த தோழர்.ஆ.சிவகுரு தொடர்ந்து இரண்டு தடவையாக வேட்பாளராக நிறுத்தப்பட்டு நட்சத்திரச் சின்னத்தில் போட்டியிட்டார். முதற் தடவை 22வாக்குகள் வித்தியாசத்திலும் இரண்டாவது தடவை பத்திற்குட்டபட்ட வாக்குகள் வித்தியாசத்திலும் அவர் தோல்வியை சந்திக்க நேர்ந்தது. அப்போதெல்லாம் அத்தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் அமரர் செல்லையா அவர்கள் கலந்து கொண்டு தோழர் ஆ.சிவகுரு அவர்களுக்கு ஆதரவு தேடி பேசி வந்துள்ளார். (பின்பொருதடவை கன்பொல்லையைச் சேர்ந்த தோழர்.ஆண்டி.சுந்தரம் அவர்களும் நெல்லியடி பட்டினசபைத் தேர்தலில் போட்டியிட்டார்). சமகாலத்தில் சங்கானைப் பட்டினசபையில் போட்டியிட்ட மான் நா.முத்தையா, பி.நாகலிங்கம், வி.வைரமுத்து, ப.பசுபதி, வல்வெட்டித்துறை பட்டினசபையில் போட்டியிட்ட தோழர்.திருப்பதி, சுன்னாகம் பட்டினசபையில் போட்டியிட்ட செனட்டர் நாகலிங்கம் ஆகியோர் வெற்றிபெற்றனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
எம்.சி.அவர்களின் வலுமிக்க தோழராக அமரர் செல்லையா அவர்கள் விளங்கினார். மகாசபையின் வாலிப முன்னணியில் வடமராட்சியில் ஆசிரியர் ஜி.ஜி.மகாலிங்கம் அவர்களுடன் சேர்ந்து தலைமை தாங்கி முனைப்புடன் செயற்பட்டார். அந்நாட்களில் வடமராட்சிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி ஏற்படுத்தப்பட்ட எழுச்சி மிக்க சயிக்கிள் ஊர்வலத்தினை ஒழுங்கு செய்து தலைமை தாங்கி நடத்திச் சென்றார். இவ் ஊர்வலத்தில் யாழ் அணி, கரவெட்டி கிழக்கு அணி, பருத்தித்துறைஅணி, துன்னாலைஅணி;, மட்டுவில்அணி, மானிப்பாய்அணி, காங்கேசன்துறை அணி, தீவு அணி, இமையாணன் அணி, கம்பர்மலை அணி, என நூற்றுக்கணக்கான அணியினருடன் கன்பொல்லைஅணியும் ஆசிரியர் க.இராசரத்தினம் அவர்களின் முனைப்பில் அணிவகித்து நின்றது. அந்நாட்களின் வரலாறு. இச்சயிக்கிள் ஊர்வலம் சிறப்புற நடந்தேறியமைக்காக அமரர் செல்லையா அவர்கள் அவ்வேளை பெரிதும் பாராட்டிப் பேசப்பட்டார்.
1966 மாசி மாதம் 14ந் திகதி கன்பொல்லைக் கிராமத்தில் ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் கல்வி கற்பதை முன் வைத்து ஓர் பாடசாலை (யா/சிறீநாரதவித்தியாலயம்) க.இராசரத்தினம் அவர்களின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது. அப்பாடசாலையை நிறுவுவதற்கு நிலத்திற்கு சொந்தமானவர்கள் நிலத்தினை வழங்கி ஒத்துழைத்தபோது ஒருவர் மட்டும் மறுத்து குழப்பம் விளைவித்தார். அவ் அங்குரார்ப்பணக் கூட்டத்தில் தலைவர் செல்லையா அவர்களும் கலந்திருந்தார். எப்பொழுதும் பிரச்சினைகள் வரும்போது அதற்கு முகம் கொடுக்கும் அமரர் அவர்கள் குளப்பம் விளைவித்தவரை அணுகி சமாதானம் பேசியுள்ளார். விடயம் முற்றி விவகாரமாகி கைகலப்பு அளவிற்கு போனபோது கன்பொல்லைக் கிராமத்தினைச் சேர்ந்த கட்டுரையாளரின் தந்தை மு.தவராசா (தவம்)அவர்கள் இடையில் தலையிடவே பொலீஸ் வந்து அமரர் செல்லையா அவர்களையும் தவம் அவர்களையும் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தடுத்து வைத்திருந்தது. மறுநாள் எம்.சி.அவர்களும், வ.தங்கமணி அவர்களும் பொலிஸ் நிலையம் சென்று வ.தங்கமணிஅவர்கள் பிணைக்கையெழுத்திட்டு இருவரையும் அழைத்து வந்தார். பின்பு அரசு இப்பாடசாலையை பொறுப்பேற்றபோது இப்பாடசாலைக் ஊடாக பன்னிரண்டு சிறுபான்மைத்தமிழர்களுக்கு ஆசிரிய நியமனம் கிடைத்தது. இன்று பத்தாம் வகுப்புவரை இங்கே மாணவர்கள் கல்வி கற்றுவருகிறார்கள்.
கன்பொல்லைக் கிராமமக்கள் தொடர்ச்சியாக சாதியப்போராட்டத்தினை நடத்திவந்தபோது ஒரு கம்யூனிஸ்ட் என்ற வகையிலும் அனைத்திலங்கை சிறுபான்மை தமிழர் மகாசபையின் முன்னணி உறுப்பினர் என்ற வகையிலும் தோழைமையோடு அவர்களுடன் அமரர் செல்லையா அவர்கள் இணைந்து செயற்பட்டு வந்துள்ளார்.

தொடர்ச்சியாக சிறுபான்மைத் தமிழர் மகாசபை, தீண்டாமைஒழிப்பு வெகுசன இயக்கம் முன்னெடுத்த தேனீர்க்கடைப் பிரவேசம், ஆலயப்பிரவேசம் என பஞ்சமர்களின் சமத்துவத்திற்கான அனைத்துப் போராட்டங்களிலும் பங்கேற்றுள்ளார். ஒரு சமயம் மாவிட்டபுரம் கந்தசாமி கோவில் பிரவேசத்தின்போது மண்டையில் பலமாக அடிப்பட்டார். இவரது கிராமத்தினை அண்டிய பிரதேசத்தில் அமைந்துள்ள வல்லிபுரக்கோவில் பிரவேசத்தின்போது எம்.சியும், அமரர் அவர்களும், தவயோகம், மற்றும் துன்னாலையை சேர்ந்த ஊ.வு.டீ செல்லையா, அரசடி குழந்தையப்பா, க.இராசரத்தினம் மற்றும் தானும் முன்வரிசையில் கோவிலுக்குள் சென்றபோது எங்களின் வீட்டு அர்ச்சனைத் தட்டைத்தான் எம்.சி அவர்கள் வாங்கி முதல் முதலாக அர்ச்சனை செய்வித்தார் என எனது தந்தையார் மு.தவராசா சொல்லி மகிழ்வார். அங்கு கோயில் உள் மண்டபத்தில் துவக்குகள் சாத்தி வைக்கப்பட்டிருந்தை தாங்கள் கண்டதாகவும் கோயில் மணியம் வே.க.வல்லிபுரமும் சில அடியாட்களும் இரண்டாம் மண்டபத்தில் நின்றதாகவும், எம்.சி யின் ஏற்பாட்டில் பொலிசும் ஆமியும் பந்தோபஸ்திற்கு வந்து நின்றதாகவும். இருந்தபோதும் தாங்களும் பன்றித்தலைச்சி அம்மன் ஆலயத்திற்குள் ஆயுதங்களை கொண்டு போன அதே பாணியில் பொங்கல்ப் பானைக்குள் கைக்குண்டுகளை கொண்டுபோனதாகவும் ஆமி நின்றபடியால் எந்தவித அசம்பாவிதமுமின்றி ஆலயப் பிரவேசம் நடந்ததாகவும் அவர் கூறினார்.
எம்.சி அவர்கள் நியமன எம்பியாக இருந்தபோது அமரர் அவர்கள் சிபார்சு செய்து தனது கிராமத்தில் ஆட்டுப்பட்டிக் குறிச்சியில் சாதிமான் அருமைத்துரை என்பவனுக்கு சொந்தமாயிருந்த எழுபத்தைந்து பரப்பு காணியினை அரசினால் சுவீகரித்து அங்கு வாழ்ந்த பஞ்சமர்களுக்கு உரிமையாக்கினார். சாதியச் சண்டையில் ஆயுள் தண்டனை அனுபவித்துக் கொண்டிருந்த தன் கிராமத்தினைச் சேர்ந்த மாம்பழன், சீனியன் சகோதரர்களை பிரதம மந்திரி சிறீமாவோ பண்டாரநாயக்கா அவர்களின் பொது மன்னிப்பின் பேரில் விடுதலை வாங்கிக் கொடுத்தார். மேற்கொண்ட காரியங்களுக்காக இவரது உயிருக்கு அச்சுறுத்தல் வந்தபோதும் அதனை துச்சமாக மதித்து எம்.சிக்கூடாக இவற்றை செய்து முடித்தார்.
அமரர் அவர்களின் தொடர்ச்சியான பணிகளினூடே சிறுபான்மைத்தமிழர் மகாசபையின் நிர்வாகக் காரியதரிசியாகவும், கட்டைவேலி நெல்லியடி.ப.நோ.கூ.சங்க பணிப்பாளர்சபைத் தலைவராகவும், கட்டைவேலி. உடுப்பிட்டி. தெங்குப்பனம்பொருள். உற்பத்தி விற்பனவு கூட்டுறவுச் சங்கத்தின் தலைவராகவும், பனை அபிவிருத்தி பணிப்பாளர்சபை பணிப்பாளராகவும், கடற்தொழில்அமைச்சின் பணிப்பாளர்சபை உறுப்பினராகவும், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் உத்தியோகப்பற்றற்ற மேற்பார்வையாளராவும், சமாதான நீதிவானகவும் பயணித்துள்ளார்.
இவர் போன்ற சமூக விடுதலைப் போராளிகளின் இரத்தம், வியர்வை, சிறைவதைக் கொடுமை இவற்றினூடேதான் இன்றைய ஈழத்தில் வாழும் பஞ்சம இளம் சந்ததி இன்றுவரையுள்ள சமத்துவத்தினை அனுபவிகின்றது. இப்போராளிகள் கருப்பாகிக் கிடந்த ஈழமண்ணில் எழுந்து பழுத்து வீழ்ந்தாலும், எல்லாம் விலகிப்போச்சு என்ற வெறும் தோற்றப்பாடு இருக்கும் வரை, என்றும் புதிய விதைகளே!
தகவல்கள்: க.இராசரத்தினம்,
மு.தவராசா(தவம்)
துணைநூல்கள்: சி.கா.செந்திவேல், „இலங்கை இடதுசாரி இயக்கத்தின் 50 ஆண்டுகள்“,
போ.சிறீபவன்,“நந்தா விளக்கு“
இக் கட்டுரை முதலில் „உயிர்மெய்“ யில்-(இதழ் 4, ஐப்பசி-மார்கழி 2007) வெளியாகியுள்ளது.
உயிர்மெய் முகவரி: UYIRMEI, Kaptein Linges vei 9a, 6006 Aaalesund, Norway
editor.uyirmei@hotmail.com

"Karavaithasan" is editor of "INI" and lives in DenmarkLabels: கன்பொல்லை, சிறுபான்மைத்தமிழர் மகாசபை, செல்லதம்பி, செல்லையா >>>மேலும் வாசிக்க>>>
இதனை மின்னஞ்சல் செய்ய!~~~~~~~e-mail this post
|
வார்ப்பும் இடுகையும்:நிச்சாமம் @ 6/23/2008 02:41:00 PM  |
|
|
|
|
|