|
| துப்பாக்கிக் கலாச்சாரத்திலிருந்து மீள்வது எப்போது ? |
| Tuesday, September 29, 2009 |

தயபால திராணகம
கலாநிதி ராஜினி திராணகம அவர்களின் 20 ஆண்டு நினைவை ஏந்தி இக்கட்டுரை இங்கே வெளியிடப்படுகிறது. 1990 இல் பிரான்ஸ், பாரிஸில் கலாநிதி ராஜினி திராணகம அவர்களின் முதலாவது நினைவஞ்சலியில் இக்கட்டுரையின் மொழிபெயர்ப்பாளர் மு.நித்தியானந்தன் "இன்றைய விமர்சனச் சூழலும் ராஜினி திராணகம அவர்களும்" எனும் பொருள்குறித்து விமர்சன உரை நிகழ்த்தியிருந்தார். அனைத்து அச்சுறுத்தல்களையும் புலிக்கும்பல்களிடமிருந்து நாம் அன்றிலிருந்து இன்றுவரை புகலிட நாடுகளில் எதிர்கொண்டிருகிறோம். 20 ஆண்டுகளின்பின் இப்போது கொழும்பில் மீண்டும் ராஜினியை நினைவுகூரும் சூழல் ஏற்பட்டிருப்பது மனதுக்கு ஆறுதலளிக்கிறது. இச்சூழல் தொடர்ந்து பேணப்படவும் வளர்த்தெடுக்கப்படவும் வேண்டும். புலிகள் மீண்டும் எந்த வடிவத்திலேனும் ஒழுங்கமைக்கப்படும்போது கருத்துச்சுதந்திரத்திற்கான அச்சுறுத்தல்கள் மீண்டும் எழாது என்பதற்கு எந்த உத்தரவாதமுமில்லை.
ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை ஒழுங்காகத் தேர்தல் நடத்திக்கொண்டிருக்கிற மூன்றாம் உலக ஜனநாயகத்தின் சிறந்த ஒரு முன்மாதிரியாக 1982 ஆம் ஆண்டுவரை இலங்கை கருதப்பட்டுவந்தது என்பது என்னவோ உன்மைதான். இந்த ஜனநாயக நடைமுறையை மாற்றிப் பொதுசன வாக்கெடுப்புமூலம் தனது ஆட்சிக்காலத்தை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீடித்துக்கொண்டது யு.என்.பி அரசு. 1948 ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரம் பெற்றதிலிருந்து உருவான ஒரு பாராளுமன்ற ஜனநாயகப் பாரம்பரியத்திற்கு விழுந்த மரண அடி இது. இந்த நாட்டின் சமூக அரசியல் வாழ்க்கையை வார்த்தெடுப்பதில் கணிசமான செல்வாக்குச் செலுத்திய ஒரு சோசலிச ஜனநாயக அரசியற் கலாச்சாரத்தின் குரல்வளையை இது நெரித்தது. 1977 ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மைப் பலத்துடன் அதிகாரத்தினைக் கைப்பற்றிக்கொண்ட யு.என்.பி பாராளுமன்ற ஜனநாயகம் என்ற போலி நிழலின் கீழ் எதேச்சாதிகார அரசியல் அமைப்பை நோக்கி நடைபோட்டது. மேலும் 'சுதந்திரம்' அடைந்த காலத்திலிருந்து தொடர்ச்சியாகப் பதவிக்கு வந்த அரசாங்கங்களும் சிறுபான்மை இனங்களின் உரிமைகளை நிராகரித்து பெரும்பான்மை சிங்கள இனத்திற்கு அதிகார பலத்தைப் பெற்றுக்கொடுத்தன. தமிழர்களின்மீதான ஒடுக்குமுறை வேறொரு கட்டத்தை நோக்கி நகர்ந்திருந்தது. தேசிய ஒடுக்குமுறைக்கு எதிராக தமிழர்களின் மத்தியில் எழுந்த மிதவாதிகளின் கிளர்ச்சிக்கு அரசியல் ரீதியில் ஒரு அர்த்தமும் இல்லாதுபோன நிலையில் இது ஒரு அரசியல் வெற்றிடத்தினைத் தோற்றுவித்தது. 1970 களின் பிற்பகுதியில் இந்த அரசியல் வெற்றிடத்தில் ஆயுதம் தாங்கிய தமிழ் இளைஞர்களின் பிரவேசம் நிகழ்ந்தது. இன்றைய அரசியல் நிலைமையின் முதல் சமிக்ஞையே இது.
சிங்களப் பெரும்பான்மை அரசிற்கு ஆயுதம் தாங்கிய தமிழ் இளைஞர்கள் அரசியல் பரிபாசையில் விடுத்த செய்தி பெரும்பான்மை சிங்கள சமூகத்தின் மத்தியில் தீவிர எதிரொலிகளைக் கிளப்பியது. சிங்கள தேசத்தினதும் பெளத்தத்தினதும் பாதுகாவலனாகத் தன்னைப் பிரகடனப்படுத்திய அரசு ஆயுதமேந்திய தமிழர் கிளர்ச்சியை அழித்தொழிப்பதில் மூர்க்கமாக முனைந்தது. சகல இனவெறிப் பிற்போக்குச் சக்திகள் அனைத்தும் தமிழர்களுக்கு எதிரான அரசியல், தத்துவார்த்த சிந்தனை வெறியில் திளைத்தன. நவீன ரக ஆயுத வசதிகளோடு வெற்றிகரமான ஒரு கெரில்லா யுத்தத்திற்கான பலம்மிக்க பின்தளத்தைத் தமிழகத்தில் கொண்டிருந்த ஆயுதந் தாங்கிய தமிழர் இயக்கத்தினை நிர்மூலமாக்கி அழித்தொழிப்பதே இப்போது தாரகமந்திரமாகியது. இந்த அரசியல் நெருக்கடி இலங்கையின் பிராந்திய எல்லையையும் மீறிச்செயற்பட்டது.
கடந்த சில ஆண்டுகளாக எங்கள் மண்ணில் நடந்துகொண்டிருக்கும் இந்த யுத்தம் எமது தேசத்தின் அரசியல் வாழ்க்கையையே முற்றுமுழுதாக இராணுவமயப்படுத்தியது. தமிழ்மக்களுக்கு எதிரான இந்த யுத்தத்தை மகோன்னதப்படுத்தலே தென்னிலங்கை அரசியற்கலாச்சாரத்தின் ஜீவநாதமாகியது. அரசின் ஆதிக்கத்தில் இயங்கிய தொலைக்காட்சி ,வானொலி,செய்தித்தாள்கள் ஆகியவற்றுடன் சேர்ந்து எதிர்க்கட்சியாக இயங்கிய சிங்கள மேலாதிக்கக் கட்சிகளும் இதற்குச் சமமாகத் துணைபோயின. இதன்விளைவு சிங்களத் தேசியவாதம் தீவிர வெறித்தனத்தில் முங்கி எழுந்தது.
கடந்த மூன்றாண்டுகாலத்தில் இந்த அரசியல் நெருக்கடியின் அடிப்படைத்தன்மைகளில் கடுகளவேனும் மாற்றங்கள் ஏற்படவில்லையாயினும் பல புதிய அம்சங்களை அது தனக்குட் சேர்த்துக்கொண்டிருக்கிறது. அரசாங்கத்தின் அடிப்படைகளிற்கும் ஜே.வி.பி(ஜனதா விமுத்தி பெரமுன),அதன் இராணுவப்பிரிவான டி.ஜே.வி(தேசப்பிரேமி ஜனதா வியாபாரய)ஆகிய அமைப்புகளிற்கும் இடையிலான யுத்தமானது இரண்டு பக்கங்களிலிருந்து ஆயுதந்தாங்கிய குழுக்கள் திணித்த பயங்கரவாதம்,வன்முறை, கொலைவெறி என்பவற்றின் நேரடிப்பிரதிபலிப்புத்தான்.
இவை சாதாரண மக்களின் நாளாந்த நடவடிக்கைகள் அனைத்தையும் ஸ்தம்பிக்கச் செய்தன.கிளார்ச்சி என்பதனை நினைத்துக்கூடப்பார்க்கமுடியவில்லை.விமர்சனம் என்ற பேச்சுக்கே இடமில்லை. எக்காலப்பகுதியிலும் இல்லாதவாறு கிளர்ச்சியையும் விமர்சனத்தையும் முன்வைத்தோருக்கு மரணத்தீர்ப்பு மட்டுமே எதிர்முனையில் முன்னால் நின்றது. இந்த அராஜக யுத்தங்கள் நாகரீக சமுதாயத்தின் நல்விழுமியங்கள் அனைத்தையும் தடயமே இல்லாமல் குழிதோண்டிப் புதைத்தன.
நெருக்கடிக்குள் அரசு *****************
இலங்கையின் அரசியல் நெருக்கடி இன்று அரசின் நெருக்கடி ஆகிவிட்டிருக்கின்ற இந்நிலையில் தென்னாசியப்பிராந்திய நாடுகளும் பிற மூன்றாம் உலக நாடுகளும் கற்றுக்கொள்ளவேண்டிய பல முக்கிய பாடங்களை இலங்கை இன்று தன்னகத்தே கொண்டிருக்கிறது. இன ரீதியிலான வேறுபாடுகள் கொண்ட பல்லினச் சமூகங்களில் ஒற்றையாட்சி அமைப்பொன்றினைப் பலவந்தமாகத் திணிப்பதால் ஏற்படக்கூடிய அரசியல் விளைவுகள் எத்தகையதாய் அமையும் என்பதைப் பற்றிய பாடமே அது.
இத்தகைய அரசுகளில் ஜே.வி.பி /டி.ஜே.வி போன்ற அமைப்புகள் செழித்து வளர்வதற்கான சாத்தியங்கள் நிறையவேயுள்ளன. இவை சமூக வளர்ச்சியின்மீதும் புரட்சிகர சமூக மாற்றத்தின்மீதும் மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தவல்லன. முதலாளித்துவத்திற்கு முன்னைய காலகட்ட குணாம்சங்கள் கொண்ட சமூக உருவாக்கத்தில் நிலப்பிரபுத்துவ கருத்தாக்கங்கள் நிலவுவதே இத்தகைய அரசியல் நிலைமைகள் நிலைமைகள் வேரூன்றுவதற்கான தத்துவார்த்த தளமாக அமைகின்றன. இத்தகைய நிலைமைகளில் எந்த இனவாரி சமூகமும் 'கலாச்சார அடிப்படைவாதத்தினை'நோக்கிய - அது எத்தகைய மோசமான வன்முறை வடிவங்களைக் கொண்டிருந்தாலுங்கூட - ஒரு புத்தெழுச்சியை நாடிநிற்பது இயல்பாகும்.இத்தகைய தூய - தனித்துவ - பழமை தழுவிய கலாச்சார வாதத்தினை நோக்கிய புத்தெழுச்சி பிற இனவாரி சமூகங்களையும் அத்தகைய வாதத்தினை மேற்கொள்ளத்தூண்டும்.
இலங்கையின் மூன்றாவது பெரிய இனவாரி சமூகமான முஸ்லிம் சமூகத்தினர் சிங்கள,தமிழ் சமூகங்களால் தமது தனித்துவங்களும் உரிமைகளும் புறக்கணிக்கப்பட்டுவிடும் என்ற அச்சம் காரணமாக ,அரசியல் ரீதியாக தாம் நிலைபெறவேண்டுமெனில் தீவிர இஸ்லாமிய அடிப்படைவாதத்தினை விட்டால் வேறுவழி இல்லை என்று அதிலேயே தஞ்சம்புகுந்துள்ளனர். இலங்கையின் இன்றைய பின்னணியில் இதன் அர்த்தம் யாதெனில் ஒவ்வொரு இனவாரி சமூகமும் ஆயுதபாணியாகித் தயார் நிலையில் இருக்கிறது என்பதுதான்.இலங்கைபோன்ற பல் இனச்சமூகங்களைக்கொண்ட ஒரு தேசத்தில் ஒவ்வொரு சமூகமுமே ஆயுதப்போரட்டத்தின் அதியுச்ச வன்முறை வடிவங்களின் பலத்துடன் தமது அரசியற் கோரிக்கைகளை முன்வைக்க ஆரம்பிக்கிறது. இவ்வாறு அதிதீவிர தேசியவாதமும் பெரும்பான்மைச் சிங்களச் சமூகத்தில் ஜே.வி.பி.,தமிழ்ச்சமூகத்திலிருந்து எல்.ரி.ரி.ஈ போன்ற ஆயுதக்குழுக்களுமே இன்றைய இலங்கை நெருக்கடியின் மத்தியஸ்தர்களாகத் தோற்றம் தருகின்றன.
பெரும்பான்மைச் சமூகத்தின் சிங்கள மேலாதிக்கவாதத்திற்கு எப்போதுமே துணைபோகும் பூர்சுவா அரசும் இந்த நெருக்கடியிலிருந்து மீள்வதற்குரிய ஒரேஒருவழி இராணுவத்தீர்வுதான் என்று கருதுகிறது.இவ்வாறு கருதிக்கொண்டு தீவிர சிங்களவாத ஜே.வி.பி போன்ற குழுக்களையும் தாக்கத்தொடங்கும்போது நிலைமை மேலும் சிக்கலாகிவிடுகின்றது.எளிமையான ஆய்வுகளும் தீர்வுகளும் இந்நிலையில் சாத்தியமற்றுப்போய்விடுகின்றன. இராணுவமயமாக்கலிலிருந்து மீள்வோம் என்ற கோசத்தின் அரசியல் ,தார்மீக நியாயத்தை விளங்கிக்கொள்வதற்கு இந்த நிலைமையின் சிக்கலான குணாம்சங்களை விளங்கிக்கொள்வது முதலில் அவசியமானதாகும். இன்றைய இந்த நெருக்கடியின் பயங்கர வன்முறை வடிவிலான குமுறல் 1983 இற்கு நம்மை இட்டுச்செல்கிறது.இந்த ஆண்டிற்தான் பெரும்பான்மைச்சிங்கள சமூகத்தின் தீவிர இனவாத சக்திகள் தமிழருக்கு எதிரான குரூர வன்முறைகளைக் கட்டவிழ்த்துவிட்டிருந்தன.இன்றைய இந்த நெருக்கடிக்குக் காரணமான சக்திகள் தமது உண்மையான சொரூபத்தை அப்பட்டமாகக் காட்டி அழிவு நடவடிக்கைகளில் இறங்கின. 1983 இன் இனக்கலவரங்களுக்குப் பிறகு ஆயுதந்தாங்கிய தமிழர் இயக்கங்கள் ஆயிரக்கணக்கில் குவிந்த இளைஞர்களுடன் எண்ணிக்கையில் பல்கிப்பெருகின. இதே நேரத்தில் யு.என்.பி. அரசு தமிழருக்கெதிரான சகல அடக்குமுறைகளையும் கட்டவிழ்த்துவிட்டது.இவ்வாறு 'தமிழர்விரோத தத்துவார்த்த அரசியல் வெறித்திரைக்குள் -தடுப்பிற்குள்' (கட்டுரையாளர் இதை அன்ரி ரமில் ஐடிஓலொயிக்கல் அன்ட் பொலிடிகல் ப்ளொக் - என்று குறிப்பிடுகிறார்) தனது ஆதிபத்திய நிலையைத் தக்கவைத்துக்கொண்டது.
இத்தகைய காட்டுமிராண்டித்தனமான - குரூரமான - ஒடுக்குமுறைபோல ஒன்றினை நாம் சரித்திரத்தில் இதற்குமுன்னர் எங்கும் கண்டதில்லை.தமிழ்ச்சமூகத்தின் சகலபிரிவினர் மத்தியிலும் இது பயங்கர அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த தமிழர் விரோத அரசியல் அணி சிறீலங்கா சுதந்திரக் கட்சி,மகாஜன எக்சத் பெரமுன,ஜே.வி.பி போன்ற கட்சிகளைக் கொண்டிருந்தது.இந்தக் கட்சிகளுக்கிடையே தந்திரோபாய ரீதியில் சிற்சில வேறுபாடுகள் காணப்பட்டன என்பதைத்தவிர இவற்றிற்கிடையே பெரிய வித்தியாசம் ஏதுமில்லை. தமிழ்மக்களிற்கெதிரான துவம்ச யுத்தம் ஒன்றை யு.என்.பி. அரசு நடாத்திக்கொண்டிருந்த அதேவேளையில் இந்த தமிழர் விரோத அணியினைச் சார்ந்தவர்களோ தமிழ் தீவிரவாத இயக்கத்தை வெற்றிகரமாக அழித்தொழிக்க அரசு திராணியற்றுப்போய்க்கொண்டிருக்கிறதென்று கண்டித்துக்கொண்டிருந்தனர். இந்த தமிழர் விரோத அணியின் தலைமையை யார் சுவீகரிப்பது என்பதற்கான போட்டாபோட்டிகள் ஆரம்பமாகிவிட்டன என்பது தெளிவாக இருந்தது.
தவறான நியாயிப்புகள் *********************
இந்தக் காலகட்டத்தில் தீவிர சிங்கள தேசியவாதத்தின் அச்சொட்டான வெளிப்பாடாய் ஜே.வி.பி /டி.ஜே.வி அமைப்பு பரந்த இயக்கமாக வளார்ச்சியடைந்துகொண்டிருந்தது.இதனை ஒற்றைத்தனியான வளர்ச்சியாகவோ சுத்த சுயம்புவான வளர்ச்சியாகவோ நோக்கமுடியாது. ஜே.வி.பி யின் அரசியல் தோற்றப்பாட்டிற்குப் போலி நியாயர்த்தம் கற்பிக்கக்கூடிய முக்கிய பல துணைக்காரணிகள் இருக்கவே செய்கின்றன. முதலாவதாக, இக்காலகட்டத்தில் பெரும்பான்மை சிங்கள சமூகத்தின் தொழிலாளர் வர்க்கம் உள்ளிட்ட சகல சமூகப்பிரிவினருமே சிங்கள - பெளத்த கருத்தாக்கத்திற்கு இரையாகிப்போயிருந்தனர்.தமிழருக்கு எதிரான இனவாத வெறுப்பைக்கொண்ட சிங்கள - பெளத்த கருத்தாக்கத்தின் நீண்ட பாரம்பரியமானது தனது இன மேலாதிக்கவாத வடிவங்களைப் புனரமைத்துக்கொள்ளும் வகையில் 1983 ஐ அடுத்த காலப்பகுதியில் சுத்த இராணுவமயமாக்கத்திற்கு இடங்கொடுத்தது.தத்துவார்த்த, அரசியல் வெறி இதனைப் பேணிவளர்த்தது. அரச யந்திரமும் பூர்சுவா கருத்தாக்கம் என்ற மெல்லிய படுதாவில் வைத்து இக்கருத்தாக்கத்திற்கு வர்ணப்பூச்சு இட்டிருந்தது. பாரம்பரிய இடதுசாரிக் கட்சிகளும் பாராளுமன்ற வலைப்பின்னலுக்குட் சிக்கிக்கொண்டு பெரும்பான்மைச் சிங்கள இனத்தின் அரசியல் ஆதரவை நாடி , சிங்கள - பெளத்த கருத்தாக்கத்திற்கு எதிரான தமது கோட்பாட்டு ரீதியிலான போராட்டத்தைப் பூரணமாகக் கைவிட்டுவிட்டனர். உண்மையைச் சொல்லப்போனால் ,தமிழர்களின் ஜனநாயக உரிமைக்காக ஒருகாலத்தில் மகோன்னதமான போராட்டத்தில் எல்லாம் ஈடுபட்ட இடதுசாரிகள் தற்போது அதனைக் கைவிட்டதுமல்லாமல் சிங்கள - பெளத்த கருத்தாக்கத்திற்கு இசைவாக கோட்பாட்டு ரீதியில் சில விட்டுக்கொடல்களைச் செய்யவும் முன்வந்தார்கள்.
இரண்டாவதாக , இலங்கைச்சமூகத்தின் இடைத்தட்டு வர்க்கத்தின் அபிலாசைகளையும் புரட்சிகர சமூகமாற்றத்தின் புரட்சிகர சமூகமாற்றத்தில் அவர்களுக்கிருந்த விருப்புணர்வையும் இடதுசாரிக்கட்சிகள் விளங்கிக்கொள்ளவில்லை. இந்த நிலைமை ஜே.வி.பி/டி.ஜே.வி கட்சி பெருவாரியான இளைஞர்களைக் தமது பக்கம் இலகுவாக வென்றெடுத்துக்கொள்ளப் பெரிதும் உதவியது.இது ஜே.வி.பி இற்கான முக்கிய சமூகத்தளத்தை அமைத்துக்கொடுத்தது.குறிக்கப்பட்ட விசேட அரசியல் கால இணைவில் கிராமிய இளைஞர்களின் தளமே இது. சிங்கள பெளத்த கருத்தாக்கத்திற்கு சடுதியாக இரையாகிவிடக்கூடிய கிராமிய இளைஞர்களே அவர்கள். இதனைவிட புரட்சிகர சமூகமாற்றத்திற்கு ஜே.வி.பி தந்த ஆயுதப்போராட்டம் பற்றிய விளக்கம் அரசியல்ரீதியில் முழுப்பிழையானது என்றால் இடதுசாரிகளிடமோ இதற்கு மாற்றாக வைக்கத்தக்க எந்தக்கோட்பாடுமே கைவசம் இருக்கவில்லை.
மூன்றாவதாக , பல்வேறு காரணங்களால் அரசு மக்கள் மத்தியில் தனது செல்வாக்கை வேகமாக இழந்துகொண்டிருந்தது.தமிழ்மக்களுக்கு எதிரான யுத்தத்தால் மக்கள் மீதான சுமை வெகுவாய் அதிகரித்தது.வறுமையும் பட்டினியும் போசாக்கின்மையும் வேலையில்லாத் திண்டாட்டமும் முன்னென்றும் இல்லாதவாறு அதிகரிக்க ஆரம்பித்திருந்தன. இதே நேரத்தில் சமூகநலவாய அரசு என்பதனைப் படிப்படியாகச் சிதைக்கும் கைங்கரியத்தை யு.என்.பி பூரணமாக நடத்தி முடித்துவிட்டது. சுகாதாரத்தையும் கல்வியையும் தனியார்மயப்படுத்த முனைந்ததன்மூலம் அது மக்கள்மீது பெரும்பழுவைச் சுமத்தியது. அடிப்படையில் இந்த அரசு ஜனநாயக விரோத அரசாக மாறியது.திட்டவட்டமாகத் தாங்கள் தோற்கப்போகும் ஒரு யுத்தத்தை அது நிர்த்தாட்சண்யமாகக் கொண்டு நடத்தியது.
நான்காவதாக, 1987 ஆம் ஆண்டின் இலங்கை - இந்திய ஒப்பந்ததையடுத்தும் வடகிழக்கில் இந்திய இராணுவம் வந்திறங்கியதையடுத்தும் நிகழ்ந்த பரபரப்பூட்டும் நிகழ்ச்சிகள் தமிழர்கட்கெதிரான யுத்தத்தை முற்றுகைக்குக் கொண்டுவர இலங்கையை நிர்ப்பந்தித்தன. இந்தக்கட்டத்தில் நாம் மேலே குறிப்பிட்ட தீவிர தத்துவார்த்த ,அரசியல் வெறி அணியின் தலைமைப் பாத்திரத்தை அரசு இழந்துவிட்டது. சிங்கள மேலாதிக்கவாதிகளின் கண்ணோட்டத்தில் , 'இந்திய ஆக்கிரமிப்பிற்கு ' வழிசமைத்ததன்மூலமும் வட- கிழக்குப் பகுதிகளைத் தமிழர்களிற்குத் தாரைவார்த்துக் கொடுத்துவிட்டதன்மூலமும் அரசுதான் பிரதான குற்றவாளியாகக் காணப்பட்டது. இந்திய எதிர்ப்பு உணர்ச்சி அலையிலிருந்து எழுந்த 'தேசபக்தவாதம்' எனும் புதிய வெளிப்பாடு ஜே.வி.பி இற்கு பலம்வாய்ந்த அரசியல் ஆயுதமாகியது. ஜே.வி.பி யின் காலம் இப்போது கனிந்துவிட்டிருந்தது. இந்தியத்துருப்புகளை இந்தியாவிற்குத் திருப்பியனுப்பத்தக்க பலம் மிகுந்த ஒரு அரசாங்கத்தை அமைக்க ஜே.வி.பி இப்போது அறைகூவியது. இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்ட மாகாண சபைகளைக் கலைக்குமாறும் இவர்கள் கோரிக்கை வைத்தனர்.
தமிழர்களிற்கு அதிகாரப்பரவலாக்கத்தை வழங்கும் நோக்கில் இந்தச் சபைகள் அமைக்கப்பட்டாலும் உண்மையில் தமிழர்களிற்குப் பெரிதாக எதையும் இவை வழங்கிவிடவில்லை. ஆனால் ஜே.வி.பி /டி.ஜே.வி யும் பிற சிங்கள மேலாதிக்கவாத சக்திகளும் தமிழர்கள் கோரும் தனிநாடு என்றும் தமிழீழத்தை அமைப்பதற்கான முதற்படியே இது என்றும் குற்றம் சுமத்தின. இதனால் சிங்கள இனத்திற்கு யு.என்.பி பெருந் துரோகம் இழைத்ததாகக் குற்றம் கூறப்பட்டது. இந்தக் கைப்பொம்மை அரசைத் தூக்கிஎறியவேண்டும் என்பதே அப்போதைய பிரதான அரசியற் கோசமானது.
கிளர்ச்சியும் வன்முறையும் ************************
1987 இலிருந்து ஜே.வி.பி /டி.ஜே.வி ஈவிரக்கமில்லாத ஆயுத நடவடிக்கைகளில் இறங்க ஆரம்பித்துவிட்டது.இவர்களின் இலக்கு ஆட்சியிலிருந்த 'பொம்மை அரசை ' மட்டுமே குறித்து அமையவில்லை. பெரும்பான்மைச் சிங்கள மக்கள் மத்தியிலிருந்து தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை ஆதரித்து நின்றவர்களையும் இனப்பிரச்சனைக்கு அரசியற்தீர்வாக தமிழர்கட்கு அதிகாரப்பரவலாக்கத்தை வழங்கவேண்டுமென்று வந்தவர்களையும் இவர்கள் கொடூரமாகக் கொலைசெய்தனர். பாரம்பரிய இடதுசாரிக்கட்சிகளில் தீவிரமாக இயங்கியவர்களையும் புதிய இடதுசாரிகள் குழுவினரையும் ஜே.வி.பி யினர் இவ்வாறு கொன்றுதீர்த்தனர். ஜே.வி.பி தனது ஆயுத நடவடிக்கையின் ஆரம்பக்கட்டத்தில் அரசின் பாதுகாப்புப்படையின் கீழ்மட்டத்தைச் சேர்ந்த இராணுவ வீரர்களின் அனுதாபத்தைத் தம்பக்கம் ஈர்த்துக்கொள்ளக்கூடியதாக இருந்தது. ஜே.வி.பி தோற்றம்பெற்ற அதே சமூகத்தளத்தைச் சேர்ந்தவர்களாக இவர்களும் இருந்ததால் இது லேசானதாக இருந்தது. அத்துடன் ஜே.வி.பி யின் தீவிரவாதத்தை நெறிப்படுத்திய சிங்கள - பெளத்த தத்துவார்த்த சிந்தனைக்கு இவர்கள் எளிதில் வசமாகினர்.
சிங்கள தேசியவாதத்தை ஒரு அரசியல் ஆயுதமாகப் பாவித்து இந்த பூர்சுவா அரசைத் தூக்கி எறியத்தக்க தெட்டத்தெளிவான தந்திரோபாயக்கொள்கையைத் தாங்கள் கொண்டிருப்பதாக ஜே.வி.பி/டி.ஜே.வி கூறிக்கொண்டது.இடதுசாரிகளைக் கடுமையாகத்தாக்கி ,சோசலிச ஜனநாயக சக்திகளுக்கும் தங்களுக்கும் இடையில் அவர்கள் இரத்தத்தால் கோடு கீறினர். இப் போக்கு பாரம்பரிய இடதுசாரிக்கட்சிகள் செல்வாக்குப் பெற்றிருந்த தொழிலாளர் வர்க்கத்தின் ஸ்தாபனமயப்பட்ட விழிப்புணர்வுகொண்ட ஒரு பகுதியிடமிருந்து ஜே.வி.பி யை மேலும் மேலும் அந்நியப்படுத்திவிட்டது. அரசாங்கத்திற்கு ஆதரவாக இருந்து செயற்பட்டவர்களை இவர்கள் தொடர்ச்சியாகக் கொலைசெய்துகொண்டிருந்த நேரத்தில் அரசாங்கத்தின் கொலைப்படைக் குழுக்களும் செயற்பட ஆரம்பித்திருந்தது.ஜே.வி.பி/டி.ஜே.வி யினர் தமது அரசியற் கொள்கையை ஏற்றுக்கொள்ளாத தொழிற்சங்கங்கள் ,இடதுசாரிக் கட்சிகள் உள்ளிட்ட சகல அரசியற்கட்சிகள் ,அவர்களது பத்திரிகைகள் அனைத்திற்கும் தடைவிதித்தார்கள் . மனித உரிமைகள் இயக்கம், சமூக நிவாரண சேவை ஸ்தாபனங்களைக்கூட இவர்கள் விட்டுவைக்கவில்லை.இந்த அமைப்புகளைச்சேர்ந்த அனைவர்மீதும் இவர்கள் கொலை மிரட்டல்களை மேற்கொண்டதுடன் அவற்றை நடைமுறைப்படுத்தவும் ஆரம்பித்துவிட்டனர்.அவர்களுடைய அரசியற் கொள்கையோடு ஒத்துப்போகக்கூடிய சிறீலங்கா சுதந்திரக் கட்சி ,மகாஜன எக்சத் பெரமுன போன்ற கட்சிகளைக்கூட அவை 1988 டிசம்பர் பொதுத்தேர்தலில் பங்குபற்றத்தீர்மானித்திருந்தன என்ற காரணத்தால் 'துரோகிகள்' என்று ஜே.வி.பி யினர் முத்திரை குத்தினார்கள்.இக்கட்சிகளின் தேர்தல் வேட்பாளர்களும் அவர்களுக்காக உழைத்த கட்சி அங்கத்தவர்களும் கொலை செய்யப்பட்டனர். இந்த நிலைமைகள் ஜே.வி.பி யை முன்னென்றும் இல்லாதமாதிரி அரசியல் ரீதியில் தனிமைப்படுத்துவதில் போய் முடிந்தது.இவர்கள் விசேடமாக கிராமப்புறங்களில் வேலை நிறுத்தங்களை ஆரம்பிப்பதிலும் ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதிலும் இப்போது இறங்க ஆரம்பித்தனர்.கடந்த ஆண்டின் (1989)நடுப்பகுதியில் தாம் நிர்ப்பந்தித்த வேலைநிறுத்தங்களில் பங்குகொள்ளாதவர்களையும் தாம் மேற்கொண்ட ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொள்ளாதவர்களையும் இவர்கள் கொலைசெய்துவிட்டனர்.
ஜே.வி.பி யினர் அறிவித்த பொதுவேலைநிறுத்தத்தில் பங்குபற்றவில்லை என்ற காரணத்திற்காக மட்டும் 250 இற்கும் மேற்பட்ட பாடசாலை ஆசிரியர்களும் 200 பஸ் சாரதிகளும் சர்வசாதாரணமாக சுட்டுக்கொல்லப்பட்டனர். அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் 'ரூபவாகினி' தொலைக்காட்சி நிலையத்தை இயங்கக்கூடாதென்று தாங்கள் தடைசெய்துவிட்டபிறகும் அங்கு பணியாற்றினார்கள் என்ற காரணத்தால் திறமைவாய்ந்த தொலைக்காட்சிக் கலைஞர்கள் கொலை செய்யப்பட்டனர்.ஜே.வி.பி யின் இந்த மரணதண்டனைகளும் கொலை மிரட்டல்களும் ஜனங்கள் மத்தியில் பயங்கரமான அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்தியது.இவர்கள் ஆட்சி அதிகாரத்திற்கு வந்துவிடக்கூடிய சாத்தியமும் உள்ளதுபோல் இருந்ததால் மக்களும் பயந்து இவர்களுடைய கட்டளைகளுக்குப் பணிந்து நடக்க ஆரம்பித்தனர்.
ஜே.வி.பி பொதுமக்களைப்பற்றிக் கொண்டிருந்த கருத்து ஹிட்லர் ஜெர்மானிய மக்களைப்பற்றிக் கொண்டிருந்த கருத்தைத்தான் நினைவிற்குக் கொண்டுவருகிறது.தான் விடுக்கும் கட்டளைகளுக்குப் பணிந்து நடக்க மட்டுமே லாயக்கான செம்மறியாட்டுக்கூட்டமாகவே ஹிட்லர் மக்களைக் கருதினான். இந்த நிலையில் ஜே.வி.பி/டி.ஜே.வி யால் தடைவிதிக்கப்பட்ட அரசியற் கட்சிகள் மற்றும் அமைப்புகள் ,தனிநபர்களுங்கூடத் தமது சுயபாதுகாப்புக்கருதி ஆயுதபாணிகளாக நேர்ந்தது.
ஜே.வி.பி/டி.ஜே.வி யினரை பாதுகாப்புப் படைகளாலும் அழித்தொழிக்கமுடியாத நிலையில் அரசாங்கமோ ஒன்றும் செய்துகொள்ளமுடியாத நிலையில் இருந்தது. 1989 யூலை மாதத்தில் அரசின் இராணுவப்படையைச்சேர்ந்த அனைவரும் அந்த மாதக்கடைசிக்குள் தமது பதவிகளை ராஜினாமாச் செய்துவிட்டு வெளியேறவேண்டுமென்று ஜே.வி.பி காலக்கெடு விதித்தது.அவர்கள் அவ்வாறு தங்கள் பதவிகளை ராஜினாமாச்செய்யவில்லயென்றால் அவர்களது குடும்பத்தவர்கள் படுகொலை செய்யப்படுவார்கள் என்றும் அவர்கள் அறிவித்தனர். இந்த அறிவித்தலுக்கு இராணுவப்படையினர் செவிசாய்க்காது போனதும் ஜேவிபி யினர் தாம் விடுத்திருந்த கொலைமிரட்டல் பிரகாரம் இந்த ராணுவப்படைவீரர்களின் குடும்பத்தினர்,உறவுக்காரர்களைப் பெருமளவில் கொலைசெய்ய ஆரம்பித்துவிட்டனர்.
ஜே.வி.பி யின் இந்தக் கொலைபாதகச்செயல்களாற் கொதிப்புற்ற ஆயுதப்படையின் சகல மட்டங்களைச் சேர்ந்தவர்களும் இந்தப் படுகொலைகளிற்கு மூர்க்கமாகப் பழிவாங்க ஆரம்பித்தனர். ஜே.வி.பி/டி.ஜே.வி யின் உறுப்பினர்கள் ,ஆதரவாளர்களைக் கொலைசெய்யும் படலம் இப்போது ஆரம்பித்துவிட்டது. ஜே.வி.பி யினரின் சடலங்கள் வீதியோரங்களில் வீசப்பட்டுக்கிடப்பதும் ஆற்றில் மிதந்துசெல்வதும் நாளாந்தம் நடைபெறும் நிகழ்ச்சிகளாகிவிட்டன. இது இன்றும் எந்தத்தடங்கலுமில்லாமல் தொடர்ந்துகொண்டிருக்கிறது.இந்த நெருக்கடியைத் தீர்ப்பதற்கு யு.என்.பி அரசு தீவிர இராணுவ ரீதியிலான அணுகுமுறையை கைக்கொண்டது. ஜே.வி.பி /டி.ஜே.வி போன்ற ஒரு அரசியல் அமைப்பு உருப்பெற்றதற்கான புறநிலை அரசியற் காரணங்களை அரசு விளங்கிக்கொள்ளவில்லை.கடந்த ஆண்டின் இறுதியில் ஜே.வி.பி தலைவர் ரோகண விஜேவீர உட்பட மேல்மட்ட தலைமைப்பீடம் முழுவதையுமே ஆயுதப்படையினர் அழித்துவிட்டனர்.
அரசின் கொலைப்படை ********************* இப்போது அரசாங்கத்தின் கொலைக்குண்டர் படையினர் மற்ற எதிர்த்தரப்பு அரசியற்கட்சிகளின்மீது தமது கைவரிசையைக் காட்ட ஆரம்பித்துவிட்டனர். இடதுசாரிகள் உட்பட அரசாங்கத்திற்கு எதிராகச்செயற்படும் அரசியற் கட்சிகளைச் சார்ந்த ஆதரவாளர்களையும் கொலை செய்த சம்பவங்களும் இடம்பெற ஆரம்பித்துவிட்டன. இலங்கையின் முழுச்சமூக அமைப்பையும் வன்முறையும் மரணமும் அச்சுறுத்தியது.சுயமாக மக்கள் தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்கும் உரிமையை ஆயுதக்குழுக்கள் எல்லாப்பக்கத்திலுமே இல்லாமற் செய்துவிட்டன. ஜே.வி.பி/டி.ஜே.வி மேற்கொண்ட ஆயுத நடவடிக்கைகளின் ஜனநாயக விரோத பாஸிசப்போக்கானது அரச ஆயுதப்படையினர் தமது கொலைகளைச் சரியென்று நியாயப்படுத்திக்கொள்ள வசதிசெய்து கொடுத்தது.உண்மையில் அரசு ஆயுதமுனையில் நடத்திய அட்டூழியங்களுக்கு ஜே.வி.பி யின் போக்கு அரசியல் நியாய அந்தஸ்த்தைத் தேடிக்கொடுத்தது. ஜே.வி.பி/டி.ஜே.வி யின் இராணுவ வலிமையை நசுக்கியதும் அரசாங்கத்தின் ஆயுதப்படையினர் தமது வழமையான ஆதிக்க எல்லைகளுக்கு அப்பாலும் தமது வலிமையை விஸ்த்தரித்துக்கொள்ள ஆரம்பித்துவிட்டனர். இது இப்போது தலையாய அரசியற் காரணியாக மாறிக்கொண்டுவருகிறது.இந்த அச்சுறுத்தும் நிலைமையே அடுத்த சில தசாப்தங்களில் இலங்கை மக்களின் அரசியல் விதியைத் தீர்மானிப்பதாக அமையப்போகிறது. மேலும் ஜே.வி.பி/டி.ஜே.வி யினர் முன்வைத்த அரசியற்கோரிக்கைகளும் மாகாணசபைகளை நீக்குமாறும் தமிழ்மக்களுக்கு அதிகாரப்பரவலாக்கம் வழங்கப்படுவதை எதிர்த்தும் செயற்பட்ட பிற இனவாத சக்திகளின் நிலைப்பாடுகளும் இலங்கை மண்ணில் இந்தியா தமது படைகளை நிலைநிறுத்திக்கொள்வதற்கு இந்தியாவிற்கு நல்ல சாட்டாக அமைந்தது. இந்தியப்படைகள் இங்கு நிலைகொண்டமை இலங்கையின் அரசியல்வாழ்வு மேலும் ஒருபடி இராணுவமயமாவதையே துரிதப்படுத்தியது. எல்.ரி.ரி. ஈ , ஈ.பி.ஆர். எல். எவ் இயக்கங்களுக்கிடையிலான மோதல்கள் பயங்கர அழிவிற்குத்தான் இட்டுச்செல்லுமென்பது உறுதியாகிவிட்டது.
புலிகளிற்கெதிராக ஈ.பி.ஆர் .எல் .எவ் வை இந்தியா இராணுவ ரீதியில் பலப்படுத்திய அதேநேரம் எல்.ரி.ரி.ஈ இலங்கை அரசின் உதவியை நாடிநின்றது. ஏறத்தாள எல்லாச் சக்திகளுமே ஒன்று மற்றக் குழுக்கள்மீது தாக்குதலை மேற்கொள்ளும் நோக்கிலோ அல்லது தற்காப்பு நோக்கம் கருதியோ ஆயுதமயமாக்கப்பட்டிருந்தன.ஏதாவதொரு அரசியற் கருத்துப்பரிவர்த்தனைக்காக நிலவிய கொஞ்சநஞ்ச அரசியல் அவகாசத்தையும் (கட்டுரையாளர் இதை பொலிடிகல் ஸ்பேஸ் என்று கூறுகிறார்) பயங்கரவாதமும் வன்முறையும் மரணமும் ஆக்கிரமித்துக்கொண்டுவிட்டது.ஆயுத நடவடிக்கைகளால் இந்த அரசியல் அவகாசமும் (அல்லது அரசியல் கருத்துப்பரிமாறல் செய்துகொள்வதற்குத் திறந்திருந்த சின்ன இடைவெளிகூட)மூடுண்டு போனதும் இனரீதியிலான வேறுபாடுகள் மீண்டும் புதிதாய்த் தலைதூக்கின. ஒவ்வொரு இனத்திற்குள்ளும் குறுந்தேசியவாத உணர்ச்சிகள் ஆயுதரீதியில் வெறித்தனமாக வெளிப்பாடுகண்டபோது முன்னென்றுமில்லாதவாறு அவை ஒவ்வொரு சமூகத்தையும் எதிரும் புதிருமான துருவ நிலைக்குத் தள்ளியது.
சுத்த இராணுவவாதத்தைக் களைதல் ********************************
இந்தத் தேசத்தை அதன் அழிவிலிருந்து மீட்கும் ஒரு நடவடிக்கையாகவும்- இத்தேசத்தில் பல்லின மக்கள் வாழும் தன்மையை பேணிப்பாதுகாப்பதற்காகவும் அரசியல் ரீதியான கருத்துப்பரிவர்த்தனைகளை மேற்கொள்ள ஒரு அரசியல் அவகாசத்தை உருவாக்கி அதனை வளர்த்தெடுக்கவேண்டும். ஜனநாயக உரிமைகள் ஏன்,எவ்வாறு பேணிப் பாதுகாக்கப்படவேண்டும் என்றும் அதிலும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு விசேசமாக தமிழர்களுக்கு அந்த உரிமைகள் விஸ்த்தரிக்கப்படவேண்டும் என்பதுபற்றியும் நாடு தழுவிய பிரக்ஞை உருவாக்கப்படவேண்டும். அரசியற் கருத்துப்பரிமாற்றத்திற்கான ஒரு சூழலை உருவாக்கவேண்டும். குறுந்தேசியவாத சக்திகள் ஆயுதம் தரிக்கும்வரை - அரசியற் கருத்துப்பரிமாற்றத்திற்கு வன்முறை என்ற ஒரேயொரு மொழியைவிட வேறு ஒரு மொழியுமே இல்லை என்று அத்தகைய சக்திகள் கருதும்பட்சத்தில் நாம் மேலே கூறிய கருத்துப்பரிவர்த்தனை என்பது சாத்தியமே இல்லையாகிவிடும். ஒவ்வொரு சமூகத்தின் மத்தியிலும் அது சிங்களவர் மத்தியில் ஜே.வி.பி/டி.ஜே.வி யாக இருந்தாலென்ன அல்லது தமிழர் மத்தியில் எல்.ரி.ரி. ஈ யோ அல்லது வேறு தீவிரவாதக் குழுக்களாக இருந்தாலென்ன அவை நிலைகொண்டு ஆதிக்கம் பெறுவதை நாம் அனுமதித்தோமானால் நாடு இன்னும் இருண்ட அரசியற் சூனியத்தை நோக்கித்தான் செல்ல நேரும்.
மக்கள் தங்கள் கருத்துக்களைச் சுயமாக வெளியிடக்கூடிய ஜனநாயக அரசியல் அவகாசம் இல்லாதுபோனால் - ஜனநாயக அமைப்பு இல்லையென்றாகிவிட்டால் அதிகாரத்தை அவாவிநிற்கும் வன்முறை ஆயுதக்குழுக்கள் இந்நிலையில் பாரதூரமான தீமைகளையே கொணர்ந்து சேர்க்கும். இலங்கையில் இன்றைய சூழலில் இத்தகைய ஒரு சாத்தியப்பாடு இல்லையென்று முற்றுமுழுதாக நிராகரித்துவிடமுடியாது. எனவேதான் சுத்த இராணுவவாதத்தைக் களையும் ஒரு செயற்பாடு நம்முன்னுள்ள உடனடிப் பணியாக உள்ளது. சுத்த இராணுவ வாதத்தைக் களையும் இந்த நடவடிக்கையில் அரசின் பொறுப்புத்தான் மிகவும் பாரியது. இன்றைய இந்த நெருக்கடிநிலை தோன்றியதற்கான மூலகாரணங்களைத் தேடி அவற்றை நீக்குவதற்கான முயற்சியில் அரசு உன்மையிலேயே தன்னை ஈடுபடுத்திக்கொள்ளவேண்டும். சிங்கள பெளத்த தத்துவார்த்தத்திற்கும் பாரம்பரியத்திற்கும் முண்டுகொடுக்கும் அரசின் போக்கு ஒரு முற்றுக்குக் கொண்டுவரப்படவேண்டும். பல்லின மக்களும் பல்தேசியக் கலாச்சாரமும் இன்று அரசியல் ரீதியில் உணர்வுபூர்வமான பிரச்சனைகளாகிவிட்ட இலங்கைபோன்ற ஒரு தேசத்தில் அரசும் அரச யந்திரமும் மதச்சார்பற்ற கொள்கையைக் கடைப்பிடிக்கவேண்டுமென்பது ஒரு வெளிப்படையான உண்மையாகும். நமது அரசியல் வாழ்க்கையிலிருந்து சுத்த இராணுவ வாதத்தைக் களைந்தெறிவதற்குத் தமிழர்களுக்கு அதிகாரப்பரவலாக்கத்தினை வழங்குவது அத்தியாவசியமானதாகும். இலங்கை அரசியலை ஜனநாயகமயமாக்கும் நடவடிக்கையுடன் இது இணைந்து செயற்படவேண்டும்.
இன்றைய நெருக்கடியான தீர்வை இராணுவ ரீதியிலான வெற்றி அல்லது தோல்வி என்ற அர்த்ததில் பேசிக்கொண்டிருந்தால் அழிவுதான் மிஞ்சும்.இன்றைய இந்தப் போராட்டத்தில் யார் வென்றாலும் அது அரசாக இருந்தாலென்ன,வேறு ஆயுதக்குழுக்களாக இருந்தாலென்ன அந்த வெற்றி பொதுமக்களின் விடுதலையின் ,சுதந்திரத்தின் அழிவிற்தான் பெறப்பட்டிருக்கிறதென்றுதான் அர்த்தம். யாரோ ஒரு சாரார் வெற்றி அடைகின்றனர் அல்லது தோல்வியைத்தழுவுகின்றனர் என்றால் மறுசாரார் ஆயுதமுனையில் ஒடுக்கப்படுகிறார்கள் என்றும் ஜனநாயக அரசியலிற்கான சிறிய வாயில்கூட மூடப்பட்டுவிட்டது என்றுதான் அர்த்தமாகும்.வருகின்ற காலங்களில் இலங்கைச் சமூகங்களின் புரட்சிகரமான மாற்றங்களிற்கான நடவடிக்கைகளை பாரதூரமாகப் பின் தள்ளச்செய்யும் நிலையையே இது கோடிகாட்டுகிறது. ஒவ்வொரு இனவாரிச் சமூகமும் அடையவேண்டிய வளார்ச்சியுடனும் அதற்கப்பாலும் முழு இலங்கையினதும் பரந்துபட்ட வளர்ச்சிபற்றிய கண்ணோட்டத்திலிருந்தும் இந்த இராணுவ வாதத்தைக் களையும் நடவடிக்கை மிக இன்றியமையாததாகும்.
இன்று ஏற்பட்டுள்ள நெருக்கடியை ஒரு புரட்சிகரமான நெருக்கடிச்சூழலாகக் கருதுவதற்கில்லை. ஜே.வி.பி/டி.ஜே.வி யினர் முன்வைத்துள்ள அரசியற்கோரிக்கைகள் தற்போதைய அரசியல் நெருக்கடியின் தன்மையானது சாரம்சத்தில் பாஸிசத்திற்கு முன்னைய காலகட்ட குணாம்சங்களையே கொண்டுள்ளது என்பதையே வெளிப்படுத்துகின்றன.ஜே.வி.பி/டி.ஜே.வி தலைமையை அழித்துவிட்டபிறகு அரசினது ஆயுதப்படையினர் உண்மையான அரசியல் அதிகாரத்தினைக் கொண்டவர்களாகத் திகழ்வது சாத்தியமே. ஏனெனில் சிவில் சமூகம் அரைகுறையாகக்கூடச் செயற்படுவதைக்காணோம். அது செயலிழந்து ஸ்தம்பித்து நிற்கிறது.எனவே இராணுவவாதத்தைக் களைவதுதான் இன்றைய நெருக்கடியான தீர்விற்கு நம்முன்னுள்ள ஒரேஒரு வழியாகும்.ஜனநாயகத்தை விஸ்த்தரிப்பது தொடர்பாகப் பேசும்போது ,தற்போது நடைமுறையிலுள்ள அடக்குமுறைச் சட்டங்களான பயங்கரவாதத் தடைச்சட்டம்,நட்ட ஈட்டு உத்தரவாத மசோதா மற்றும் அவசரகாலச்சட்டங்கள் போன்றன நீக்கப்படவேண்டுவது மிகவும் அடிப்படையானதாகும். ஏனெனில் இந்தச் சட்டங்களே இராணுவ நடவடிக்கையின்போது ஆயுதப்படையினருக்கு கேள்விக்கு இடமில்லாத அதிகாரங்களை வழங்குகிறது. இதே அடக்குமுறைச் சட்டங்களையே அரசானது ஜனநாயக ரீதியில் செயற்படும் எதிர்க்கட்சியினை நோக்கியும் பிரயோகித்துள்ளனர். ஜே.வி.பி/டி.ஜே.வி அல்லது எல்.ரி. ரி. ஈ. இராணுவவாதத்தை தார்மீக ரீதியில் நியாயப்படுத்தவே இது துணைபுரிந்துள்ளது.
இலங்கையின் பின்னணியில் இராணுவ வாதத்தைக் களைதல் என்பது அரசியல் யாப்பு ரீதியிலான மாற்றங்களோடு முன்னெடுக்கப்படவேண்டும். இன்று ஆட்சியிலிருக்கும் அரசு இந்தப் பிரச்சனைகளைத் தீர்த்துவைக்கமுடியாத ஒரு கையாலாகாத் தன்மையையே காட்டிநிற்கிறது.எனவே இந்த அரசாங்கம் வெளியேறவேண்டுவதும் பொதுத்தேர்தலை நடத்துவதும் அவசியமானதாகும். ஆயுதக்குழுக்கள் நிலைபெற்றுக்கொண்டிருக்கும்வரை அவை நிலைபெறுவதற்கான அரசியற் சூழ்நிலைகள் அப்படியே நிலவும்வரை பொதுத்தேர்தல் என்பதிலும் அர்த்தம் எதுவும் இல்லைத்தான். இதனாற்தான் இராணுவவாதத்தைக் களைதல் என்பது மிகவும் கடினமான காரியமாகவும் மாறியுள்ளது. சோஸலிச சனநாயக சக்திகள் தமிழர்களது உரிமைகளைப் பொறுத்தவரை ஒரு திட்டவட்டமான கொள்கை அடிப்படையிலான நிலைப்பாட்டை எடுப்பதன்மூலம் இந்த இராணுவ வாதத்தைக் களையும் நடவடிக்கைக்கு பெருந்துணை புரியமுடியும். இவர்கள் சிங்கள பெளத்த தத்துவார்த்தத்திற்கு எதிராக கோட்பாட்டு ரீதியிலும் அரசியல் ரீதியிலும் உறுதியான போராட்டத்தைக் கொண்டுநடத்தவேண்டும். இது சாத்தியமில்லையென்றாகிப்போனால் ஒவ்வொரு இனத்திற்குள்ளும் பின் இனங்களிற்கிடையேயும் ஆயுதமோதல்கள் தொடர்ந்து நீடிக்கவே செய்யும்.இத்தகைய கோட்பாட்டு ரீதியிலான அரசியற் போராட்டம் என்பது உடனடியாகச் செய்துமுடித்துவிடக்கூடிய காரியமில்லைத்தான்.சிங்கள பெளத்த மேலாதிக்கவாத சக்திகள் லேசில் விட்டுக்கொடுத்து இணங்கிப் போகக்கூடியன அல்லவாதலால் இந்தச் செயல்முறை சிறிது மெதுவாகவே நடைபெறமுடியும். இத்தகைய ஒரு போராட்டம் இல்லாமல் - சகல இன சமூகமும் சமத்துவமான அரசியல் உரிமைகளைக் கொண்டமைகின்ற ஒரு உண்மையான இலங்கைத்தேசியவாத தத்துவார்த்தம் ஒருநாளுமே சாத்தியமாகாது. ஆயுதக்குழுக்கள் ஆதிக்கம்வகிக்கும்வரை அந்நிலை இத்தகைய அரசியல்,ஜனநாயகப் பணிக்கு குந்தகமாகவே அமையும். ( இக்கட்டுரை லண்டனிலிருந்து வெளியான இன்குலாப் என்ற தென்னாசிய தோழமைக்கழகத்தின் காலாண்டு ஆங்கில சஞ்சிகையிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டது.)
நன்றி:: தூண்டில்,(நவம்பர் 1990)
தயபால திராணகம அவர்கள், யாழ்.பல்கலைக்கழகத்திலும் வித்தியாலங்கார பல்கலைக்கழகத்திலும் விரிவுரையாளராக கடமையாற்றியவரும் தீவிர மார்க்ஸியரும் ஆவார். அரசிற்கு எதிரான கிளர்ச்சியில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டின் கீழ் 4 ஆண்டு காலம் சிறைத்தண்டனை அனுபவித்த இவர் 1980 களின் பிற்பகுதியில் சிறீலங்கா அரசால் தேடப்பட்டு- தலைமறைவு வாழ்க்கையை மேற்கொள்ள நேர்ந்தது. ஜே.வி.பி யின் சிங்கள இனவாதத்திற்கெதிராக தீர்க்கமாக குரல்கொடுத்த இவர் ஜே.வி.பி யின் கொலைப்பட்டியலில் முதலாவது நபராக இடம்பெற்றிருந்தார்.Labels: Thiranagama
|
வார்ப்பும் இடுகையும்:நிச்சாமம் @ 9/29/2009 07:02:00 PM  |
|
|
|
|
|
Post a Comment