அமானுஷங்களுடன் வாழ்தல் (பகுதி 8)
-சுகன் "... ஆன காலையில் வந்து வந்து அடுசமர் ஆற்றி மான வேல் படைப் பண்ணவன் தூதனால் மற்றை ஏனையோர்களால் முத்திற வீரர்கள் இறந்தார் மீனமாய்க் கடல் புகுந்தனன் இரணியன் வெருவி. … ஏற்றது ஓர் சிலை இழந்தனை மானமும் இன்றித் தோற்று வந்தனை தொல் வரத்து இயற்கையும் தொலைந்தாய் சீற்றம் உற்றிலன் முருகவேள் அவன் சினம் செய்யின் ஆற்றுமோ வெலா அண்டமும் புவனங்கள் அனைத்தும். … அன்னது பலரும் கேளா அழகிது என்று எடுத்து மைந்தன் பொன் உடல் ஒரு சார் உய்த்துப் போற்றினர் போற்றலோடும் மன்னவன் வெகுண்டு நம்தம் மாற்றலர் தொகையை எல்லாம் என் இளையோனுக்கு ஊணா அளிப்பன் என்று எண்ணம் கொண்டான். …"
கந்த புராணம் - பானுகோபன் யுத்தப்படனம் பாடி முடிந்தது! உரையும் கூறி முடிந்தது!

நிறைவின் அறிகுறியாக...
„... பவளமால் வரையும் நிலவெறிப்பதுபோற் பரந்த நீற்றழகு பொற்சுடம்பின்...“
என்று குரலெடுத்துப் பாடிக்கொண்டிருந்த என்னிடம் கோளாவில் செய்கைக்காரர் பிரபாகரனைக் கூட்டிக்கொண்டு வந்திருந்தார்.
„ஏழுவருசத்துக்கு நீ உப்பிடியே அந்தரிச்சுக்கொண்டு திரியப்போறாய்; இப்ப நீ வந்திருக்கிறது என்ரை படிப்பைப் குழப்ப இல்லையோ?“
„ இல்லை அண்ணை, கோயில் விசயமா…, விக்கிரக வார்ப்புகளுக்கெண்டு இந்தியா போறதெண்டனீங்கள்!... ஒரு இடத்திலை கொள்ளையா நகையள் தாண்டிருக்குப்போலை! வந்து குறிப்புக் காட்டினீங்களெண்டா உதவியா இருக்கும். தங்கச்சியின்ரை பிள்ளையள் பட்டினியாக்கிடக்குது“ என்றான் பிரபாகரன். கொள்ளையாய் நகை புதைக்கப்பட்டிருக்கின்றது, அவற்றைப் பூதங்கள் காவல் காத்து நிற்கின்றன. அந்தப் பூதங்களின் கட்டைக் குலைத்து, அவற்றை ஓடப்பாய்ச்சிய பின்னரே புதையல் நகைகளை அள்ளலாம் என்பது பிரபாகரன் நினைப்பு. அத்தோடு இந்தியா சென்று விக்கிர வார்ப்புக்களையும் எடுத்துவர அவை நன்கு உதவும் என்று சொல்லாமல் சொல்கிறான் அவன்.
„இஞ்சை பார் :
…பசித்தார் பொழுதும் போம் போம், பாலோடு அன்னம் புசித்தார் பொழுதும் போம்! போம்!...
பிரபாவதியின்ரை கதை படிச்சுக்கொண்டு என்னிட்டை வராதை.
தங்கண்டை ஆற்றல் எல்லாம் முடிஞ்சவுடனை தெய்வங்களாலை வாழ ஏலாது, தங்களை அழிச்சுக்கொள்ள விரும்புவினம், அவயள அழிவிலிருந்து காப்பாத்துறதுதான் இப்ப வேலை.எல்லாத்தெய்வங்களும் பலமிழந்து போய்க்கிடக்கினம். இந்த நேரத்திலை உதுகளை அதை எடுக்கிறன், இதை எடுக்கிறன் எண்டு அவிழ்த்துவிடாதை. பிறகு எல்லாம் நாசமாப் போகும்“
மீண்டும் நிறைவின் பாடலைப் பாடத்தொடங்கினேன்:
„பவளமால்வரையும் நிலவெறிப்பதுபோற் பரந்த நீற்றழகு பொற்சுடம்பின் தவளமா களீற்றீன் நின்றாடிய பரமன் சிறுவனை…“Labels: அமானுஷங்களுடன் வாழ்தல்
|
Post a Comment