அமானுஷங்களுடன் வாழ்தல்- (பகுதி 9)சுகன் கோளாவில் செய்கைக்காரருக்குச் சொல்லுமாப்போலைதான் நான் பிரபாகரனுக்குச் சொன்னேன். அவரைத்தேடி எப்போதும் வீடு கொள்ளாத அளவு சனக்கூட்டம். வந்தவர்கள் அவர் பார்வையில் படுவதற்கே பலநாளாகி, அவர் வீட்டிலேயே மரணத் துடக்குகள் அதிகமானபோதுதான் அவரது செய்கைகளுக்காக அதிக அமானுஷங்கள் தேவைப்பட்டன. ஒரு அமானுஷத்தை ஒரு தேவைக்காக மட்டுமே பயன்படுத்தின் சிறப்பு. ஒரு பயனாளியின் தேவைக்கு பல அமானுஷங்கள் தேவைப்படலாம். அவரது தேவைக்கு இருக்கிற எல்லாவற்றையும் அவிழ்த்துவிட்டுக்கொண்டேயிருந்தார். சாதாரணமாகத் தன்பாட்டில் நடந்து போய்க்கொண்டிருப்பனவற்றை அவர் தலைகீழாக நடக்க வைத்துக்கொண்டிருந்தார். ஆயிரம் வருசமாக அமுங்கிப்போய் இருந்த பல அமானுஷங்களை எழுப்பி உருக்கொடுத்து ஒன்றுக்கெதிராக ஒன்றை ஏவி விட்டுக்கொண்டேயிருந்தார்.

கோளாவில் செய்கைக்காரர் சவச்சாம்பல்களைத்தேடி ஒவ்வொரு சுடலையாக அலைந்துகொண்டேயிருந்தார். அவரிடம் செய்கைக்கு முன்னர் வந்தவர்கள் அவரை இப்போது மயானத்திற் பார்த்தார்கள். அவரது வசியத்திற்கு அகப்படாது தப்பியோடிய அமானுஷங்களும் உண்டு. கொக்குவில் பொற்பதி விநாயகர் கோவிலில் பெருங்கதை படிக்கப்போன என்னிடம் அங்கொருவர் அவர் சுடுகாட்டுச்சித்தர் என குறிப்புரைத்தார். நான் வானத்தை மேல்நோக்கி கும்பிட்டேன்.
 கொத்தி(கொற்கை)த் துறைச் சுடலையில் தான் இறுதியாக அவரை எரியூட்டிக் காடாத்தினோம். அவர் இறக்கும்வரை பொறுமைகாத்த பொலிசாருக்கு நான் நன்றி கூறினேன். வடமராட்சியிலிருந்து தாயோடு வந்திருந்த பதினேழு வயதேயான ஓர் இளம் பெண்ணிற்கு கடைசியாக அவர் கருக்கலைப்புச் செய்திருக்கவேண்டும். பொலிசார் அவர் செய்கை வீட்டைக் கடுமையாகச் சோதனையிட வந்தபோது நான் அவர்களைத் தடுத்தேன். அதை இரகசியமாகச் செய்யும்படி நான் அவர்களை வலியுறுத்தினேன். அவர்களும் சம்மதித்தனர். எனது வேண்டுகோளின்பேரில் அவர் வீட்டு நிலங்கள் உழப்பட்டன. இளம் பெண்கள், குழந்தைகள் எனப் பல எலும்புக்கூடுகளைப் பொலிசார் மீட்டனர். கடைசியாக நவதானியம் விதைத்து அவர் வீட்டை நான் சாந்தி செய்து காவல் பண்ணினேன்.
அரிது அரிது மானிடராதல் அரிது.Labels: அமானுஷங்களுடன் வாழ்தல்
|
Post a Comment