|
| பிரிந்துழலும் சமூகங்களைச் சட்டத்தால் இணைத்துவிடமுடியுமா? |
| Friday, December 16, 2011 |

பிரிந்துழலும் சமூகங்களைச் சட்டத்தால் இணைத்துவிடமுடியுமா?
விக்டர் ஐவன் மஹாகமசேகர (Mahagamasekera) நாட்டு மக்களின் அன்பையும் கௌரவத்தையும் பெற்ற கலைஞராவார். அவர் பல துறைகளில் பாண்டித்தியம் பெற்று விளங்கினார். அவரது படைப்புகள் அவர் வாழ்ந்த கலாசாரத்தைப் பிரதிபலிப்பவையாகவிருந்தன. சேகர தொடர்பாக எனக்கு நீண்ட காலமாக விளங்கிக் கொள்ள முடியாத புதிரொன்று இருந்தது. அது என்னவென்றால் அவரது ஊருக்குச் செல்லும் முச்சந்தியொன்றில் நிர்மாணிக்கப்பட்டிருந்த அவரது உருவச்சிலை பல சந்தர்ப்பங்களில் இனந்தெரியாத நபர்களால் தாக்கப்பட்டுச் சிதைக்கப்பட்டது ஏன் என்பது தான். நாட்டு மக்களால் பெரிதும் போற்றப்படும் அந்த கலைஞனின் சிலை அவரது ஊரிலேயே சிதைக்கப்பட்டது ஏன் என்பதைக் கண்டறிய நான் முற்பட்டேன். இது தொடர்பாக நான் பல கலைஞர்கள், பல்துறை விற்பன்னர்களிடமும் எமது பத்திகையின் ஆசியர் பீடத்திலுள்ளோரிடம் இது தொடர்பாக உரையாடினேன். இருந்தும் யாரிடமிருந்தும் இந்தப் புதிருக்கான விடை கிடைக்கவில்லை. பேராசியர் சரத் விஜேசூரிய நீண்ட காலத்துக்குப் பின்னர் சமீபத்தில் ஒரு நாள் அவரது புத்தக வெளியீடு தொடர்பான அழைப்பிதழை வழங்க ராவய அலுவலகத்துக்கு வந்தார். தனது புதிய நாவல் நான் ஆர்வம் காட்டும் விடயம் தொடர்பானதென்றும் பல்கலைக்கழகத்தில் நிலவும் ஜாதி பேதம் தொடர்பானதென்றும் அவர் தெரிவித்தார். சேகர தொடர்பான அவிழ்க்க முடியாத புதிர் தொடர்பாக நான் அவரிடம் வினவினேன். அவர் அதற்குக் காரணம் ஜாதி, பேதம் எனத் தெரிவித்தார். சிறிய வயதிலேயே தமது திறமையைச் சேகர வெளிக்காட்டிய போதும் அவருக்கு அதற்கான பாராட்டும் ஊக்குவிப்பும் கிடைக்கவில்லை. அதற்குக் காரணம் ஜாதிப் பிரச்சினையாகும் என பேராசியர் சரத் விஜேசூரிய தெரிவித்தார். அவரது பதில் என்னை வியப்புக்குள்ளாக்கியது. ஜாதிப் பிரச்சினை தொடர்பாக சைமன் கவ கத்தேகமவுடன் ஆழமாக கலந்துரையாடியுள்ளேன். ஜே.வி.பி.யின் இரண்டாவது புரட்சி இடம்பெற்ற காலத்தில் அவர் எமது அலுவலகத்துக்கும், ஊரடங்கு உத்தரவு காரணமாக அலுவலகம் இயங்காத நாட்களில் தான் தங்கியிருந்த அறைக்கும் வருவார். இந்த கால கட்டத்திலேயே அவர் ““சாபேக்ஷனி'' என்ற ஆக்கத்தை எழுதினார். இந்த நாட்களில் நாங்கள் பல விடயங்கள் தொடர்பாகப் பேசினோம். அரசியல் நிலை, அவரது வாழ்க்கை, அவரது படைப்புகள் என்பன குறித்தும் பேசினோம்.“சாபேக்ஷனி'' நூலை அவர் எழுதி முடித்துக் கையெழுத்துப் பிரதியை என்னிடம் கொடுத்து அதில் திருத்தங்கள் செய்ய வேண்டியிருந்த தால் செய்து தரும்படி கேட்டுக் கொண்டார். திருத்தங்கள் செய்து முடிந்ததும் வெளியீட்டாளரொருவரை ஏற்பாடு செய்து தரும்படியும் அவர் கோரிக்கை விடுத்தார். மிகச் சாதாரண மக்களை மட்டுமல்லாமல் மஹாகமசேகர, சைமன் கவகத்தேகம போன்ற நாட்டு மக்களின் கௌரவத்தைப் பெற்றவர்களும் கூட ஜாதி பேதத்தால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றனர் என்பதைச் சுட்டிக்காட்டவே இக் கட்டுரையை எழுதுகிறேன். இது போன்ற கலை,இலக்கியம் தமிழ் சமூகத்திலும் இருக்குமெனவே நான் நம்புகின்றேன். இது இனப்பிரச்சினை என இனங்காணப்படும் பிரச்சினைக்கும் பொருந்தும் என நான் நினைக்கின்றேன். இப் பிரச்சினையை இனப்பிரச்சினை என இனங்காண்பது பிழையல்ல. இருந்தும் அதற்கு வழங்கப்பட்டுள்ள விளக்கம் தவறானது. இந்த விளக்கத்தின்படி சிங்கள, தமிழ், முஸ்லிம் என்ற வகையில், இலங்கையின் பெரும்பான்மை மற்றும் சிறுபான்மை மக்களுக்கிடையே நிலவும் உட் பூசல்கள் மாத்திரமே இனங்காணப்பட்டுள்ளன. இதில் ஜாதி அல்லது மதங்களுக்கிடையே நிலவும் பூசல்கள் மட்டும் சம்பந்தப்படவில்லை. ஜாதி, வர்க்கம், மதம் ஆகிய மூன்று பிரச்சினைகளும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்ததாகுமென்பதே எனது கருத்தாகும். இனப்பிரச்சினையில் இப் பிரச்சினையும் சேர்க்கப்பட வேண்டும். இனப்பிரச்சினை தீர்வில் இவை அனைத்தும் சேர்க்கப்பட வேண்டும். பிரச்சினையின் ஒரு பக்கத்தை மாத்திரமே கருத்திற் கொண்டு பார்க்காமல் சகல பக்கங்களையும் பார்த்து காணப்படும் தீர்வே சாலச் சிறந்ததாகும். சிங்கள பெரும்பான்மை இனப்பற்றும் தமிழ், முஸ்லிம், பேர்கர் ஆகிய சிறுபான்மையினரின் பிரச்சினைகளுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட இனப் பிரச்சினை என்ற விளக்கம் இனங்களுக்கிடையிலான ஆய்வு நிலையம், மார்க்க நிறுவனம், சக ஆர்வலர்களின் சங்கம் ஆகியன முன்வைத்த கருத்துக்களின் படி கட்டியெழுப்பப்பட்டதாகவும் கட்சிகள் ஒன்றிணைத்து ஏற்படுத்திக் கொண்ட தமிழர் விடுதலைக் கூட்டணி 77 பொதுத் தேர்தலில் தமிழ் ஈழத்துக்கான ஆணையைக் கோரியமை, ஈழத்துக்காக ஆயுதப் போராட்டம் நடத்த பல அமைப்புகள் வடக்கில் உருவானமை, 1983 கருப்பு ஜூலை போன்ற சம்பவங்கள் இந்த பிரச்சினைக்குள் இனப் பிரச்சினைக்கு மாத்திரமே முக்கியத்துவத்தைப் பெற்றுக் கொடுத்தது. அதற்குள்ளிருக்கும் ஜாதி, மதம் ஆகிய பிரச்சினைகள் வெளிவராமல் போய்விட்டன. கருப்பு ஜூலையில் ஏற்பட்ட மோசமான சம்பவங்கள் காரணமாக பெருந்தொகையான தமிழ் மக்கள் ஐரோப்பிய நாடுகளில் தஞ்சமடைந்ததால் இப் பிரச்சினை சர்வதேச மட்டத்திலும் எதிரொலித்தது. இதனால் இன மோதல்கள் வெளிநாட்டுப் பணம் இந் நாட்டுக்குள் வருமளவுக்கு வளமான தொழிலாக மாறியது. இதனால் மற்றிரண்டு விடயங்களான ஜாதி, மதம் என்பன கவனத்தில் கொள்ளப்படாமல் சிங்கள தமிழ் மோதல் அல்லது இன மோதல் என விளக்கமளிக்கும் நிலைக்குள்ளானது. புத்திஜீவிகளை முழுதாகப் புறக்கணித்துள்ள முக்கிய பிரச்சினைகள் சில இருக்கின்றன. அவர்களுக்கு வடக்கில் பிரபாகரனின் கிளர்ச்சி தொடர்பாக ஒரு வரைவிலக்கணம் இருந்தது. இருந்தும் தெற்கில் விஜேவீரவின் கிளர்ச்சி தொடர்பாக எதுவித பொருத்தமான கருத்தும் இருக்கவில்லை. வடக்கில் தமிழ் ஆயுதப் போராட்டத்தை இனப் பிரச்சினையின் பிரதிபலன் என விவரித்த போதும் தெற்கில் சிங்கள ஆயுதப் போராட்டத்தின் பிரதிபலன் என்ன என்பதை கருத்திற் கொள்ளவில்லை. வடக்கில் தேர்தல் அரசியல் மட்டத்தில் வெள்ளாளர் ஜாதியே ஆதிக்கம் செலுத்தியது. இருந்தும் ஆயுதப் போராட்டத்தில் வெள்ளாளர் ஜாதி எதுவித பங்களிப்பும் செய்யவில்லை என்றே கூற வேண்டும். இது போன்ற நிலை ஏற்பட்டது. ஏன் என்பதைக் கூட அவர்கள் கருத்திற் கொள்ளவில்லை. விஜேவீரவைப் போலவே பிரபாகரனும் வெள்ளாளர் ஜாதியை சேர்ந்தவர்கள் அல்லர். பிரபாகரன் கரையார் என்ற ஜாதியையும் விஜேவீர காராவ என்ற ஜாதியையும் சேர்ந்தவர்களாவர். கரையார் என்பதும் கராவ என்பதும் மீனவர்களைக் குறிப்பதாகும். விஜேவீரவின் ஜே.வி.பியும் பிரபாகரனின் புலிகள் அமைப்பும் தங்களது செயற் குழுவில் ஐ.தே.க, ஸ்ரீ.ல.சு.க., தமிழ் காங்கிரஸ், பெடரல் கட்சி (தமிழரசுக் கட்சி) போன்றவை போலல்லாது குறைந்த ஜாதியினரை இணைத்துக் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. அத்துடன் ஜே.வி.பி. புலிகள் அமைப்பு இரண்டிலும் களப் போராளிகளாக குறைந்த ஜாதியினரே காணப்பட்டனர். பொன்னம்பலம், அருணாசலம் இலங்கை தேசிய காங்கிரஸிலிருந்து விலகியதும் தமிழ்த் தலைவர்கள் இரண்டாகப் பிரிந்து செயல்பட்டனர். 1920 மறு சீரமைப்பின் கீழ் நடைபெற்ற தேர்தலில் தேசிய காங்கிரஸின் சார்பில் கொழும்பு நகர் தொகுதிக்கு பொன்னம்பலம் அருணாச்சலம் நிறுத்தப்படுவார் என உறுதியளிக்கப்பட்ட போதும் வாக்குறுதி மீறப்பட்டு ஜேம்ஸ் பீரிஸ் இத் தொகுதிக்கு வேட்பு மனு தாக்கல் செய்ததால் பொன்னம்பலம் அருணாசலம் தேசிய காங்கிரஸை விட்டு விலகினார். இதிலும் இனம் பார்க்கப்படாவிட்டாலும் ஜாதி பார்க்கப்பட்டுள்ளதென்பதை ஆராயுமிடத்து கண்டு கொள்ளமுடியும். 19 ஆம் நூற்றாண்டின் பின்னர் 1925 வரை இனங்களுக்கிடையில் மோதல்கள் ஏற்பட்டதில்லை. ஆனால் ஜாதிகளுக்கிடையில் மோசமான மோதல்கள் ஏற்பட்டன. மதம் மொழியும் 1956 அரசியல் மாற்றத்தில் பெரும் பங்கு வகித்தன. 1956 தேர்தல் நடவடிக்கைகளில் ஜோன் கொத்தலாவல பௌத்த மதத்தை சார்ந்தவரல்ல என்பதும் அது மட்டுமின்றி முதல் பிரதமர் டி.எஸ். சேனநாயக்கவின் மனைவியின் மதம் கடுமையாக விமர்சிக்கப்பட்டன. டி.எஸ். சேனநாயக்கா வின் மனைவி கிறிஸ்தவ மதத்தைச் சார்ந்தவர். இலங்கை முகம் கொடுக்கும் இப் பிரச்சினையின் தன்மை குறித்து 1927 ஆம் ஆண்டு இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட மகாத்மா காந்தி தெளிவாக புரிந்து கொண்டிருந்தார் என்பது அவர் ஆற்றிய உரையிலிருந்து புரிந்து கொள்ளக் கூடியதாகவிருந்தது. யாழ்ப்பாணத்தில் இந்து தலைவர்கள் மத்தியில் அவர் ஆற்றிய உரையில் பௌத்த இந்து மதங்களின் தொடர்புகள் குறித்தும் புத்த பகவான் ஜாதி வேறுபாடுகளை எதிர்த்த விதம் குறித்தும் தமிழ் மக்கள் ஜாதி பேதங்களை மறந்து செயல்பட வேண்டிய அவசியம் குறித்தும் தெளிவுபடுத்தினார். பல இனங்கள் வாழும் நாட்டில், பெரும்பான்மையினருடன் சிறுபான்மையினர் சகவாழ்வு வாழ வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தினார். புத்த பகவான் இந்து மதத்தை மறுசீரமைக்கவெனத் தோன்றிய மறுசீரமைப்புவாதி எனவும் சுய ராஜ்ஜியத்தை பலாத்காரமாக பிடுங்கிக் கொள்ள முடியாது. அதேபோல் வெளியிலிருந்து அதை வெற்றி கொள்ள முடியாது. அதை உள்ளிருந்தே பெற்றுக் கொள்ள முயற்சிக்க வேண்டும். நேர்மை மற்றும் அஹிம்சை ஆகியன சுதந்திரப் போராட்டத்தை வெற்றி கொள்ள அத்தியாவசியமானதாகும். வெளிநாட்டு ஆட்சி நடை பெற்றால் அதை வெற்றி கொள்ள எடுக்கும் முயற்சிகளில் கிறிஸ்தவர், பௌத்தர், இந்துக்கள், இஸ்லாமியர் என்ற ரீதியில் பிரிந்து நின்று செயற்படாமல் அனைவரும் ஒரே குரலில் அகிம்சா வழியில் போராட வேண்டும் எனவும் மகாத்மா காந்தி மேலும் தெவித்தார். இலங்கையிலுள்ள பிரதான பிரச்சினை என்ன வென்றால் எமக்கு முன்னாலுள்ள சவால்கள் தொடர்பாக நாம் சரிவரப் புரிந்து கொள்ளாமையே மகாத்மா காந்தியின் இந்திய காங்கிரசுக்கு நாட்டை ஆக்கிரமித்தவர்கள் தொடர்பாக, சுதந்திரம் தொடர்பாக புதிய சோசலிசத்தை கட்டியெழுப்புவது தொடர்பாக மத பேதம், ஜாதி பேதம், வர்க்க பேதம் போன்ற முக்கிய விடயங்கள் குறித்தும் அவர்கள் எதிர்பார்க்கும் எதிர்கால இந்தியா குறித்தும் தெளிவான நிலைப்பாடு இருந்தது. வர்க்க ரீதியாக, ஜாதி ரீதியாக, மத ரீதியாக, மற்றும் பேசும் மொழி ரீதியாக பிளவுபட்டுள்ள இனத்தை சட்டத்தால் இணைக்கமுடியாது. அது மனதுடன் பேசும் விடயமாக இருக்க வேண்டும். நன்றி: வீரகேசரிLabels: விக்டர் ஐவன்
|
வார்ப்பும் இடுகையும்:நிச்சாமம் @ 12/16/2011 09:41:00 AM  |
|
|
|
|
|
Post a Comment